இருள் – அழகின் சிரிப்பு

இருள் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; எங்கும் நிறைந்திருக்கும் இருள் இன்னலன்று, இனிதே என்று உணர்வீர்கள்.

 

              இருள்

வாடிய உயிர்களை அணைப்பாய்

ஆடிஓ டிப்போர் இட்டும்
அருந்துதல் அருந்தி யும் பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை உயிர்க் கூட்டத்தை
ஓடியே அணைப்பாய்! உன்றன்
மணநீலச் சிறக ளாவ
மூடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!

 

இருளின் பகலாடை, இரவாடை

விண்முதல் மண் வரைக்கும்
வியக்கும்உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோய
அடிக்கடை உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகல்உடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!.

 

இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு

‘எங்குச் செல்கின்றாய்’ என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
‘கங்குலை ஒழிக்க’ என்றான்
கடிதுசெல் தம்பி என்றேன்
அங்குன்னைத் தொடாந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர்நீ;
அதில் “சுதிர்” சுழல்வண் டன்றோ!

 

நீ முத்துடை போர்த்து நின்றாய்

கள்ளரை வெளிப் படுத்தும்
இருட்பெண்ணே, கதைஒன்றைக் கேள்;
பிள்ளைகள் தூங்கினார்கள்;
பெண்டாட்டி அருகில் நின்றாள்;
உள்ளமோ எதிலும் ஒட்டா
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
வெள்ளைமுத் துக்கள் தைத்த
போர்வையை மேனி போர்த்தே.

 

கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ!

மண்முதல் விண் வரைக்கும்
வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
கண்மலர் திருப்பி நின்றாய்!
பின்புறம் கரிய கூந்தற்
கொண்டையில் ஒளியைக் காட்டும்
குளிர்நிலா வயிர வில்லை
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
மனைவியின் திருமுன் செல்லும்!

 

பிறப்பும் இறப்பும்

வானொடு நீபி றந்தாய்!
மறுபடி, கடலில் தோன்றம்
மீன் என உயிர் உடல்கள்
விளைந்தன! எவ்வி டத்தும்
நீநிறை வுற்றாய்! எங்கும்,
கொருளுண்டேல் நிழுலுண் டன்றோ!
பானையில் இருப்பாய்; பாலின்
அணுத்தோறும் பரந்திருப்பாய்!

 

உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய்; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்,
அயலிலும், சூழ்வாய்; பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்,
ஓவியர் அறிந்தி ருப்பார்!

 

இருளே அழகின் வேர்

அடுக்கிதழ் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்நீ! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தடுப்புக்காட் டுகின்றாய்! இன்றேல்,
தாமரை அழகு சாகும்!
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே!

 

அறியாமைதான் இருள்
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்

அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்;
அறியாமை அறிவால் உண்டோ?
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள்; விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார்; கிடைக்க வில்லை;

 

இருளின் பெருமை இயம்ப அரிது

பெட்டியில் இருப்ப தாகப்
பேசினார்; சாவி இல்லை;
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட் டுத்து டித்தார்;
“கட்டாயம் தூய்மை வேண்டும்”
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித் திட்ட நல்ல
இருளேஉன் பெருமை என்னே!

– பாவேந்தர் பாரதிதாசன்