இந்திய பொதுத்துறை வங்கிகள்

இந்திய பொதுத்துறை வங்கிகள் இந்திய வங்கித்துறையில் கிட்டத்தட்ட 75% பங்களிப்பு செய்து வருகின்றன. அவை இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் நல்ல சேவையளித்து வருகின்றன.

தற்போது இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றில் 19 வங்கிகள் தேசிய வங்கிகளாகவும், 6 வங்கிகள் பாரத ஸ்டேட் மற்றும் அதன் குழுமங்கள், 2 வங்கிகள் மற்ற பொதுத்துறை வங்கிகளாகவும் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 93 வணிக வங்கிகள் உள்ளன.

 

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் குழுமங்கள்

பாரத ஸ்டேட் வங்கி

1806-ல் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கி இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுக் கணக்குகள் இவ்வங்கி மூலமே நடைபெறுகின்றன.

இவ்வங்கி கல்கத்தா வங்கி எனத் தொடங்கப்பட்டு இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்பாரத ஸ்டேட் வங்கியானது.

16000 கிளைகளுடன் இந்தியாவிலே அதிக கிளைகள் உள்ள வங்கியாக விளங்குகிறது. இவ்வங்கி பழமையானதாகவும் தொழில்நுட்பத்தில் எல்லோருக்கும் முன்னோடியாக விளங்கி புதுமையானதாகவும் உள்ளது. இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது.

 

ஐதராபாத் ஸ்டேட் வங்கி

இவ்வங்கி 08.08.1941-ல் அரசர் மிர் உஸ்மான் அலிக்கான் என்பவரால் ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1956 முதல் பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாக செயல்படுகிறது.

ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இவ்வங்கியின் கிளைகள் தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

 

திருவாங்கூர் ஸ்டேட் வங்கி

இவ்வங்கி 1945-ல் திருவனந்தபுரத்தில் நிறுவபப்பட்டது. இது கேரள மாநிலத்தினை தலைமையாகக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கின் குழுமத்தைச் சார்ந்தது. தற்போது இவ்வங்கிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 1013 கிளைகள் உள்ளன.

 

பாட்டியாலா ஸ்டேட் வங்கி

இவ்வங்கி 17.11.1917-ல் பாட்டியாலாவில் அதன் மன்னரான பூபிந்தர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது 1035 சேவை மையங்கள் மற்றும் 1236 கிளைகளுடன் பாரத ஸ்டேட் வங்கியின் குழுமத்தில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி வேளாண்மை மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டதாகும்.

 

பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி

இவ்வங்கி 1963-ல் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி தற்போது 1140 கிளைகளுடன் திலக்மார்க் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு பாரத ஸ்டேட் வங்கியின் குழுமத்தில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் கிளைகள் பெரும்பாலும் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளன.

 

மைசூர் ஸ்டேட் வங்கி

இவ்வங்கி சர்.விஸ்வேஸ்வரையா என்பவரால் 02.10.1913-ல் தொடங்கப்பட்டது. தற்போது இவ்வங்கி 976 கிளைகள் மற்றும் 9 விரிவுபடுத்தும் மையங்களைக் கொண்டு பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையிடம் பெங்களுரு ஆகும்.

 

தேசிய வங்கிகள்

பஞ்சாப் தேசிய வங்கி

இவ்வங்கி 19.05.1894–ல் லாலா லஜபதிராயால் புதுதில்லியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வங்கி 6300 கிளைகளுடன் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மொத்த சொத்துக்களின் அடிப்படையில் இவ்வங்கி இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக உள்ளது. இதன் தலைமையிடம் புதுடெல்லி ஆகும்.

 

பரோடா வங்கி

இவ்வங்கி 20.07.1908–ல் மாராட்டிய அரசர் மூன்றாம் சிவாஜிராவ் கெக்வாட் என்பவரால் குஜராத்திலுள்ள பரோடாவில் நிறுவப்பட்டது. இதற்கு லண்டன், நைரோபி, கம்பாலா, தாருஸ்ஸலாம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இவ்வங்கிக்கு தற்போது இந்தியாவில் மொத்தம் 5000 கிளைகள் உள்ளன. இதன் தலைமையிடம் பரோடா ஆகும்.

 

கனரா வங்கி

இவ்வங்கி 01.07.1906-ல் கனரா இந்து நிரந்தர நிதி என்ற பெயரில் சுப்பாராவ் பாய் என்பவரால் மங்களுரில் தொடங்கப்பட்டது. 1910-ல் கனரா வங்கி லிமிடட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1969-ல் தேசிய வங்கியாக அறிவிக்கப்பட்டது. தற்போது 5784 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கிக்கு லண்டன், ஹாங்ஹாங், மாஸ்கோ, தோகா, பஹ்ரைன், தென்னாப்பிரிக்கா, துபாய் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் பெங்களுரு ஆகும்.

 

பேங்க் ஆப் இந்தியா

இவ்வங்கி 07.09.1906-ல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வங்கி இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய வங்கியாகும். தற்போது இதற்கு 29 வெளிநாட்டு வங்கிக்கிளைகளுடன் மொத்தம் 3415 கிளைகள் உள்ளன.

மிகக் குறைந்த செலவில் நிதிச் செயல்பாடுகளையும் தொலைத்தொடர்பு வசதிகளையும் வழங்கும் உலகளவு வங்கியிடை நிதி தொலைதொடர்பு சமூகம் நிறுவியவர்களில் இந்த வங்கியும் ஒன்று. தற்போது இவ்வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

யூனியன் வங்கி

இவ்வங்கியானது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் பிரதிநித்துவ அலுவலகங்கள் அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகள், ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் செயல்படுகின்றன. ஹாங்காங்கில் இவ்வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது இவ்வங்கிக்கு 3500 கிளைகள் உள்ளன.

 

அலகாபாத் வங்கி

இவ்வங்கி 24.04.1865-ல் அலகாபாத்தில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி தற்போது 3071 கிளைகளுடன் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி மிகப்பழமை வாய்ந்த கூட்டுப்பங்கு நிறுவன வங்கியாகும். இவ்வங்கி கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

சிண்டிகேட் வங்கி

இவ்வங்கி 1925-ல் உடுப்பியில் கனரா இன்டஸ்டிரியல் மற்றும் சிண்டிகேட் என்ற பெயரில் டி.எம்.ஏ.பாய், உபேந்திரா பாய், வாமன் ஸ்ரீநிவாஸ் குத்வா ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 19.07.1969-ல் இந்திய அரசு இவ்வங்கியை தேசியமயமாக்கியது. இதன் தலைமையகம் மணிப்பால் ஆகும்.

 

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

இவ்வங்கி 24.06.1908-ல் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 1416 கிளைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 530 கிளைகள் பஞ்சாப்பில் உள்ளன. இதன் தலைமையிடம் கல்கத்தாவாகும்.

 

இந்திய ஐக்கிய வங்கி

இந்திய ஐக்கிய வங்கி அல்லது யுனைடட் பாங்க் ஆப் இந்தியா 1950-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இது இந்திய அரசுக்குச் சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியாகும்.

 

யூகோ வங்கி

இவ்வங்கி 06.01.1943–ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் யுனைடெட் கமர்சியல் வங்கி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. தற்போது இவ்வங்கி இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கியின் கிளைகள் ஆங்காங் மற்றும் சிங்கப்பூரிலும் செயல்படுகின்றன.இதன் தலைமையிடம் கல்கத்தா ஆகும்.

 

விஜயா வங்கி

இவ்வங்கி 23.10.1931-ல் அட்டாவர் பாலகிருஷ்ண செட்டி என்பவரால் மங்களுரில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் செயல்பட்டு வரும் நடுத்தர பொதுத்துறை வங்கியாகும். விஜய தசமி அன்று தொடங்கப்பட்டதால் இவ்வங்கி விஜயா வங்கி என்று அழைக்கப்படுகிறது.

இது கர்நாடகாவின் தக்சின கன்னடா மாவட்ட விவசாயிகளிடம் தொழில் தொடங்கும் முறையை ஊக்கப்படுத்துதல், சிக்கனம் மற்றும் வங்கிகளை பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இவ்வங்கி தொடங்கப்பட்டது. 15.04.1980-ல் இந்திய அரசால் இவ்வங்கி தேசியமயமாக்கப்பட்டது. இதன் தலைமையிடம் பெங்களுரு ஆகும்.

 

ஆந்திரா வங்கி

இவ்வங்கி 20.11.1923-ல் தொடங்கப்பட்டது. இவ்வங்கிக்கு தற்போது 1518 வங்கிக் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 68 இவ்வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் தலைமையகம் ஐதராபாத் ஆகும்.

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இவ்வங்கி 10.02.1937 சென்னையில் திரு.முத்தையா சிதம்பரம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் அந்நிய செலாவாணி நடவடிக்கைகளுக்காக காரைக்குடி, ரங்கூன் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன.

விரைவில் மலேசியா, சிங்கப்பூரிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. தற்போது இவ்வங்கி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

இந்தியன் வங்கி

இவ்வங்கி 15.08.1907-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று. இவ்வங்கிக்கு தற்போது 2537 கிளைகள் இந்தியாவிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்பாணத்திலும், சிங்கப்பூரிலும் கிளைகள் உள்ளன.

இதன் தலைமையகம் சென்னை ஆகும். 1969-ல் தேசிய வங்கியாக அறிவிக்கப்பட்டது.

 

ஓரியண்டல் வணிக வங்கி

இவ்வங்கி 19.02.1943-ல் லாகூரில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி 15.04.1980 தேசிய வங்கியாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் குர்கான், அரியானா ஆகும்.

 

கார்ப்பரேசன் வங்கி

இவ்வங்கி உடுப்பியில் 12.03.1906-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது பொதுப்பங்கு நிறுவன வகையைச் சார்ந்தது. இவ்வங்கியின் தலைமையகம் மங்களுரு ஆகும்.

 

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

இவ்வங்கி 21.12.1911-ல் தொடங்கப்பட்டது. இது ஒரு பொது நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள பழமையான மிகப் பெரிய தேசிய வங்கிகளில் ஒன்று. இவ்வங்கிக்கு தற்போது 27 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பகுதிகளில் மொத்தம் 4600 கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் மும்பை ஆகும்.

 

தேனா வங்கி

இவ்வங்கி 26.05.1938-ல் தொடங்கப்பட்டது. 1969-ல் தேசிய வங்கியாக அறிவிக்கப்பட்டது. தற்போது 1739 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையிடம் மும்பை ஆகும்.

 

 

மராட்டிய வங்கி

இவ்வங்கி 16.09.1935-ல் புனேயில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி 15 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்;ளது. 1868-க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது. இது பொதுப்பங்கு நிறுவனத்தைச் சார்ந்தது. இதன் தலைமையிடம் புனே ஆகும்.

 

மற்ற பொதுத்துறை வங்கிகள்

ஐடிபிஐ வங்கி (அ) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

இவ்வங்கி சூலை 1964-ல் இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட வங்கியாகும். இங்வங்கிக்கு தற்போது இந்தியாவில் 1515 கிளைகளும், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளையும் கொண்டுள்ளது. உலக அளவில் தொழில் மேம்பாட்டில் இவ்வங்கி 10-வது இடத்தில் உள்ளது. இதன் தலைமையகம் மும்பை ஆகும்.

 

பாரதிய மகிளா வங்கி

இவ்வங்கி 19.11.2013-ல் தொடங்கப்பட்டது. பெண்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கியில் யார் வேண்டுமனாலும் சேமிப்பு செய்யலாம். ஆனால் கடன் வசதி பெண்களுக்கு மட்டும் உண்டு. இதன் தலைமையிடம் புதுதில்லி ஆகும்.

 

Comments are closed.