இந்தியாவின் சாபக்கேடுகள்

இந்தியாவின் சாபக்கேடுகள் இரண்டு. ஒன்று நமது பலவீனம்; மற்றொன்று பொறாமை.

உபநிட‌தங்களின் மகிமையைப் பற்றிப் பேசுகிறோம். மகரிஷிகளின் சந்ததிகள் நாம் என்று பெருமை பேசிக்கொள்கிறோம். ஆயினும் மற்றும் பல வெளிநாட்டாருடன் ஒப்பிடும் போது நாம் பெரிதும் பலவீனர்களாயுள்ளோம்.

உடல் பலவீனமே முதன்மையானது. குறைந்த பட்சம் நமது துன்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதுவே காரணமாகும். நமது இளைஞர்கள் முதலில் பலம் பெறவேண்டும். சமய வளர்ச்சி பின்னர் தானே ஏற்படும்.

என் வாலிப நண்பர்களே! நீங்கள் பலசாலிகளாகுங்கள், உங்களுக்கு என் புத்திமதி அதுவேயாகும். உங்களுக்கு, கீதையைவிட, விளையாட்டு சுவர்க்கத்துக்குச் சுருக்க வழியாகும்.

உங்கள் தசை நார்களும், புஜங்களும் இன்னும் சிறிது வலிவு பெறுங்கால் கீதையை இன்னும் நன்றாய் அறிந்து கொள்வீர்கள். உங்கள் நரம்புக் குழாய்களில் இன்னும் சிறிது வலிவுள்ள இரத்தம் ஓடும்போது கிருஷ்ண பரமாத்மாவின் மகத்தான ஞானத்தையும் மகத்தான பலத்தையும் இன்னும் நன்றாய் அறிந்து கொள்ளக்கூடும்.

உங்கள் முதுகு வளையாமல் உங்கள் கால்கள் தளர்வுறாமல் நீங்கள் நிமிர்ந்து நிற்கும் போது, “நாம் ஆண் மக்கள்” என்னும் உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும்போது, உபநிடதங்களின் நுட்பத்தையும் ஆன்மாவின் மகிமையையும் நன்குணர்ந்து கொள்வீர்கள்.

நான் வேண்டுவதென்ன? இரத்தத்தில் பலம், நரம்புகளில் வலிவு, இரும்புபோன்ற தசைநார்கள், எஃகையொத்த நரம்புகள் – இவையே நமக்கு வேண்டும். தளர்ச்சி தரும் கசிவுள்ள கொள்கைகள் நமக்குத் தேவையில்லை.

இந்தியாவில் தற்போதுள்ள பெரும் பாவம் நமது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்; கீழ்ப்படிவதற்கு எவரும் தயாராயில்லை. பண்டைக் காலத்து அதி ஆச்சரியமான பிரம்மசரிய முறை மறைந்ததே இந்நிலைமைக்கு காரணம்.

முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்; கட்டளையிடும் பதவி தானேவரும். முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு; எஜமானனாக நீ தகுதி பெறுவாய்.

எனக்கு மேலுள்ள நதியில் குதித்து முதலையைப் பிடிக்கும்படி கட்டளையிட்டால் முதலில் அதன்படி செய். பிழைத்து வந்தால் அவனுடன் வாதாடு. உத்தரவு தவறாயிருந்த போதிலும் முதலில் நிறைவேற்றிவிட்டுப் பின்னர் அதை மறுத்துக் கூறு.

 

பொறாமையை ஒழியுங்கள்; இன்னும் செய்ய வேண்டியிருக்கும் பெரிய வேலைகளையெல்லாம் செய்யும் ஆற்றல் பெறுவீர்கள். அடிமைகள் எல்லாருக்கும் பெரிய சனியனாயிருப்பது பொறாமையேயாகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.

நமது நாட்டாரில் ஒருவர் முன்னேறிப் பெருமையடைய முயன்றால் நாம் எல்லாரும் அவரைக் கீழே இழுக்க‌வே முயல்கிறோம். ஆனால் வெளிநாட்டான் ஒருவன் வந்து நம்மை உதைக்கும் போது பேசாமலிக்கிறோம்.

நாம் முதலில் ஆராதிக்க வேண்டிய தெய்வங்கள் நமது தேசமக்களே யாவர். ஒருவரிடம் ஒருவர் பொறாமை கொண்டு, ஒருவரோடொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக ஒருவரையொருவர் நாம் பூசிப்போமாக.

– விவேகானந்தர்