இந்த புன்னகை என்ன விலை?

“ஏய் சித்ரா… இங்கே வா சீக்கிரம்” கணவனின் கத்தலைக் கேட்டு, போட்டது போட்டபடி கிடக்க சமையலறையிலிருந்து அவசர அவசரமாய் ஹாலுக்கு வந்தாள் சித்ரா.

“இவனைப் முதல்ல பிடி. கர்மம்… கர்மம் இதோட மூணு லுங்கி மாத்திட்டேன். சனியன், இவனுக்கு இதே வேலையாய்ப் போச்சு.”

தன் ஒரு வயது மகனை இரு கைகளால் மார்புக்கு நேராக அந்தரத்தில் தூக்கிப் பிடித்தபடியே முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

அவனது பனியன் பாதியும், லுங்கி பாதியும் நனைந்திருந்தது.

“இதுக்குத்தான் இப்படி கூப்பாடு போட்டீங்களா? என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன். குழந்தையைப் போய் சனியன், கர்மம்னு திட்டிக்கிட்டு… அவனுக்கு என்னங்க தெரியும்?”

சித்ராவைக் கண்டதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டு குழந்தை அவளிடம் தாவியது.

குழந்தையை இடுப்பில் எடுத்துக் கொண்டு அழுக்கடைந்த டவல் ஒன்றால் தரையைக் குனிந்து சுத்தம் செய்தாள் சித்ரா.

பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“இந்தாங்க, இன்னும் கால் மணி நேரம் பார்த்துக்குங்க. அடுப்பில் குக்கர் வச்சிருக்கேன். சாதம் ரெடியானதும் இறக்கி வச்சுட்டு வந்திடறேன்” குழந்தையை மீண்டும் பாஸ்கரிடம் நீட்டியவாறே கெஞ்சினாள் சித்ரா.

“என்னால முடியாதும்மா. ஆபீஸ்ல ஆடிட் நடக்குது. எனக்குச் சீக்கிரமாய்ப் போகணும்.”

“மணி எட்டு தானே ஆகுது. பத்து மணி ஆபீசுக்கு இப்படிப் பறக்கீங்களே?”

“வீட்டை விட்டு ஒன்பது மணிக்காவது கிளம்பினாத்தான் ஒன்பதரைக்காவது போய்ச் சேரலாம். இன்னும் குளிக்கணும். சாப்பிடணும். இவனோட அல்லாட நம்மால் முடியாதம்மா. இதுக்குதான் அப்போதே அடிச்சுக்கிட்டேன். கேட்டியா?”

“போதும் நிறுத்துங்க. விட்டால் ஒரேடியா சம்பந்தமில்லாம பேசுவீங்களே? நீங்க போய் உங்க வேலையப் பாருங்க. நான் எப்படியாவது சமாளிச்சுகிறேன்.”

குழந்தையுடன் சித்ரா உள்ளே போய் விட்டாள்.

அன்று இரவு, மணி பத்தடித்தது. பெட் மீது சாய்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தவாறு சித்ராவின் வருகைக்காக, அடிக்கடி பெட்ரூம் வாசலை நோக்கிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

சமையலறை வேலைகளை முடித்த பின், அழுது கொண்டிருந்த குழந்தையை ஹாலில் கட்டியிருந்த தூளியிலிருந்து எடுத்துக் கொண்டு, பால் புட்டியுடன் உள்ளே நுழைந்த சித்ராவைக் கண்டதும் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது பாஸ்கருக்கு.

சித்ராவைக் கண்டதும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“இந்தாங்க. குழந்தைக்குப் பாலைக் கொடுங்க. நான் டாய்லெட் போய்ட்டு வந்திடறேன்.” குழந்தையை வலுக்கட்டாயமாக அவனருகே உட்கார வைத்துவிட்டு பால்புட்டியையும் பாஸ்கர் கையில் திணித்துவிட்டு சென்றாள் சித்ரா.

சித்ரா சொன்னதுதான் தாமதம். பாஸ்கர் எழுந்து கொண்டு மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.

டாய்லெட்டிலிருந்து சித்ரா திரும்பி வந்ததும், வழக்கமான எரிச்சல் கலந்த பெட்ரூம் யுத்தம் ஆரம்பமானது.

“ஏய், நீ என்னதான் உன் மனசுல நினைச்சுக்கிட்டிருக்க. இங்ககூட, இந்த நேரத்துலகூட இவனைத் தூக்கிக்கிட்டு வரணுமா?”

“என்னங்க நீங்க? குழந்தையை ஹால்லேயா தனியா தூங்க வச்சிட்டு வரமுடியும்?”

“இவன் இருக்கிற வரைக்கும் நமக்கு சுதந்திரமே இருக்காது. சே…” அலுத்துக் கொண்டான் பாஸ்கர்.

சித்ரா பதறிவாறே அவன் வாயைப் பொத்தினாள்.

“எவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்றீங்க? தங்க விக்கிரம் போல அழகாய் ஒரே ஒரு குழந்தை நமக்கு. அப்படியெல்லாம் பேசாதீங்க.”

“கல்யாணம் செஞ்சுக்கிட்டுக் கொஞ்ச காலம் சுதந்திரமாய், ஆனந்தமாய் வாழ்க்கையை ஜாலியா அனுபவிக்கலாம்னு பார்த்தால். பீடையாய் குறுக்கே வந்து பிறந்து… பெரிய ரோதனையாய் போச்சு.”

பாஸ்கர் இவ்வாறு கூறியதும் சித்ராவின் கண்கள் கலங்கின.

“ஏங்க குழந்தையைக் கரிச்சு கொட்டறீங்க. உங்களைப் பார்த்துக்கச் சொல்றதுனால தானே இப்படியெல்லாம் பேசுறீங்க. இனிமே நானே அவனைக் கவனிச்சுக்கிறேன். அவ்வளவு தானே?”

“என்ன அவ்வளவு தான்? யார் இப்போ இவன் இங்க வந்து பிறக்கலேன்னு அழுதாங்க? எப்பப் பாரு இவனோடயே அல்லாட வேண்டியிருக்கு. முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா இந்த நேரத்துல நாம் எவ்வளவு மகிழ்ச்சியா இருந்திருக்கலாம்.”

“சே, எவ்வளவு கீழ்தரமான எண்ணம் உங்களுக்கு? ஒவ்வொருத்தர் குழந்தையில்லாம எப்படியெல்லாம் தவம் கிடக்கிறாங்க?. ஏங்கிக்கிட்டிருக்காங்க. நம் அன்புக்கு அடையாளச் சின்னமா கடவுள் தந்திருக்கிற பரிசைப் போய் நாக்கில் நரம்பில்லாம இப்படி பேசுறீங்களே?”

சித்ரா மனம் ஒடிந்து போனாள்.

பால் குடித்து வயிறு நிறைந்த திருப்தியில் கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு அவர்களுக்கிடையே அமர்ந்திருந்த குழந்தை அந்த இரவு வேளையிலும் தூங்காமல் ‘தக்கா… புக்கா…’ என சப்தம் எழுப்பிக் கொண்டு பாஸ்கரைப் பார்த்துச் சிரித்தது.

சித்ரா குழந்தையைத் தன்னருகே படுக்க வைத்து அணைத்தவாறே மெதுவாகத் தட்டி தூங்க வைக்க முயன்றாள்.

பாஸ்கர் ஆத்திரத்துடன் பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு வந்தான். ஈசி சேரை எடுத்துப் போட்டுக் கொண்டுச் சாய்ந்து புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. போன் ஒலித்தது.

“இந்த நேரத்தில் யாராயிருக்கும்?” ஆச்சரியமுற்றவனாய் போனை எடுத்தான்.

சித்ராவின் அண்ணன்.

“மாப்ளே, அப்பா ரொம்ப முடியாம இருக்கிறாரு. நீங்களும், சித்ராவும் ஒரு எட்டு வந்து பார்த்திட்டா நல்லாயிருக்கும்.”

“சரி, நாளைக்கு காலையில கிளம்பி வர்றோம்.”

சத்தம் கேட்டு வெளியே வந்த சித்ராவிடம் விவரத்தைக் கூறினான் பாஸ்கர்.

சித்ரா விசும்ப ஆரம்பித்தாள்.

“சரி, சரி இப்போ என்ன செய்ய முடியும்? விடிஞ்சதும் போவோம்.” எனக் கூறிய பாஸ்கர் ஹால் விளக்கை அணைத்துவிட்டு பெட்ரூம் சென்று படுக்கையில் சாய்ந்தான். சித்ராவும் பின் தொடர்ந்தாள்.

விடிந்தும் விடியாததுமாக பாஸுக்கு போன் மூலம் தகவல் சொல்லி லீவு வாங்கிக் கொண்டு அவசர அவசரமாய் வீட்டைப் பூட்டிவிட்டு பாஸ்கரும், சித்ராவும் சென்னையில் இருந்து கிளம்பினர். எட்டு மணி நேரப் பயணம். இப்போதே கிளம்பினால் தான் மாலை மூன்று மணிக்காவது போய்ச் சேர முடியும்.

காரில் பயணிக்கும்போது வேண்டா வெறுப்பாய் பாஸ்கர் தன் மகனைத் தூக்கி வைத்துக் கொள்வதும், வேடிக்கை காட்டுவதுமாய் பல்லைக் கடித்துக் கொண்டு சித்ராவை முறைத்துக் கொண்டும், எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டும் பயணித்தான்.

ஒருவழியாய் ஊருக்கு வந்து சித்ராவின் அப்பா வீட்டினை அடைந்தனர்.

சித்ராவின் அக்கா குடும்ப சகிதம் வந்திருந்ததால் வீடு அமர்க்களப்பட்டது.

சித்ராவின் தந்தையை வாசலருகே இருந்த தனி அறையில், படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள்.

சித்ராவும், பாஸ்கரும் உள்ளே நுழையும் போது, வாசுதேவன் – சித்ராவின் அண்ணன் படுக்கை விரிப்புகளை அகற்றி வேறு புதிதாக மாற்றிக் கொண்டிருந்தான். பழைய விரிப்புகள் அருகிலேயே தனியாக குவிக்கப்பட்டுக் கிடந்தன.

அறையினுள் நுழைந்த பாஸ்கர் மூக்கைப் பிடித்துக் கொண்டான். ஒரே வீச்சம். பாஸ்கருக்கு வாந்தி வரும் போல் இருந்தது. கர்ச்சீப்பால் மூக்கையும், வாயையும் பொத்தியவாறே வாசுதேவன் அருகே போய் நின்று கொண்டு அவன் செய்பவைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

சித்ராதான், தந்தை உடல் நலம் குறித்து அண்ணனிடம் எல்லாம் விசாரித்தாள். பாஸ்கர் எதுவும் கேட்கவில்லை.

தந்தைக்குப் படுக்கையை சரி செய்து, அவரை மெதுவாகப் பத்திரமாகப் பக்கவாட்டில் சரித்து முதுகுப் புண்ணுக்குப் பவுடர் தூவி, தந்தையின் வாயில் ஸ்பூனால் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினான்.

பின்னர் அறையைச் சுத்தம் பண்ணிய பின், பழைய அசுத்தமான விரிப்புகளை வெளியே எடுத்துக் கொண்டு வாசுதேவன் வெளியேற பாஸ்கரும் சித்ராவும் பின் தொடர்ந்தனர்.

“என்ன வாசு? இதெல்லாம் செய்ய ஆள் யாரையாவது வைத்துக் கொள்ளக் கூடாதா? எத்தனை நாளா அப்பா இப்படியிருக்கார்?”

“ஒரு வாரமாத்தான் மாப்ளே. இந்த நிலைக்கு ஆயிட்டார். எந்த நேரம் எப்படின்னு சொல்ல முடியாதுன்னுட்டார் டாக்டர். பாக்கிறவங்க வந்து பார்த்துட்டு போகட்டும். தகவல் தெரிவிச்சுடுங்கன்னு நேத்து சொல்லிட்டார். அதான் எல்லாருக்கும் போன் செஞ்சேன்.”

“ஒரு வாரமாவா இந்த வேலையெல்லாம் நீதான் செஞ்சுக்கிட்டிருக்கே? ஆபீசுக்கு லீவா அப்போ?”

“என்ன செய்றது மாப்ளே? அம்மாவாலேயும் முடியல. எதுவும் செய்ய முடியாது. பெரிய தங்கை குடும்பத்தோட இன்னிக்கு காலையிலதான் ஊரில இருந்து வந்தாங்க. நான்தானே எல்லாம் செய்யணும். அதான் ஆபீசுக்கு லீவு போட்டுட்டேன்.”

“ரொம்ப அழகுதான் போ. ஐநூறோ ஆயிரமோ கொடுத்தா ஆளா கிடைக்க மாட்டாங்க. மூத்திரம், மலம் எல்லாமே படுக்கையில் தான்னு சொல்ற. தினம் இதையெல்லாம் உன்னால எப்படித்தான் வாரிப் போட்டு சுத்தம் செய்ய முடியுதோ? ரூம்முக்குள்ளேயே நுழைய முடியலே. வாந்தி வரும் போல இருக்கு. இவ்வளவுத்தையும் செஞ்சுட்டு எப்படி உன்னால முகம் சுழிக்காம சாப்பிட முடியுது?”

“என்ன மாப்ளே இப்படி கேட்கறீங்க. இதுல அசிங்கப்படவோ முகஞ்சுளிக்கவோ என்ன இருக்கு? யாரு அவரு? என்னப் பெத்தவரு. நான் குழந்தையா இருக்குறப்போ அவர் மூஞ்சியிலேயே எத்தனை தடவை அசிங்கப்படுத்தியிருப்பேன். அவர் மடியை பாழ்படுத்தியிருப்பேன்.

அதையெல்லாம் எவ்வளவு பெருமையா நினைச்சிருப்பாரு? அதுவும் இல்லாம நான் தானே மூத்தவன். என்னோட கடமை தானே இது? நான் செய்யாம வேறு யாரு மாப்ளே செய்வாங்க.

தாய்-தந்தைக்கும், பிள்ளைக்கும் பாலமாயிருக்கிற நல்லுறவுக்குப் பெருமை சேர்கிறதே வயசு காலத்துல நாம அவங்களுக்குச் செய்யற சிகருசைகள் தான் மாப்ளே. நம்மோட பிறவியின் பயனே அது தான்.

குழந்தையாய் இருக்கிறப்ப பெத்தவங்க பாசம், நேசம், கருணைன்னு தங்களோட பிள்ளைங்களிடம் காட்டறாங்க பாருங்க. அதெல்லாம் ‘ஒரு பெரிய தொகை’ மாதிரி. பிள்ளைகள்-ங்கிற பேங்க்ல, அவர்களின் பிற்காலத்துக்காக டெபாசிட் செய்யற மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

அவையெல்லாம் நாளடைவில் வளர்ந்து, பெருகி வட்டியும் முதலுமாய் கடைசி காலத்துல அவங்களுக்கே அவங்க பிள்ளைங்க மூலமாகத் திருப்பிக் கிடைக்குது மாப்ளே. உங்களுக்கும், எனக்கும்கூட நாளைக்கு இதே கதிதான். அப்போது நமக்கு நம்ம பிள்ளைங்க செய்யணும்னா இப்போ நாம முகஞ்சுளிச்சா முடியுமா?”

வாசுதேவனின் நியாயமான பேச்சு பாஸ்கருக்கு சம்மட்டி அடியாய் வலித்தது. தன் ஒரு வயது மகனை, குழந்தையைப் பாரமாய் நினைத்த அவன் உள்ளுக்குள் வெட்கினான்.

உரிய வயதில் செலுத்த வேண்டிய அன்பு, பாசத்திற்குப் பதிலாய் மகன் மீது வெறுப்பைக் கொட்டிய தன் மீதே அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

தன்னைப் போன்ற ஈன புத்தியுடைய, ஈரமில்லாத ஜென்மங்கள் சற்று சிந்திக்க ஆரம்பித்து, அன்பு, பாசம், நேசம், கருணை பற்றியெல்லாம் புரிந்து கொள்ள ஆரம்பித்தால், நாட்டில் அனாதை இல்லங்களும், கருணை இல்லங்களும், அரசுத் தொட்டில்களும் தோன்ற வாய்ப்பே இல்லை என்பது தெள்ள தெளிவாய் புரிய ஆரம்பித்தது.

குழந்தையைக் கரித்துக் கொட்டிய போதெல்லாம் சித்ராவின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்பதை உணர ஆரம்பித்தான்.

அவனது சிந்தனையைக் கலைத்தவாறே சித்ரா அங்கு வந்தாள்.

“இந்தாங்க, பிடிங்க இவனை. நான் குளிச்சிட்டு வரேன்.” என்றவாறே குழந்தையைப் பாஸ்கரிடம் நீட்டினாள்.

பொக்கை வாய் தெரிய சிரித்தவாறே பாஸ்கரிடம் தாவிற்று குழந்தை.

விலை மதிக்க முடியாத அந்தப் புன்னகையில் முதன் முதலாக மெய் மறந்து குழந்தையை வாங்கித் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.