இருமனம் திருமணம் – சிறுகதை

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

“இந்த ஆஸ்பிடல் நல்ல தரமானது தானே?”

“பலபேரிடம் விசாரித்துதான் உன்னை இங்கே கூட்டி வந்தேன். 15, 20 வருடமா குழந்தை பாக்கியம் இல்லாதவங்ககூட இந்த ஆஸ்பிடல் வந்து சக்ஸஸ் ஆயிருக்காங்க. தைரியமா இரு.”

பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் சட்டைப் பையிலிருந்த செல்பேசி அழைத்தது. எடுத்து யார் எனப் பார்த்தான்.

“யாருங்க?”

“என் மேனேஜர்தான்.”

“சரி போய் பேசிட்டு வாங்க.”

“டாக்டர் இப்ப உள்ள கூப்பிடுவாரே!”

“அதுக்குள்ள நீங்க பேசிட்டு வந்திருங்க. டாக்டர் கூப்பிட்டா நான் பாத்துக்குறேன்.”

தலையசைத்து விட்டு செல்போனை காதில் பொருத்திச் சென்றான்.

அவன் நகர்ந்த அடுத்த நொடியே நர்ஸ் எதிர்ப்பட்டாள்.

“மேடம் உங்கள டாக்டர் உள்ள வரச் சொன்னார்.”

கீதா எழுந்தாள். குமார் வருகிறானா? எனப் பார்த்தாள்..அவன் கண்களுக்கு தென்படவில்லை.

வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.

“உட்கார்ங்கம்மா” டாக்டர் எதிரே இருக்கையை காட்டினா ர்.

பதைபதைத்த மனதுடன் மௌனமாக அமர்ந்தாள் கீதா.

“உங்க ரிப்போர்ட் ரெடியாயிடுச்சி. உங்க ஹஸ்பெண்ட் எங்கே?”

“அவர் இப்ப வந்திடுவார் டாக்டர்.எங்கிட்டயே சொல்லுங்க..”

“எடுத்த ரிசல்ட்படி உங்களுக்கு எந்த குறையும் இல்ல.100% நீங்க தாயாகலாம். ஆனா உங்க கணவர்கிட்ட குறை இருக்கு. அதுவும் சரிப்படுத்த முடியாத குறையா இருப்பதுதான் வருத்தமாயிருக்கு.”

டாக்டர் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள்.
‘கடவுளே என்ன இது சோதனை. என் அன்பான குமாருக்கா இந்த நிலை. கல்யாணமான இந்த 5 ஆண்டில் என்னை எப்படி எல்லாம் தாங்கினார்.

ஒரு சின்ன சொல்கூட என்னிடம் அதிர்ந்து பேசியது இல்லையே. குழந்தை என்றால் கொள்ளை ஆசை கொண்ட அவரிடம் எப்படி இதைச் சொல்வேன்.’

மனதிற்குள் பலவாறாக அரற்றியவள் தீர்மானமாக ஒரு முடிவிற்கு வந்தவளாக முகத்தை அழுந்தத் துடைத்தாள்.
டாக்டரை நோக்கினாள்.

“சார் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.”

“என்னம்மா?” அவளைப் பரிவுடன் கேட்டார்.

“குறை என் கணவர்க்குன்னு தெரிஞ்சா அவர் இத சத்தியமா தாங்க மாட்டார். அப்படியே உடைஞ்சிடுவார். அதனால குறை என்கிட்டதான்னு அவர்கிட்ட சொல்லிடுங்க சார். ப்ளீஸ்..”

கெஞ்சும் அவளை பரிதாபமாக பார்த்த டாக்டர், “இது உனக்கு பிரச்சனை ஆயிடுச்சுன்னா…அதே நேரத்துல இதுல எங்க ஆஸ்பிடல் இமேஜ் அடங்கியிருக்கேம்மா.”

“உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்கிறேன். ப்ளீஸ் சார் ப்ளீஸ்…..”

கைகூப்பி அழும் அவளை வேதனை பொங்க பார்த்த டாக்டர் “அழாதேம்மா. நீ சொன்னபடியே செய்றேன்,”

சற்று நேரம் அங்கு மௌனம் நிலவியது.

“மே ஐ கமின் சார்?”

குமாரின் குரல் கேட்டு இருவரும் கலைந்தார்கள்.

மனைவியையும் டாக்டரையும் ஒருசேர பார்த்தவாறு இருக்கையில் வந்து அமர்ந்தான் குமார்.

‘சொல்லுங்க’ என்பது போல டாக்டரைப் பார்த்தான்.

டாக்டர் குரலை செருமியபடி ஆரம்பித்தார்.

“குமார் உங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லை. உங்க மனைவிக்குத்தான் தாயாகும் சக்தி இல்ல.”

கீதா தலை குனிந்து அமர்ந்திருக்க….

குமார் கண்களை அழுத்தமாக மூடியிருந்தான்.

சற்று நேரம் மீண்டும் அங்கு அமைதி நிலவியது.

அதன்பின் வந்த இரு தினங்கள் வீடு வீடாக இல்லை. என்ன சமைத்தார்கள்? என்ன சாப்பிட்டார்கள்? என்பதை அவர்களே உணர முடியாத எந்திரம் ஆகிவிட்டார்கள்.

அழுத கண்களும் வீங்கிய முகமாய் கீதாவும் இறுகிய முகத்துடன் குமாரும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளேயே முடங்கினர்.

மூன்றாம் நாள் காலை. கீதாவை அழைத்தான் குமார்.

“கீதா இங்க வரயா. கொஞ்சம் பேசவேண்டியிருக்கு.”

கீதா அவன் முன்பு வந்து அமர்ந்தாள்.

அவன் முகத்தை பார்க்கவே மிகுந்த வேதனையாக இருந்தது கீதாவிற்கு. பரிவுடன் அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்.

“நானே உங்ககிட்ட பேசணும்தான் நெனச்சேன். ஆஸ்பிடலில் இருந்து வந்த ரெண்டு நாளா நாம சரியா பேசவேயில்ல.

நீங்க எதபத்தியும் கவலப்படாதீங்க. இத நாம சேர்ந்து சமாளிக்கலாம். நானிருக்கேன் உங்கள் கூட. நீங்க பழையபடி இருந்தா அதுவே போதும் எனக்கு. என்ன சொல்றீங்க.?”

“அதப்பத்தி பேசத்தான் உன்ன கூப்பிட்டேன். அம்மாகிட்ட போன்ல எல்லா விஷயத்தையும் பேசிட்டேன்.ரெண்டு நாளா யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கேன். அம்மாவும் குடும்ப வம்சம் என்னோட முடியக்கூடாத ன்னு நினைக்குறாங்க. அதனால…….”

பாதி உயிர் போனதுபோல் உணர்ந்தாள் கீதா.

துக்கத்தை மெல்ல விழுங்கியவளாய், “சொல்லுங்க. அதனால…”

குமார் அவளை நேரடி யாக பார்ப்பதை தவிர்த்து எங்கோ பார்ப்பது போல் பார்த்து பேசினான்.

“அதனால நான் வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க நெனக்கிறேன். இன்னிக்கு சாயந்திரம் வரேன். வக்கீல பார்த்து டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்.” சொல்லிவிட்டு ‘விருவரு’வென வெளியேறினான்.

நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா? பைத்தியம் பிடிப்பதுபோல் உணர்ந்தாள் கீதா.

‘உனக்கு ஏதாவது பிரச்சினை வரப் போகுது’ன்னு டாக்டர் சொன்னது இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து மண்டையில் இடியை இறக்கியது.

‘நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்துவிட்டதே. குமார் மனம் உடையக் கூடாது என நினைத்து எனக்கு குறை என்று சொன்னேனே.

என்மேல் உள்ள அன்பினால் அவர் அதை பெரிதுபடுத்தாமல் உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை என்று ஆறுதல் படுத்துவார் என்றல்லவா எண்ணினேன். அவரை பிரிந்து இனி எப்படி இருக்கப் போகிறேன்?’

அந்த நிலையிலும் கணவன் மேல் கோபம் வராமல் அவன் பிரிவை நினைத்து வருந்தும் தன் மேல் சுயபரிதாபம் கொண்டாள். பலவற்றையும் எண்ணிப் பார்த்து அப்படியே கிடந்தாள்.

கடிகாரம் மணி 3 ஆனதை ஓசையின் மூலம் தெரிவித்தது. சட்டென்று நினைவிலிருந்து மீண்ட. கீதா சமநிலைக்கு வந்தாள்.

‘அடுத்து என்ன செய்வது? இப்போது உள்ள குமார் நிச்சயம் என் கணவர் இல்லை. இது வேறு முகமூடி அணிந்த சுயநலக்காரன்.

இனி நான் முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என்னோட பொய்யால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது.

டாக்டரிடம் சென்று ரிப்போர்ட் வாங்கி மாமியாரிடம் பக்குவமாக எடுத்து சொல்லி முகமறியா பெண்ணின் வாழ்க்கையை காப்பதுதான் என் வேலை’ என தீர்மானித்துக் கொண்டவளாய் மருத்துவமனை கிளம்ப ஆயத்தமானாள் கீதா.

மருத்துவமனை.

டாக்டரின் அறையில் அவருக்கு முன்பாக அமர்ந்திருந்தான் குமார்.

“சொல்லுங்க குமார், என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க, ஆனா வந்ததிலேர்ந்து அமைதியா இருக்கீங்க?”

“எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தயக்கம்தான் சார். வேறு ஒண்ணுமில்ல. நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். அன்றைக்கு நீங்களும் என் மனைவி கீதாவும் பேசியதை நான் முழுசா கேட்டுட்டேன்.”

டாக்டர் திடுக்கிட்டதை பொருட்படுத்தாமல், மேலே தொடர்ந்தான்.

“என் கீதா தங்கம்னு எனக்குத் தெரியும். ஆனா அவ பத்தர மாத்து தங்கம்னு அன்னிக்கு முழுசா தெரிஞ்சிகிட்டேன்.

தன்கிட்ட இருக்கிற குறையைக்கூட மறைக்கிற காலத்தில இல்லாத குறையை தான் ஏற்ற கீதா எனக்கு கிடைத்த தேவதை.

இந்த காலத்தில இந்த மாதிரி பெண்ணை பாக்கறதே ரொம்ப அபூர்வம். என் மனம் கஷ்டப்படக் கூடாதுன்னு அவ நினைக்குறா.

ஆனா என்கூட சேர்ந்து அவ கஷ்டப்படக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.

டாக்டர் இடையில் குறுக்கிட்டார்.

“அதற்கு என்ன. பண்ணப்போறீங்க?”

“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா? இப்ப என் நிலைபும் அதுதான்.

சூன்யமான என் வாழ்க்கையிலிருந்து அவளை விலக்கி ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமைய நான் வழிவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு.”

“இதுக்கு கீதா சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா குமார்?”

“நிச்சயம் அவ சம்மதிக்கமாட்டான்னு தெரியும். அதனாலதான் காலையிலேயே நான் ஒரு டிராமா போட்டுட்டு வந்திருக்கேன்.

இந்நேரம் அவ ளுக்கு வெறுப்பு வந்திருக்கும். இன்னும் சில நாள் கழித்து கீதாவுக்கு தெரியாமல் அவளோட அண்ணனை பாத்து இந்த உண்மையை சொல்லி அவர் மூலமா கீதாவோட மறுமணத்துக்கு ஏற்பாடு செய்யணும். இதுதான் என்னோட திட்டம்.”

“உங்க இருவரையும் பார்க்கும்போது எனக்கு மான் கதைதான் நினைவுக்கு வருது,

இருக்கிற கொஞ்சம் தண்ணிய ஆண் மான் குடிக்கட்டும்னு பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும்னு ஆண் மானும் ஒன்னுக்கொன்னு விட்டுக் கொடுத்துக்கிச்சாம். அந்த கதையா இருக்கு உங்களுடையதும்.”

“எங்க வாழ்க்கையும் இப்ப கதை மாதிரி ஆய்டிச்சி டாக்டர், இப்ப நான் உங்கள பாக்க வந்ததே என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கிட்டு போலான்னுதான்.”

“அத வச்சு என்ன பண்ணப் போறீங்க?”

“என் கீதாவ பிரிஞ்சி என்னால இருக்க முடியாது.ரொம்ப கஷ்டம். அவளோட ஞாபகம் வரும் போது இந்த ரிப்போர்டைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.” சொல்லிக்கொண்டேசென்றவன் துக்கம் தாளாமல் அழத் தொடங்கினான்.

அவனைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டரின் கண்ணோரங்களிலும் நீர் கசிந்தது.

இதை அத்தனையையும் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த கீதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மகிழ்ச்சிபாய் கரை புரண்டோடியது.

திரைச்சீலையை விலக்கி உள்ளே ஓடிய கீதா டாக்டர் இருப்பதையும் மறந்து குமாரின் மடியில் பொத்தென அமர்ந்து தன் இரு கைகளையும் அவன் கழுத்தில் மாலையாக்கி…

இதற்கு மேல் வேண்டாமே……

இரு மனங்களின் திருமணம்
உருவாக்கும் நல் இல்லறம்!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.