இயற்கைச் சூழல் – எப்படி இருக்கிறது? எப்படி இருந்தது?

இயற்கைச் சூழல் முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இக்காலத்தில் இயற்கைச் சூழலின் நிலையை நாம் அறிவோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இனி வருங்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.

காலத்தின் கோலம், போலி நாகரீக மோகம், பண்பாடு மற்றும் கலாசார சீரழிவுகளால் நம் பாரத நாட்டில் இயற்கை சூழல் கெட்டது. நாம் கெடுத்தோம்.

எப்படிப்பட்ட சூழலில் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை, நம் மொழியால், வளர்ந்த இலக்கியத்தால் அறியலாம்.

தொல்காப்பியத்தில் முதலில் காட்டையும், அதைச் சூழ்ந்த மலைகளையும், அதனிடை இருக்கும் வயல்களையும் வரிசையாகக் குறிப்பிடுகின்றார். பண்டை காலம் தொட்டு நம்முடைய முன்னோர்கள் சூழலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.

ஆறு, ஏரி, குளம், கசம், கண்மாய், மதகு, கால்வாய் அதைச் சார்ந்து நிலம். நிலத்தைச் சார்ந்து சாகுபடி, விளைவிக்க விவசாயி மற்றும் தொழிலாளி. இப்படி ஒரு சுழற்சியாக இருந்த நிலைமாறி விட்டது.

இயற்கைச் சூழல் எப்படி இருந்தால் நமக்கென்ன?

நாம் வேறு; நாடு வேறு என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.

இயற்கையை சார்ந்து இருந்த காலத்தில் இயற்கை நமக்கு சாதகமாக இருந்தது. இயற்கையை சிறுக, சிறுக புறக்கணித்ததால் இயற்கை நம்மீது சீற்றம் கொண்டது.

‘காலத்தே பயிர் செய்’ என்ற நிலையை மாற்றி, எப்போது வேண்டுமானாலும் பயிர் செய்யலாம் என்ற நிலை வந்து சூழலை சீர்குலைத்து விட்டது.

‘காலத்தின் பயிர் கரம்பில்’ என்று சொன்னார்கள். சரியாக உழவு செய்யமல் இருந்தாலும் காலத்தில் பயிரிட்டால் செழிக்கும்.

காரணம் காலம் தவிர்த்து பயிரிட்டால் பூச்சித் தொல்லை இருக்கும். அதனால் பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிப்பார்கள். அதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடும்; காற்று மாசுபடும்.

‘பசுமை புரட்சி’ என்ற பெயரில் அளவற்ற இரசாயனங்களைப் புகுத்தி மண்ணின் சூழலைக் கெடுத்தோம். இயற்கை உரத்தை மறந்தோம்.

நான் பள்ளிப்பருவத்தில் சாப்பிட்டுவிட்டு ஏரித்தண்ணீர்தான் குடித்து வந்தேன். இன்றைக்கு ஏரியில் கால் வைக்கக்கூட கூசுகின்றது. இச்சூழலை நாம்தானே கெடுத்தோம்.

அன்றைக்கு வயலுக்கு கஞ்சிக் கலயம்தான் கொண்டு செல்வார்கள். ஆனால் இன்று தண்ணீரும் கொண்டு செல்ல வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் குடித்து வந்த காலம் போய்விட்டது. காரணம் நாம் சூழலைக் கெடுத்ததே.

வயலில் வேலை செய்யும்போது, மாட்டு குளம்பு சேற்றில் பதிந்த குழி போன்ற இடத்தில் தெளிந்திருக்கும் நீரை, கைபடாமல் வாய் வைத்து குடித்துள்ளோம். இன்றைய நிலை எண்ணிப் பார்த்தால் நாம் நாணம் கொள்ள வேண்டும்.

மரங்களை அழித்தோம்; மழை குறைந்தது. மாடுகளை இழந்தோம்; இயற்கை உரம் இழந்தோம். ஏரிகளை மறந்தோம்; ஆழ்துளை அமைத்தோம். குளங்களை குறுக்கினோம்; நிலத்தடி நீர் ஊறுவதைத் தடுத்தோம்.

பாசனத்திற்கு மின் மோட்டாரை நம்பினோம்; மின்தேவை அதிகரித்தது. நிலக்கரி எரித்து மின்சாரம் பெற்றோம்; அதனால் உண்டாகும் காற்று மாசு, சாம்பலால் மாசு என்று சுற்றுச் சூழலைக் கெடுத்தோம்.

இன்றைக்கு அணு மின்சாரம் பெறுகின்றோம். அக்கழிவுகளால் ஏற்படும் மாசு நம் சந்ததிக்கு நாசம் விளைவிக்கும். ஆற்றை அழித்தோம்; சிலகாலத்தில் இருந்த ஆற்றை எங்கெனத் தேடும் நிலைக்கு வருவோம்.

நகர வாழ்க்கையை நம்பி நரக வாழ்விற்கு சென்றோம். கட்டுப்பாடற்ற செயலால் நகரத்தை நாசமாக்கினோம்.

ஒருகாலத்தில் மின்விசிறி இருப்பதே அபூர்வமாக இருந்தது. இன்று ப்ரிட்ஜ், ஏ.சி. இல்லா வீடு இல்லை எனலாம். இதனால் வெப்ப வெளியீடு அதிகமாகின்றது. இவற்றினால் புவி வெப்பமயமாகின்றது. தெரியும். தவிர்க்க முடியுமா.?

மேலை நாகரீகத்தால் ‘அறிவிற்குக் கல்வி’ என்ற நிலைமாறி ‘பொருளுக்குக் கல்வி’ என்ற நிலையில் கல்விச் சூழலைக் கெடுத்தோம்.

பண்டைய இயற்கைச் சூழல் பற்றி நம் இலக்கியங்கள் வாயிலாகச் சிலவற்றைப் பார்ப்போம்.

நகரமைப்பு

கடும் காற்றினால் மோதப்பட்டு கடல் பொங்கி வந்தாலும் அழிவு ஏற்படாத வண்ணம் மேட்டுப்பாங்கான சூழலில் அமைய வேண்டுமென கோசல நாட்டின் வளத்தை கம்பர் விவரிக்கின்றார்.

வீடு சேர நீர் வேலை காண்மடுத்து

ஊடு பெறினும் உலைவு இலா நலம்

கூடு கோசல மென்னும் கோதிலா

நாடு கூறினாம் நகரம் கூறுவோம்

– கம்பர்

வீட்டின் அமைப்பு

செழித்திருக்கும் சிற்றூர்; குடியிருக்கும் வீடு; பின்னால் பூக்கள் நிறைந்த தடாகம். அதை ஆண்டாள் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள்! 

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

– ஆண்டாள்

முற்றத்தில் மாதவிப் பந்தல் அதில் குயிலினங்கள் கூவுகின்றன, பொழுது விடிந்ததன் அடையாளமாக கோழிகள் கூவி அழைக்கின்றன. பொழுது போக பந்தாட்டமாட மைதானம் இருக்கின்றது.

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

– ஆண்டாள்

ஆக வீடு எப்படி அமையவேண்டும் சுற்றுபக்க சூழல் எப்படி இருக்க வேண்டும் எனத் திருப்பாவையின் மூலமாக உணரலாம்.

பல்லுயிர் இயற்கைச் சூழல்

மயிலாடும் சோலை; விளக்கு போல் தோன்றும் தாமரை நிறைந்த குளம்; யாழிசைப்போல் இனிது பாடும் வண்டுகள் நிறைந்த சோலை; குவளை (அல்லி) மலர்கள் மலர்ந்துள்ள தடாகம், என மருதநிலச் சூழலைக் காட்டுகின்றார் கம்பர்.

தண்டலை மயில்களாடத்

தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கண் முழவினேங்கக்

குவளை கண்விழித்து நோக்கத்

தெண்டிரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட மருதம்

வீற்றிருக்கும் மாதோ!

– கம்பர்

நீர் நிலைகளில் சங்குகள் உறங்குகின்றன. மரங்களின் நிழலில் எருமைகள் உறங்குகின்றன. பூக்களில் தேனுண்ட வண்டுகள் உறங்குகின்றன. திருமகள் வீற்றிருக்கும் தாமரைகள் மலர்ந்துள்ளன.

அறுவடை செய்துவிட்டு போட்டிருக்கும் வைக்கோல் போரில் ம‌யில்கள் பொந்து செய்து கொண்டு உறங்குகின்றன. சுற்றியுள்ள சோலையில் அன்னப்பறவைகள் உறங்குகின்றன.

நீர் நிலைகளில் உள்ள சேற்றில் ஆமைகள் உறங்குகின்றன. வளைகளில் சிப்பியுடைய நத்தைகள் உறங்குகின்றன என்று எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யா மக்கள் இருந்ததையும், விலங்குகள் அச்சமின்றி இருந்ததையும் காட்டுகின்றார்.

நீரிடை உறங்கும் சங்கம்

நிழலிடை உறங்கும் மேதி

தாரிடை உறங்கும் வண்டு

தாமரை உறங்கும் செய்யாள்

தூரிடை உறங்கும் ஆமை

துறையிடம் உறங்கும் இப்பி

போரிடை உறங்கும் அன்னம்

பொழிலிடை உறங்கும் தோகை

– கம்பர்

இந்தவகையில் சிறந்த சூழலில் அமைந்த மருத நிலத்தின் சிறந்த சூழலைப் பார்த்தோம்.

தேவலோகம் போன்ற ஊர்

மேகங்கள் பசுமையான மணம் வீசும் சோலைகளோடு ஒத்துள்ளன. பொன்மயமான மேருமலை வைக்கோல் போர்களோடு ஒத்துள்ளது. கடலானது அங்குள்ள கரைகளைக் கொண்ட நீர்நிலைகளை ஒத்துள்ளது. இச்சிறப்புகளால் அந்த ஊர் தேவலோகம் போன்றுள்ளது.

காரொடு நிகர்வன கடி பொழில் கழுனிப்

போரொடு நிகர்வன பொலன்வரை அணைசூழ்

நீரோடு நிகர்வன நிறைகடல் நிதி சால்

ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்’

– கம்பர்

தொடுத்த மாலைகள் தேனைச் சொரிகின்றன. வழியெங்கும் பொன்னும் மணியும் சிதறிக் கிடக்கின்றன. வீசும் காற்று துய்மையான அமுதம் போன்றுள்ளது. செவிக்கினிய சுவையை, பாடும் பாடல்கள் கொடுக்கின்றன.

கோதைகள் சொரிவன குளிரிள நறவம்

பாதைகள் சொரிவன பருமணி கனகம்

ஊதைகள் சொரிவன உயிருறு அமுதம்

காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்

– கம்பர்

பண்ணைச் சூழல்

அருகில் இருக்கும் பண்ணைகளில் மீனையொத்த கண்களையுடைய மங்கையர் கண்டு நடை பயிலும் வண்ணம், சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகள் அழகென நடக்கின்றன.

கன்றுகளை நினைத்து தானாக பால் சொரிகின்ற எருமைகள், சொரிகின்ற பால் உண்டு, உறங்க பச்சை தவளைகள் தாலாட்டு பாடுகின்ற செழுமை வாய்ந்த பண்ணைகள்.

சேலுண்ட ஒண் கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம்

மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை

காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பாலுண்டு துயிலைப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை

– கம்பர்

உணவு தானிய வகைகள்

எள், தினை, சாமை, சோளம், கொள்ளு முதலிய விளை பொருட்கள் மற்றும் உப்பளங்களில் விளையும் உப்பையும் காட்டுகின்றார். இச்சூழலை எண்ணிப் பெருமை கொள்வோம்.

எள்ளும் ஏனலும் இறங்குஉம் சாமையும்

கொள்ளும் கொள்ளையிற் கொணரும் பண்டியும்

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்

தள்ளு நீர்மையில் தலை மயங்குமே’

– கம்பர்

தேன் கூடுகளில் இருந்து தேன் பெருக்கெடுத்துவர, மலைவாழ் மக்கள் அதனை மாற்றி ஆகாசகங்கை நீரை தன்னுடைய ஐந்து வகை மலர் பயிர்களுக்கு பாய்ச்சுவார்கள்.

.இம் மலை வளச் சூழலின் அழகு இரம்மியமானது. நீர்வளமும் சுற்றுச்சூழலின் தூய்மை பேணுதலையும் கம்பர் சிறப்புற கூறுகின்றார்.

மீனெனும் பிடிகளோடும் விளங்குவெண் மதிநல் வேழம்

கூனல் வான் கோடு நீட்டிக் குத்திடக் குமுறிப் பாயும்

தேனுகு மடையை மாற்றிச் செந்தினைக் குறவர் முந்தி

வான நிராறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ

– கம்பர்

பெரும் ஓசை அடங்கும் சூழல் (ஒலி மாசு)

சங்கினால் ஊதப்படுகின்ற சத்தமும், தடியினால் பறையை அடிக்கும் ஓசையும், மத்தளத்தின் ஓசையும் உழவர்கள் தம் வயலிலில் மாடுகளைக் கொண்டு உழும்போது மாட்டை அதட்டும் குரலைவிட குறைவாகவே இருக்கும். இதனால் நாம் உணர்வது வீணான இறைச்சல் இல்லாச் சூழலைச் சொல்கிறார் கம்பர்.

மூக்கில் தாக்குறும் மூரி நந்துநேர்

தாக்கிற் தாக்கறும் பறையும் தண்ணுமை

வீக்கிலற் தாக்குறும் விளியும் மள்ளர் தம்

வாக்கிற் தாக்குறு ஒலியின் மாயுமே.’

– கம்பர்

சோலைகளின் வளம்

சோலைகளில் மணம் வீசுகின்ற அகில் மரங்கள், சந்தன மரங்கள், பலா மரங்கள், தேமா மரங்கள், சண்பக மரங்கள், பரிமளமுடைய பச்சிலை மரங்கள் ஆகியன பல திசைகளிலும் அசைந்து விளங்குகின்றன.

மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் பாடுகின்றன. நகரத்தைச் சுற்றி எப்படி சோலைகள் இருந்தன என்பதை பார்க்கின்றோம். இப்படி இருந்தால்தான் சுற்றுச் சூழல் நன்றாக இருக்கும் என்கிறார் வில்லி புத்தூரார்.

வம்புலாம் அகில் சந்தனம் வருக்கைமா கந்தம்

சம்பகம் தமாலம் பல திசைகள் தோறும் தயங்க

உம்பர் நாயகன் வரவு கண்டு உளங்களி கூர்ந்து

தும்பி பாடின தோகை நின்றாடின சோலை’

– வில்லி புத்தூரார்

மொத்தத்தில் நகரம் சுத்தம், சுகாதாரம், நல்ல ஆளுகைக்கு உட்பட்டு இருந்தால், எல்லா ஊரும் சொர்க்கமாகத் திகழும். இதையே கம்பர் குறிப்பிடுவதைப் பார்ப்போம். முன்னர் குடி இருப்போருக்கு உகந்ததாக சூழல் எப்படி இருந்துள்ளது என்பதை அறியலாம்.

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அருமறைப் பொருளோ

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவ அறத்தொடும் வளர்ந்தார்

எண்ணரும் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்வேழுலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறொரு போக உறைவிடம் உண்டென உரைத்தல்

– கம்பர்

நம் முன்னோர்களின் இயற்கைச் சூழல் எப்படி இருந்திருக்கின்றது என்பதைப் பார்த்தோம்.

இன்று நாம் கான்கிரீட் காட்டில் அசுரத்தனமாய் அலையும் திக்கற்ற விலங்குகளாய் வாழ்கிறோம்.

நமது அலட்சியத்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் கூடும் என்பதை நாம் உணர வேண்டும். பல நகரங்கள் கடலுக்கடியில் செல்ல நேரிடலாம்.

எனவே நமது வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இன்றைய இயற்கைச் சூழல் எப்படி மாற வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

எல்லா வளமும் பெற்று, இயற்கையை போற்றி, நன்னெறி காத்து, சூழலை இனிதாக்கி, நாடும் நகரமும் இனிதே இனிது சிறக்க இறைவனை இறைஞ்சுவோம்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

2 Replies to “இயற்கைச் சூழல் – எப்படி இருக்கிறது? எப்படி இருந்தது?”

  1. ஒவ்வொரு தனி மனிதனும் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு, அடுத்து வரும் தலைமுறையினருக்கு இயற்கையினைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் எனும் எண்ணத்தினை செயல் வடிவம் மூலம் ஈடேற்றி உணர வைக்க வேண்டும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.