இன்ஸ்பயரிங் இளங்கோ – நேர்மறையான பதில்

சரித்திர சிறப்பு மிக்க அந்த கலை அறிவியல் கல்லூரியில் அன்று வித்தியாசமான பகடிவதை ஒன்று நடந்தது.

பகடிவதை என்றதும் பயந்து விடாதீர்கள். ‘ராக்கிங்‘ தான்.

அதாவது முதலாமாண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் ஒரு மாணவனை, மூன்றாம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் சீனியர் மாணவர் கூட்டம் வதை செய்யும் பொருட்டு அங்கே காத்திருந்தது.

ஏனென்றால் இந்த முதலாமாண்டு மாணவன் கிராமபுறத்தில் இருந்து வந்து கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அனைவரிடமும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவானாம்.

கல்லூரி ஆரம்பித்த இரண்டு மூன்று வாரத்துக்குள்ளாகவே அவன் ஒரு ஹீரோ போல பெயர் பெற்றுவிட்டான் என்ற அகந்தையுடன், மூன்றாம் ஆண்டு மாணவர் தலைவன் ராபர்ட் தனது நண்பர்களுடன் காத்திருந்தான்.

முதலாமாண்டு மாணவன் அவ்வழியே வந்ததும் ராபர்ட் அவனை அழைத்தான்.

ராபர்ட்டிடம் வந்த முதலாமாண்டு மாணவன் “Good Morning senior brother. How do you do?” எனக் கேட்டான்.

அதற்கு ராபர்ட் “டேய் நான் பொதுவா உன்ன மாதிரி பசங்கள எதுவும் செய்ய மாட்டேன். நீ ரொம்ப திமிராமே? ஏண்டா! நீ தமிழில் பேச மாட்டாயா? ஏன்டா” என்று கேட்டான்.

அதற்கு நம்ம ஹீரோ “I know English and I know that you are able to understand English. That is why I communicate to you in English.” என பவ்யமாகக் கூறினான்.

இந்த சம்பவம் நடப்பதைப் பார்த்து அங்கு நிறைய மாணவர்கள் கூடி விட்டார்கள்.

அந்த கூட்டத்தின் மத்தியில் ‘இவன் திமிராகப் பேசுகிறானே’ என்று ராபர்ட்டுக்கு கோபம் அதிகமாக அவன் வேற லெவலில் ராக்கிங் செய்ய ஆரம்பித்தான்.

“டேய் நீ பத்து மாதம் சுமந்து பெற்ற உங்க அம்மாவை பார்த்து இருக்கின்றாயா? உங்க அப்பாவைப் பார்த்திருக்கின்றாயா? நம்ம கல்லூரியையாவது பார்த்திருக்கின்றாயா? இவ்வளவு ஏன் உன் முகத்தை நீ பார்த்திருக்கின்றாயா?” என சத்தமாகக் கேட்டான்.

மாணவர் கூட்டம் அப்படியே நிசப்தமாகி விட்டது.

நம்ம ஹீரோவும் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தான்.

ஏனென்றால் அவனுக்கு பிறவியிலிருந்தே இரு கண்களும் தெரியாது.

சீனியர் மாணவர் அதோடு விடவில்லை.

“இதையெல்லாம் பார்த்து அனுபவிக்க முடியாத நீ ஆங்கில‌ இலக்கியம் படிச்சு என்னடா சாதிக்கப்போற? பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுடா” என்றான்.

அவ்வளவு நேரம் மௌனமாக நின்றிருந்த நம்ம ஹீரோ மெதுவாக, ஆனால் தீர்க்கமாகப் பேச ஆரம்பிச்சான்.

“Senior! Thank you Senior! நீங்க விரும்பின படியே நான் தமிழிலேயே சொல்லுகிறேன். நன்றி அண்ணா! முதல்ல உங்க கைய குடுங்க” என அவனது கரத்தை நீட்டினான்.

சுற்றி அனைவரும் பார்க்கின்றார்கள் என்ற நோக்கத்தில் வேண்டா வெறுப்புடன் அவனிடம் கையைக் கொடுத்தான் ராபர்ட்.

கையை இறுகப் பற்றிக் கொண்ட நம்ம ஹீரோ உரக்கப் பேசினான்

“நன்றி அண்ணா! நானே நீங்க சொன்ன மாதிரி இரண்டு மூன்று முறை கண்ணு தெரியாம இந்த உலகத்தில் வாழ்ந்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்று தற்கொலை செய்து கொள்ள நினைத்திருக்கின்றேன்.

ஆனா உங்களைச் சந்தித்த இந்த நிமிடத்துல இருந்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நான் வாழ்ந்து காட்டுகிறேன்.

உன்ன மாதிரி மிருகங்களே வெட்கமில்லாமல் இந்த உலகத்தில் நடமாடும் போது, நான் எதுக்குச் சாகணும்?”

ராபர்ட் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருக்க சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் கைதட்டி விசிலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராபர்ட்டின் நண்பர்களும் சேர்ந்துதான்.

ஒரே நாளில் காலேஜ் முழுவதும் பாப்புலரான நம்ம ஹீரோ வேற யாருமில்லை.

பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் Raymond shirting shooting விளம்பரங்களில் வரும் “Prince Jewellary பனகல் பார்க் சென்னை!” மற்றும் “Raymond the Complete Man” எனும் மந்திர குரலுக்குச் சொந்தக்காரர் ‘இன்ஸ்பயரிங் இளங்கோ‘ அவர்கள்தான்.

இன்று அவர் ஒரு வளர்ந்து வரும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

அவர் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் மென்திறன் மேம்பாட்டுக்கான முறையான பயிற்சிகள் வழங்கி, மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியாவூக்கியாக செயல்பட்டு வரும் சிறப்புத் திறனாளி.

இன்ஸ்பயரிங் இளங்கோ எழுதிய ‘ஜெயிப்பது நிஜம்‘ புத்தகம் வாசித்தேன்.

எனக்குக் கண்பார்வை (sight) இல்லை, ஆனால் உலகப் பார்வை (vision) இருக்கிறது‘ என்று தனது அனுபவங்களை கம்பீரமாக அறிவிக்கும் இன்ஸ்பயரிங் இளங்கோ அவர்களின் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரிகள்:

‘நமக்கு என்ன நடக்கிறதோ, அது வாழ்க்கையல்ல.

நமக்கு நடப்பவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே வாழ்க்கை!’

உண்மைதானே! ராபர்ட் இளங்கோ மீது கொட்டியது எதிர்மறை உணர்ச்சிகள். ஆனால் அதற்கு இளங்கோ கொடுத்தது நேர்மறையான பதில்.

நம் உள்ளம் உயர்வாக இருந்தால் தடைக்கல்லும் படிக்கல்லே என உணர்த்திய‌ இளங்கோ அவர்களே, உண்மையிலேயே நீங்கள் இன்ஸ்பயரிங் இளங்கோ தான்.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

One Reply to “இன்ஸ்பயரிங் இளங்கோ – நேர்மறையான பதில்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.