உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் சொன்ன சொல். இன்றும் நமக்கு வழிகாட்டும் அற்புத சொல் அது.

வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் வளம் தேவையாகும். உடலைப் பேணினால் உயிரைப் போற்றியதாகும். உடலை வளர்த்தால் தான் உள்ளத்தை வளர்க்க முடியும்.

உயர்ந்த உள்ளம் என்னும் கட்டிடம் எழுப்பச் சிறந்த உடல் என்ற அடித்தளம் இன்றியமையாதது.

இயந்திரம் பழுதடையாதவாறு எண்ணெய் இட்டும் துப்புரவு செய்துக் காத்துப் பேணும் நாம் உடல் வளத்தையும் மனநலத்தையும் கருத்தாகப் போற்ற வேண்டும்.

இன்றைய உலகில் உடல் நலம் பேணுவது அவசியம். சிறந்த ஓவியம் தீட்டுவதற்கு அழகிய சுவரோ, துணியோ, தாளோ தேவையாகும். இதனாலேயே “சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட இயலும்” என்று பழமொழி தோன்றியது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

உடல் நலத்திற்கு தடையாய் அமைவது நோய் எனலாம். நோயற்ற உடல் கொண்ட வாழ்க்கை நல்ல தாயற்ற குழந்தை போல தயங்கித் தள்ளாடும் என்பது புலவர் வாய்மொழியாகும்.

நோய் எதுவும் வராது காப்பது நம் கடமையாகும். வருமுன் காப்பவனே பெருமதிப்பிற்குரியவன்.

உடல் பயிற்சி இல்லாததாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும், திட்டமிட்ட வாழ்க்கை வரைமுறை இல்லாததாலும் இன்றைய மக்கள் பலர் உடல் நலம் குன்றிக் காணப்படுகின்றனர்.

நல்ல உணவை அள‌வும், காலமும் அறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். சுவையான உணவு என்பதால் அளவு மிகுதல் தக்கதன்று.

நல்ல உணவும் உடல் உரமும் மனிதர்க்கு இன்றியமையாதவை என்று வலியுறுத்துவார் அறிஞர் சுந்தரவடிவேலு அவர்கள்.

உயிர்ச்சத்து நிறைந்த உணவு அளவோடு அமையவேண்டும். அது மிகுந்தாலும் தொல்லைகள் தோன்றும். சான்று “வைட்டமின் ஏ” அதிகமானால் பசி இல்லாமல் எடை குறையும். உடலின் அரிப்பு அதிகமாகும். ஈறும் பெரிதாகும். தலைமுடி உதிரத் தொடங்கும். பெரிய எலும்புகளில் தடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும்.

உடல் நலம் பேணும் முறை

உடல் உறுப்பு ஒவ்வொன்றும் தூய்மையுடன் திகழ வேண்டும்.

ஓய்ந்தும் சோர்ந்தும் கிடப்பது உடல் நலிவையும் உள்ளத் தளர்ச்சியையும் ஏற்படுத்தும்.

காலையிலும் மாலையிலும் காற்றோட்டமான இடங்களில் உலவி வருவது நலம் தருவதாகும்.

உடலுக்கு ஏற்றாற்போன்று உழைப்பை ஊக்கி நாட்டையும் வீட்டையும் வளமுறுத்த விழைவோர் உடல் நலத்துடன் விளங்குவர். அவர்களே முறையாக இன்பம் துய்த்து வாழ்வை முழுமையாக அனுபவிக்க இயலும்.

உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறையில் உறங்க வேண்டும்.

சத்துள்ள உணவை தரம் அறிந்து உண்ண வேண்டும்.

“மருத்துவனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பது பழமொழி.

வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் முழுகுதல் உடலுக்கு வலிவையும் பொலிவையும் தரும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திற‌ம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
என்கிறார் திருமூலர்.

மக்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது நல்ல உடல் நலமே.

பழந்தமிழகத்தில் மக்கள் உடல்நலம் பேணியமையால் ஈரஉள்ளமும், வீர உணர்வும், ஏற்றமிகு ஆற்றலும் கொண்டிருந்தனர்.

ஆடவர் ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டினர். மகளிரும் மாலை வேலைகளின் பந்தாட்டம் முதலியவற்றில் நாட்டம் செலுத்தினார்கள்.

நாடு காக்கவும் நல்விளைவு காணவும் உடல் உரம் இன்றியமையாதது.

வருங்கால வாழ்வு வளம் நிறைந்ததாக விளங்குக.

இளமையில் உடல் நலம் பேண வேண்டும்.

இளமை எழுச்சியே முதுமை காலத்தில் ஊக்கத்தையும், ஆக்கத்தையும் வழங்கும்.

நோய் நாடி நோய்முதல் நாடி அவை வராதவாறு தடுத்தாள்வது நம் கடமையாகும்.

நோயற்ற வாழ்வுச் செல்வத்தைப் பெருக்க முயல வேண்டும்.

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற சொல்லை என்றும் மறக்க வேண்டாம்.

S.ஆஷா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.