இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.

ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.

காலையில் ரமேசை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பாட்டியும் மஞ்சுளாவும் மீதமிருந்த கஞ்சியை தூக்கில் ஊற்றி எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.

ஒருமணி நேர நடைக்குப் பிறகு கடலை கொல்லையை அடைந்தனர். அங்கு பக்கத்து பக்கத்து தெருக்களில் உள்ளவர்களும் வந்து இருந்தனர்.

முதலாளி வந்து இருந்தவர்களின் தலைகளை எண்ணிக் கொண்டு உள்ளே அனுப்பி வைத்தார்.

உள்ளே சென்ற மஞ்சுளாவும் பாட்டியும் தங்களால் முடிந்த வரை கடலை செடிகளைப் பிடுங்கி சேர்த்துக் கொண்டு, கடலையை பிரித்தெடுக்க ஆரம்பித்தார்கள்.

மதிய உச்சி வெயில் வேளையில் தூக்கில் இருந்த கஞ்சியை இருவரும் சாப்பிட்டு விட்டு மறுபடியும் வேலையை தொடங்கினர்.

சாயங்காலம் நாலரை மணிக்கு முதலாளியிடம் பிரித்து எடுத்த கடலை கொடுத்து விட்டு, தங்கள் கூலியாக முதலாளி கொடுத்த கடலையை வாங்கிக் கொண்டனர் இருவரும்.

பின்னர் அண்ணாச்சி மளிகை கடைக்கு வந்து கடலையை கொடுத்து விட்டு சமையலுக்கு தேவையான அரிசி, கருவாடு, எண்ணெய், மிளகாய்த்தூள் என்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு, அண்ணாச்சி கொடுத்த மீத தொகையை வாங்கி பாட்டியிடம் கொடுத்தாள் மஞ்சுளா.

பாட்டி பணத்தை வாங்கி தன் சுருக்குப் பையில் வைத்துக் கொள்ள, இருவரும் சாமான்களுடன் வீட்டிற்கு சென்றனர்.

இரவு ஏழு மணிக்கு ரமேசின் சைக்கிள் வரும் சத்தம் கேட்டு சமைத்துக் கொண்டு இருந்த மஞ்சுளா வாசலுக்கு வந்தாள்.

ரமேஷ் தள்ளாடியபடி சைக்கிளை விட்டு கீழே இறங்கி சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு கையில் வைத்திருந்த பையை மஞ்சுளாவிடம் கொடுத்தான்.

பையை கையில் வாங்கிக் கொண்ட மஞ்சுளா ‘விறுவிறு’ என்று உள்ளே சென்றாள்.

ரமேஷ் “ஏய், மஞ்சுளா கொஞ்சம் நில்லு, நில்லு” என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தான்.

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த பாட்டி “டேய் ரமேஷ், என்னடா சத்தம் போட்டுகிட்டு உள்ள வர்ற?”

மஞ்சுளா கையில் வைத்திருந்த பையை ஒரு ஓரமாக போட்டு விட்டு அடுப்பாங்கரைக்குள் புகுந்தாள்.

உள்ளே வந்த ரமேசை பார்த்து பாட்டி “டேய்! டேய்! ரமேஷ் கொஞ்சம் நில்லுடா.”

“என்ன பாட்டி?”

“இன்னைக்கும் குடிச்சிட்டு வந்திருக்கியாடா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி”

“இந்த பாழாப்போன குடிய எப்ப தாண்டா விட போற? அவள பாருடா; பாவம், வாயும் வயிறுமா இருக்கிறா அந்த புள்ள.

கல்யாணத்துக்கு முன்னாடி தான் குடிச்சுபுட்டு வந்த. ஊர்ல ஒரு பைய உனக்கு பொண்ணு தரமாட்டேன்னுட்டான்.

அந்த கடவுள் புண்ணியத்துல ஏதோ என் தூரத்து சொந்தத்துல உனக்கு பொண்ணு அமைஞ்சிடுச்சு. இதற்கு மேலயாவது நீ நல்லா இருப்பேன்னு நினைச்சேன்டா.

இப்பவும் இப்படி பண்ணுறியே! அந்த மகமாயி தான் உனக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்” என்று புலம்பி கொண்டு அடுப்படிக்குள் போனாள் பாட்டி.

விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த மஞ்சுளா அப்படியே அடுப்பை பார்த்துக் கொண்டே சிலை போல் உட்கார்ந்திருந்தாள்; கண்களில் கண்ணீர் வழிந்திருந்தது.

பாட்டி மஞ்சுளாவிடம் ஏதேதோ பேச்சு கொடுத்து பார்த்தாள்.
எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மஞ்சுளா ஒரே இடத்தை முறைத்தபடி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“அடேய் ரமேசு ரமேசு” என்று பாட்டி சத்தமிடாள் .

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த ரமேஷ்
பாட்டியின் குரலில் பதட்டத்தை கண்டு எழுந்து ஓடி வந்தான்.

“என்ன பாட்டி என்ன ஆச்சு?”

“என்னன்னு தெரியலடா. அவ ஒரு மாதிரியா ஒரே இடத்தை முறைச்சு பார்த்துகிட்டு இருக்கிறா. எதுவும் பேச மாட்டேங்குற.
அவள இப்படி அழைச்சிட்டு வா. நான் போய் அடுப்பில் இருக்கும் சோத்தை பார்க்கிறேன்” என்று பாட்டி சொல்ல.

ரமேஷ் அடுப்படியில் உட்கார்ந்திருந்த மனைவியை “மஞ்சுளா, மஞ்சுளா”. என்று அழைக்க, மஞ்சுளாவிடம் எந்த பதிலும் இல்லை அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

ரமேஷ் குடத்தில் இருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி
மஞ்சுளாவின் முகத்தில் அடித்தான்.

சுயநினைவுக்கு வந்த மஞ்சுளா எதுவும் நடக்காதது போல் எழுந்து சென்று தன் அறைக்குள் புகுந்தாள்.

அன்று இரவு யாரும் எதுவும் சாப்பிடவில்லை.

மறுநாள் காலை பொழுது விடிந்தது. பாட்டிக்கு இரவு நடந்தது நினைவுக்கு
வந்தது.

ரமேஷ் வழக்கம்போல் வேலைக்குச் சென்றான். மஞ்சுளா எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியின் மனதில் ஏதோ நடப்பது போல் உணர்ந்தாள்.

‘மனசே ஒன்னும் சரியா இல்லை. மஞ்சுளா வேற முழுகாமல் இருக்கிறாள்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாட்டிக்கு அன்று செவ்வாய்க்கிழமை என்பது நினைவுக்கு வந்தது.

‘சரி இன்று எங்கேயும் வேலைக்கு போக வேண்டாம். மஞ்சுளாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போயிட்டு விளக்கு போட்டுட்டு வருவோம்’ என்று நினைத்துக் கொண்டு, “மஞ்சுளா! அம்மா மஞ்சுளா” என்று பாட்டி அழைத்தாள்.

“ஏன் பாட்டி?”

“இங்கே வா தாயி.”

வேலை பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுளா “ஏன் பாட்டி கூப்பிட்டீங்க” என்றபடி வந்தாள்.

“ஒன்னும் இல்ல தாயி; இன்னைக்கு நம்பளுக்கு ஒன்னும் பொழப்பு இல்லை. வா நம்ப ரெண்டு பேரும் கோயிலுக்கு போய் விளக்கு போட்டுட்டு வந்துடலாம்” என்று சொன்னார்.

“நீங்க போயிட்டு வாங்க பாட்டி. நான் வரல. எனக்கு உடம்பு சரியில்லை. ஏதோ பண்ணுது. உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்குது.”

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது தாயி. சாமி காரியம். உன்னைய வச்சுத்தான் விளக்கு போடுறதா நேந்துகிட்டேன்” என்று சொல்லி மஞ்சுளாவை பிடிவாதமாக அழைத்துக் கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள் பாட்டி .

இருவரும் கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்க அந்த தெருவில் குருக்களின் வீடு கண்ணில் பட்டது.

குருக்களின் வீட்டினுள் மஞ்சுளாஅவை அழைத்து சென்றாள் பாட்டி.

பூஜையில் உட்கார்ந்து இருந்த குருக்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்ல, கண்மூடி உட்கார்ந்து இருந்த குருக்கள் கண் திறந்தார்.

பாட்டியையும் மஞ்சுளாவையும் பார்த்து கொஞ்சம் விபூதியை எடுத்து கையில் கொடுத்து “நீங்க காட்டு வேலைக்கு போவது உண்டா?”

“ஆமாம் சாமி. எங்களுக்கு அதுதான் பொழப்பு. வயல் வேலைக்கு போவோம். காட்டு வேலைக்கு போவோம்” என்று பாட்டி சொல்ல,

“ம் .ம் . இப்போது எல்லாம் எனக்கு புரிந்து விட்டது. உங்கள் பேத்தி வேறு முழுகாமல் இருக்கிறாள் அல்லவா? நீங்கள் இருவரும் ஏதோ காட்டு வேலைக்கு போயிட்டு நேரம் கெட்ட நேரத்தில் வந்து இருக்கீங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. எல்லாம் அந்த மகமாயி பார்த்து கொள்வாள்” என்று சொல்லிவிட்டு, சாமியை கும்பிட்டு விட்டு ஒரு நூலை எடுத்து பாட்டியிடம் கொடுத்து, “உங்கள் பேத்தியின் இடுப்பில் கட்டி விடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

போறப்ப கோவிலுக்கு சென்று அந்த தாயிடம் உங்கள் குறைகளை சொல்லிட்டு வீட்டுக்கு போங்க. எல்லாம் அவ பார்த்துப்பா என்று சொல்ல, இருவரும் கோவிலுக்கு புறப்பட்டனர்.

சில மாதங்கள் சென்றன. மழைக்காலம் என்பதால் சாயங்காலம் ஆறு மணிக்கே இருட்டிவிட்டது.

மழை பிசுபிசுஎன்று தூறிக்கொண்டே இருந்தது.

ரமேசுக்கு வேலையும் இல்லை. மழை நேரத்தில் யார் கொத்தனார் வேலை வைப்பார்கள்?

வேலையும் இல்லை. ரமேஷிடம் காசும் இல்லை. ஏழு மணிக்கே ஊரும் அடங்கி விட்டது. இருந்ததை வைத்து மூவரும் சாப்பிட்டு விட்டு படுக்க. இரவு முழுவதும் இடியும் மின்னலுமாய் மழை பெய்ந்து கொண்டே இருந்தது.

நள்ளிரவு 12 மணி. இடுப்பு வலி ஏற்பட்ட மஞ்சுளா அலறிக் கொண்டு எழுந்தாள்.

“ஒன்னும் இல்ல புள்ள. சூட்டு வலியா இருக்கும். பயப்படாதே!”
என்று சொல்லிவிட்டு அடுப்பை பற்ற வைத்து தனக்கு தெரிந்த முறையில் கருக்கை போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இதை குடி தாயி; வலி கேட்கும்” என்று கொடுத்து விட்டு, “டேய் ரமேசு”

“என்ன பாட்டி?”

“பாப்பாவுக்கு இடுப்பு வலி வந்துருச்சு போல இருக்கு. நான் கசாயம் போட்டு கொடுத்து இருக்கிறேன். நீ போயி பக்கத்துல இருக்கிற மருத்துவச்சி அம்மாவை அழைச்சிட்டு வந்துரு.”

“என்ன பாட்டி என்னிடம் காசு எதுவும் இல்லையே.”

“அடேய், பைத்தியக்கார பயலே! உன்கிட்ட இருக்காதுன்னு தெரியும்டா. அதுக்குத்தான் நான் காட்டு வேலைக்கு போய் ஏதோ சேமிச்சு வச்சிருக்கேன். நீ போய் அழைச்சிட்டு வந்துடு.”

“சரி பாட்டி” என்று கிளம்பிய ரமேஷ் சிறிது நேரத்தில் எப்படியோ தட்டு தடுமாறி மருத்துவச்சி அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

மருத்துவச்சி அம்மாவும் மஞ்சுளாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்து, “தம்பி குழந்தைக்கு இன்னும் தல திரும்பல. இங்க வச்சு பிரசவம் பார்க்க முடியாது.

நீங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுங்க. இங்க வச்சிருக்க குழந்தைக்கும் தாய்க்கும் இரண்டு உசுருக்குமே ஆபத்தாக ஆயிடும். ரொம்ப சிக்கலான கேஸ்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா, தாயையும் பிள்ளையும் ஆபரேஷன் பண்ணியாவது காப்பாத்திடுவாங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ரமேசுக்கும் பாட்டிக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை
மஞ்சுளா வேறு இடுப்பு வலியில் துடித்துக் கொண்டு இருந்தாள்.

பாட்டி தன் சுருக்கு பையில் இருந்து விபூதியை கொஞ்சம் அள்ளி மஞ்சளாவின் நெற்றியில் பூசினாள்.

“ஒன்னும் இல்ல தாயி பயப்படாதே! எல்லாம் நல்லதா நடக்கும்.
டேய் ரமேஷ் பொழுது விடிய போகுது. மணி நாலர இருக்கும்
நீ போயி இந்த தெரு கடைசியில் நம்ப கண்ணுசாமி ரிக்சாக்காரர் இருக்கார்.

அவரு பள்ளிக்கூடத்து பிள்ளைகளை ஏத்திகிட்டு போறதுக்கு கூண்டு ரிச்சா ஒன்னு வச்சிருக்கார். அவர் கிட்ட விஷயத்தை சொல்லி அழைச்சிட்டு வந்துரு என்றாள்.

ரமேஷ் விறுவிறுவென்று ஓடிச் சென்று கூண்டு ரிக்சாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

வண்டியில் மஞ்சுளாவை ஏற்றி பாட்டியின் மடியில் தலையை வைத்து படுக்க வைத்தார்கள். வண்டி நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

ரிக்சா செல்லி அம்மன் கோயில் வாசலை கடக்க அது வரையில் சுயநினைவு இல்லாமல் இருந்த மஞ்சுளா ‘வீல்’ என்று அலறினாள்.

அவ்வளவுதான் ரிக்சாவிலேயே கோயில் வாசலில் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமானவர்கள்.

ரமேஷ் ஆனந்தக் கண்ணீருடன், ‘இனி குடிப்பதில்லை’ என்ற எண்ணத்துடன் கோயில் வாசலை பார்த்தான்.

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய்‘ என்ற வாசகம் கண்ணில் பட்டது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.