இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள்

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மின்னல் எவ்வளவு வெப்பத்தை உண்டாக்கும் தெரியுமா? சுமார் 30,000 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 

சூரியனின் புறப்பரப்பு
சூரியனின் புறப்பரப்பு

 

இது சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலையைப் போன்று ஐந்து மடங்கு ஆகும்.

உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு 3 மில்லியன் தடவைகளுக்கும் அதிகமாக மின்னல் மின்னும் நிகழ்வு உண்டாகிறது. அதாவது ஒரு நொடிக்கு 44 முறை நிகழ்கிறது.

மின்னல் மின்னும் போது வெளியிடப்படும் சராசரி மின்ஆற்றலானது 100 வாட்ஸ் மின்விளக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து எரியத் தேவையான ஆற்றலைவிட அதிகமாகும்.

மின்னல் உண்டாகும்போது சராசரியாக 2-3 செமீ அகலத்தில் 2-3 மைல்கள் நீளத்தில் உண்டாகிறது.

மின்னலானது ஒளியின் வேகத்தில் பயணித்தாலும், அதனுடைய உண்மையான வேகம் மணிக்கு 2,70,000 மைல்கள் ஆகும்.

அதாவது மின்னலின் வேகத்தில் பயணித்தால் 55 நிமிடங்களில் புவியிலிருந்து நிலவினை அடையலாம்.

மின்னல் காட்டும் ஒரு மிகச்சிறிய காணொளி

மின்னல் ஏற்படும் இடங்கள்

மின்னல் பெரும்பாலும் கடலினைவிட நிலப் பகுதியிலேயே அதிகம் நிகழ்கின்றது. மின்னலில் 70 சதவீதம் வெப்ப மண்டலப் பகுதிகளில் நிகழ்கின்றது.

ஒவ்வொரு நொடிக்கும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மின்னல் மின்னுகிறது.

மின்னல் பொதுவாக 1-2 மைக்ரோ நொடிகளே நீடிக்கின்றது.

மின்னலானது எரிமலை வெடிப்பு, புழுதிப்புயல், பனிப்புயல், காட்டுத்தீ, சுழற்காற்று ஆகியவற்றின் போதும் நிகழும்.

வெனிசுலாவில் உள்ள மரகைபோ என்ற ஏரியே உலகில் அதிக மின்னல் நிகழ்வு ஏற்படும் இடமாகும்.

இங்கு ஓர் ஆண்டில் 140-160 நாட்கள் மழை மேகங்கள் உருவாகி மின்னலை ஏற்படுத்துகின்றன.

 

மரகைபோ ஏரி
மரகைபோ ஏரி

 

இங்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 28 முறை மின்னல் நிகழ்வு ஏற்பட்டு தொடர்ந்து பத்து மணி நேரம் வரை நீடிக்கும்.

இதனால் ஓர் இரவில் சுமார் 40,000 தடவைகள் மின்னல் இங்கு மின்னுகிறது.

மின்னலால் பாதிப்படைந்த இடங்கள் மீண்டும் மின்னல் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.

உகாண்டாவில் உள்ள டொரரோ என்ற இடமே அதிகளவு இடி உண்டாகும் இடமாகும். இங்கு ஆண்டில் 251 நாட்கள் இடி உண்டாகிறது.

 

எரிமலை மின்னல்

எரிமலை வெடிப்பு நிகழும்போது பொதுவாக மின்னல் உண்டாகிறது.

 

எரிமலை வெடிக்கும் போது ஏற்படும் மின்னல்
எரிமலை வெடிக்கும் போது ஏற்படும் மின்னல்

 

எரிமலை வெடிப்பு நிகழும் போது மண்ணும் புகையும் அதிகளவு வெளியிடப்படும். இவை ஒன்றுடன் ஒன்று மோதி நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளாக மாற்றம் அடைகின்றன.

மேகத்தில் உள்ள எதிர்மின் அயனிகள், புகைமண்டலத்தில் உள்ள நேர்மின் அயனிகளைக் கவருவதால் மின்னல் உண்டாகிறது.

 

உலர் மின்னல்

சில நேரங்களில் மின்னல் மின்னும்போது மழைபெய்யாமல் பாதிப்பினை மட்டும் உண்டாக்குகின்றது. இது உலர் மின்னல் என்று அழைக்கப்படுகிறது.

 

உலர் மின்னல்
உலர் மின்னல்

 

உலர்மின்னலால் காட்டுத் தீ அதிகமாக உண்டாகின்றது. இவ்வகை உலர் மின்னலால் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு மாகாணங்கள் பாதிப்படைகின்றன.

மின்னலின் தூரம்

இடி, மின்னல் உண்டாகும் போது மின்னலுக்கும் இடிக்கும் இடையான காலஅளவினை எண்ணி அதனை ஐந்தால் வகுத்தால் கிடைக்கும் விடையே மின்னலுக்கும் நமக்கும் உள்ள தொலைவு மைல்களில் ஆகும்.

காலஅளவினை மூன்றால் வகுத்தால் மின்னலுக்கும் நமக்கும் உள்ள தொலைவு கிமீ ஆகும்.

உதராணமாக மின்னலுக்கும் இடிக்குமான கால அளவு 30 நொடிகள் எனில் மின்னலுக்கும் நமக்கும் இடையே உள்ள தொலைவு 30/ 5 = 6 மைல்கள். 30/ 3 = 10 கிமீ ஆகும்.

 

மின்னல் பாதிப்பு

மின்னல் தாக்கத்திற்கு பாதிப்பான 10 நபர்களில் 9 பேர் காயங்களுடன் வாழ்கின்றனர்.

ஓர் ஆண்டில் சாராசரியர்க 2,000 பேர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழக்கின்றனர்.

மரங்கள் அடிக்கடி மின்னல் பாதிப்புக்கு உள்ளாகி அழிவினைச் சந்திக்கின்றன. மின்னலானது மரத்தினை தாக்கும்போது மரப்பட்டையின் கீழ்பகுதியில் பாதிப்பினை உண்டாக்கி நீர்ச்சத்தினை ஆவியாக்கி மரத்தினை கருகச் செய்கிறது. சிலசமயங்களில் மரத்தினை இரண்டாகப் பிளக்கவும் செய்கிறது.

மின்னலானது பாறையையோ, மண்ணையோ தாக்கும்போது அதிக வெப்பத்தின் காரணமாக ஆழமான குழாய் போன்ற வடிவத்தை நிலத்தின் மேற்பரப்பில் உண்டாக்கிவிடும். இவை மின்னல் புதைபடிவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியல் ஃபுல்மினாலஜி ஆகும்.

மின்னலால் உண்டாகும் பயம் பேரச்சம் அல்லது ஆஸ்ராஃபோபியா என்று அழைக்கப்படுகிறது.

இடியினால் உண்டாகும் பயத்திற்கு பரான்டோஃபியா என்பதாகும்.

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள் குறித்து அறிந்து கொண்டு முறையான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி வளமான வாழ்வு வாழ்வோம்.

–வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.