இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்

இந்தியப் பசுக்கள் என்பவை இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

பொதுவாக மாடுகள் நம்நாட்டில் அவற்றின் பால், வேளாண்மை, வண்டி இழுத்தல் போன்ற வேலைப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கறவை மாடுகள் அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

சில வகை மாடுகளின் பசுக்கள் நல்ல பால் வளத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் காளைகள் பயன் தராதவையாக உள்ளன.

வேறு சில வகை மாடுகளில் பசுக்கள் பால் வளம் அதிகம் கொண்டும், காளைகள் நல்ல உழைப்பு திறனுக்கு ஏற்றவையாகவும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

 

பால்வளம் மிக்கவை

இவ்வகை மாடுகளில் பசுக்கள் அதிக பால்வளத்தைக் கொண்டுள்ளன. கிர், சிவப்பு சிந்தி, சாஹிவால் போன்றவை அதிக பால்வளம் கொண்டவைகள் ஆகும்.

 

கிர்

இந்தியப் பசு ‍கிர்

இவ்வினம் குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியில் உள்ள கிர் காடுகளில் இருந்து உருவானது. இவ்வினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி, சூரத்தி எனவும் அழைப்படுகிறது.

இம்மாட்டின் தோல் வெள்ளை நிறத்துடன், அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறத் திட்டுக்களைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் கருப்பு அல்லது சிவப்பு முழுவதுமாகக் காணப்படும்.

கொம்புகள் வளைந்து அரை வட்ட நிலா போன்று இருக்கும். இவ்வின மாடு ஆண்டிற்கு 1200-1800 கிலோ பாலை உற்பத்தியைச் செய்கின்றன.தினமும் 4-6 கிலோ பாலைக் கொடுக்கின்றன.

 

சிவப்பு சிந்தி

இந்தியப் பசு சிவப்பு சிந்தி
இந்தியப் பசு சிவப்பு சிந்தி

 

இவ்வினம் ஒருங்கிணைந்த இந்தியாவில் சிந்து மற்றம் ஹைதராபாத் (தற்போதைய பாகிஸ்தான்) பகுதியைச் சார்ந்தவை. சிவப்பு நிறமுடையதால் சிவப்பு சிந்தி என்று அழைக்கப்படுகிறது. இது மாஹி, சிவப்பு கராச்சி என்று அழைக்கப்படுகிறது.

இவை வெளிர் சிவப்பு முதல் அடர் சிவப்பு வரை வெள்ளை நிறக்கோடுகளுடன் காணப்படும்.இவ்வினம் குறைவான உணவினை உட்கொண்டு அதிக பாலினைத் தருகிறது.

இது அதிகமான வெயில் மற்றும் அதிக மழை என எல்லா பருவநிலைகளையும் தாங்கக் கூடியது. இவை தினமும் 4-8 கிலோ பாலைத் தருகின்றன. இவை 14 ஆண்டுகளுக்குக் குறையாமல் பால் தரும்.

 

சாஹிவால்

இந்தியப் பசு சாஹிவால்
இந்தியப் பசு சாஹிவால்

இவ்வினம் தற்போது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோடிமரி மாவட்டத்தைச் சார்ந்தவை.

இவற்றின் தோல் சிவப்பு கலந்து பழுப்பு நிறம் அல்லது வெளிர் சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்.

இது லோலா, லம்பி பார், மான்டிகோடிமரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது.

இது அதிகளவு பால் உற்பத்தியைக் கொண்டுள்ளதோடு இந்தியாவின் பருவ நிலைக்கு ஏற்றதாகவும் உள்ளது.

இதன் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாக உள்ளது. இதன் கறவைக் காலம் 300 நாட்கள் ஆகும்.இவை தினமும் 8-9 கிலோ பாலைத் தருகின்றன.

 

 

பால் வளம் மற்றும் அதிக உழைப்பு திறன் உடையவை

இவ்வகை மாடுகளில் பசுக்கள் அதிக பால்வளத்தைக் கொண்டுள்ளன. காளைகள் அதிக உழைப்பு திறனும் கொண்டவைகளாக உள்ளன.

டியோனி, ஹரியானா, காங்ரெஜ், கிருஷ்ணா பள்ளத்தாக்கு, ஓங்கோல், தார்பார்வார், ராடி, மிவாடி போன்றவை அதிக பால்வளம் கொண்டவைகள் ஆகும்.

டியோனி

இந்தியப் பசு டியோனி
இந்தியப் பசு டியோனி

 

இவ்வினம் கர்நாடகத்தின் பிதர் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டம் ஆகியவற்றைச் சார்ந்தது.

இவ்வினம் டோங்கார் பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவரோ என பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இவ்வின மாடுகள் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

இவ்வினத்தில் பால் உற்பத்தி ஆண்டிற்கு 650-1250 கிலோவாக இருக்கும். இவ்வின மாடுகள் அதிக பாலினை உற்பத்தி செய்வதுடன் அதிக உழைப்புத் திறனையும் பெற்றவை.

 

ஹரியானா

இந்தியப் பசு ஹரியானா
இந்தியப் பசு ஹரியானா

 

இவ்வினம் ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த், குவார்கன் மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டவை.

இவை சாம்பல் நிறத்திட்டுக்களுடன் வெண்மையாக இருக்கும். இவற்றின் கொம்புகள் சிறியவை.

இவ்வின பசுக்கள் அதிக பால் தருபவையாகவும், காளைகள் அதிக உழைப்பு திறனும் கொண்டவை. கறவை காலத்தில் இவை 600-800 கிலோ பாலை உற்பத்தி செய்கின்றன. கறவை காலம் 300 நாட்கள் ஆகும்.

வட இந்தியாவில் இம்மாட்டையே வண்டியில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 

காங்ரெஜ்

இந்தியப் பசு காங்ரெஜ்
இந்தியப் பசு காங்ரெஜ்

 

இவ்வின மாடுகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா, ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை ஆகும்.

இவை வெள்ளை கலந்த சாம்பல் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் இருக்கும். இவை வாட்தாத், வேஜ்ட், வாட்தியார் எனவும் அழைக்கப்படுகின்றன.

பெரிய கொம்புகளையும் மேல்தோல் கொம்புகள் வரை பரவியும் காணப்படும். இவ்வின மாடுகள் தோளில் திமிலைக் கொண்டு வெப்பம் மற்றும் பூச்சி எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன.

இவை வேகமான அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. இவ்வினப் பசுக்கள் அதிக பாலினை உற்பத்தி செய்கின்றன.

இவை ஆண்டிற்கு 1360 கிலோ பாலினை உற்பத்தி செய்கின்றன.

 

கிருஷ்ணா பள்ளத்தாக்கு

இந்தியப் பசு கிருஷ்ணா பள்ளத்தாக்கு
இந்தியப் பசு கிருஷ்ணா பள்ளத்தாக்கு

 

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதியைச் சார்ந்தது.

பொதுவாக இவை சாம்பல் நிறத்தில் காணப்படும். இவற்றின் முன்னங்கால், பின்னங்கால் பகுதிகள் அடர் சாம்பல் நிறத்தைக் கொண்டவை.

வளர்ந்த பசுக்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருக்கும். இவை பெரிய உடலமைப்புடன் நல்ல தசைப்பிடிப்போடு தரையைத் தொடும் வாலினைக் கொண்டிருக்கும்.

இவ்வின காளைகள் நல்ல வேலைதிறன் கொண்டவையாகவும், பசுக்கள் பால் வளம் கொண்டவையாகவும் உள்ளன. இவ்வின மாடு ஆண்டிற்கு சராசரியாக 916 கிலோ பாலினை உற்பத்தி செய்கின்றது.

 

ஓங்கோல்

இந்தியப் பசு ஓங்கோல்
இந்தியப் பசு ஓங்கோல்

 

இவ்வினங்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவை. இவ்வினமானது பிரகாசம் மாவட்ட தலைநகரான ஓங்கோலின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

ஓங்கோல் முன்பு நெல்லூர் மாவட்டத்தில் இருந்ததால் இவை நெல்லூர் இனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இவ்வினங்கள் வாய் மற்றும் கால் காணை நோய், விசர் மாட்டு நோய் ஆகியவற்றை எதிர்க்கும் திறனைப் பெற்றுள்ளதால் இவை அதிகம் மக்களால் விரும்பப்படுகின்றன.

இவ்வின காளைகள் வலிமை மிக்கவையாகவும், பசுக்கள் அதிக பால் வளம் கொண்டவையாகவும் உள்ளன.

இவ்வினப் பசுக்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 1000 கிலோ பாலை உற்பத்தி செய்கின்றன.

 

தார்பார்கார்

இந்தியப் பசு தார்பார்கார்
இந்தியப் பசு தார்பார்கார்

 

இவ்வினங்கள் தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தைச் சார்ந்தவை. இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

இவ்வின மாடுகளின் தோல் வெள்ளை மற்றும் வெளிரிய சாம்பல் நிறத்துடன் காணப்படும். இவ்வின காளைகள் அதிக உழைப்பு திறன் வாய்ந்தவை.

பசுக்கள் பால்வளம் மிக்கவை. இவை ஆண்டிற்கு 1800-2000 கிலோ வரை பாலினை உற்பத்தி செய்கின்றன. இவ்வினம் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது.

 

ராடி

இந்தியப் பசு ராடி
இந்தியப் பசு ராடி

 

இவ்வினங்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவை. இவ்வினத்தில் இரு உட்பிரிவுகள் உள்ளன. அவை ராட்டி மற்றும் ராட் ஆகும்.

ராட்டி காளைகள் உழைப்பு திறனுக்காவும், ராட் பசுக்கள் பால் வளத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன.

ராட் வெள்ளை நிறத்தில் கருப்பு அல்லது சாம்பல் புள்ளிகளைக் கொண்டும், ராட்டி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.இவை ஆண்டிற்கு 1200 கிலோ பாலினை உற்பத்தி செய்கின்றன.

 

மிவாட்டி

இந்தியப் பசு மிவாட்டி
இந்தியப் பசு மிவாட்டி

 

இவ்வினங்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவை. அரியானா மாநிலத்தின் மியாட்டி பகுதியின் பெயரால் இவை வழங்கப்படுகின்றன. இவை கோசி என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை பெரும்பாலும் வெள்ளை நிறத்தை கொண்டிருக்கின்றன. அரிதாக பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவ்வினக் காளைகள் வலிமை மற்றும் பொறுமை மிக்கவையாகும். பசுக்கள் அதிக பால் வளம் கொண்டவை.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.