ஈகை குணம் – சிறுகதை

மெயின்கார்ட் கேட் செல்லும் அந்த நகரப்பேருந்து இன்னும் கிளம்பவில்லை. துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்திலிருந்து கிளம்பும் அந்தப் பேருந்தில் வழக்கத்திற்கு மாறாக இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன.

பேருந்தின் கடைசி நீண்ட இருக்கையின் வாயிற்புற ஓரமாக ஜெகன் அமர்ந்திருந்தான். ஜெகன் பிளஸ் டூ படிக்கும் மாணவன்.

அவன் அருகில் சற்றுத் தள்ளி மதன் உட்கார்ந்திருந்தான். அவன் ஜெகனுடன் படிக்கிறான்.

பிச்சை எடுக்கும் கிழவர் ஒருவர் ஜெகனிடம் வெளியிலிருந்தவாறே கை நீட்டினார்.

‘போய்யா, இதே பொழப்பாப் போச்சு. கை,கால் எல்லாம் நல்லாத் தானே இருக்கு!’ என்று ஜெகன் கோபமாகக் கடுப்படித்தான். கிழவர் தள்ளாடியவாறே போய்விட்டார்.

தொண்டையைக் கணைத்துக் கொண்டே மதன், ஜெகனிடம் திரும்பி,

“பாவம் ஜெகன், பெத்த பிள்ளைங்க எல்லாம் கைவிட்டுட்டாங்க. தள்ளாத வயசுல இப்படி பிச்சை எடுத்துக்கிட்டிருக்கிற நிலைமை” என்றதும், மதனை எரித்துவிடுவது போல் பார்த்தான் ஜெகன்.

பேருந்து கிளம்பிச் சென்று கொண்டிருக்க வழி நெடுக, கும்பல் சேர ஆரம்பித்தது.

மதன் அருகே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் மதனை உசுப்பி, அவன் காலடியைச் சுட்டிக் காண்பித்தார்.

மதன் குனிந்து பார்த்தான். பத்து ரூபாய் நாணயம் ஒன்று அவன் காலடியில் கிடந்தது. யாரோ தவறவிட்டிருந்தார்கள். மதனுடையது என நினைத்து அந்தப் பெரியவர் அவனை உசுப்பிச் சுட்டிக் காட்டிருக்கிறார்.

அதை. கையிலெடுத்துக்கொண்ட மதன், ஜெகனிடம் அவனுடையதா? எனக் கேட்டான். ஜெகன் இல்லை என்றதும், சிறிது நேரம் கையில் வைத்துக் கொண்டிருந்த அந்த நாணயத்தை எவரும் கேட்காததால், தனது சட்டைப்பையில் போட்டுக் கொண்டான் மதன்.

அருகிலிருந்த ஜெகன் இதை கவனித்துவிட்டு ‘பாவி! யாரோ தவறவிட்ட நாணயத்தை தன் பாக்கெட்டில் போட்டுக்கிட்டானே. நல்லவன் மாதிரி வேஷம் வேறு! தர்மப் பிரபு மாதிரி பிச்சைக்காரனிடம் பச்சாதாபம் காட்றான்!’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சிங்காரத் தோப்பு நிறுத்தம் வந்ததும் ஜெகன் இறங்கினான். மதனும் கீழே இறங்க, அவனைத் தொடர்ந்து அவனிடம் காசு கொடுத்த பெரியவரும் இறங்கினார்.

“ஐயா! தர்மம் போடுங்க சாமி!” பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் கையேந்த, பாக்கெட்டிலிருந்து பேருந்தில் கீழே கிடந்த அந்த நாணயத்தையும், கூடவே இன்னொரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் எடுத்து அவனது தட்டில் போட்டான் மதன்.

உண்மையிலேயே மதன் தர்மப்பிரபுதான் என்பதை ஜெகன் உணர்ந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெரியவர், மதனைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

“தம்பி! ஓரு நல்ல மாணவன் எப்படியிருக்கணும்னு அந்தத் தம்பிக்கு உணர்த்திட்டே. வெறும் படிப்பு மட்டும் போதாது தம்பி. பிறர் பொருளுக்கு ஆசைப்படாத குணம், திருட முயலாத குணம் – எல்லாவற்றுக்கும் மேலாக தர்மம் செய்யும் எண்ணம் போன்ற நற்குணங்களையும் பெற்றிருந்தால்தான் வாழ்க்கையில், நாம் உயர முடியும். நல்ல காரியம் செஞ்ஞே! ரொம்ப சந்தோஷம் தம்பி!” என்று பெரியவர் சொன்னதைக் கேட்டதும்
மதன் அவரைப் பார்த்து,

“ஐயா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். ஆனால் எல்லோராலும் கைவிடப்பட்டு உழைக்க முடியாமலிருக்கிற தள்ளாத வயசுக்காரங்க, உடல் வியாதியினாலே உழைக்க முடியாதவங்க போன்றவங்களுக்குத்தான் நான் உதவி செய்வேன்.

வீணாக இளமையிலே உழைக்காமல் பிச்சையெடுக்கிவங்களுக்கு காசு போடவே மாட்டேன். அப்படி அவங்களுக்கு பிச்சை போட்டா நாமே, அவர்களுடைய சோம்பேறித்தனத்தை வளர்க்கிற மாதிரி ஆயிடும். நான் சொல்றது சரிதானே?” எனச் சொன்னான்.

பெரியவர் மதனுடைய முதுகைத் தட்டிக் கொடுத்து, “உன்னை மாதிரி பையன்தான் இந்த நாட்டுக்கு தேவை” என்றார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன் வெட்கத்தால் கூனிக் குறுகி நின்றான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.