உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை

உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமீர் மஹால்.

கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர்.

அதைக் கண்ட சுரேந்தரின் நண்பர் தீபக் “மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில, ஏன் இந்த கண்ணீர் உனக்கு?” என்றார்.

“இந்த வெற்றி சாதாரணமானது இல்ல. என் மகனோட உணர்வுகளையும், தனித்திறமைகளையும் தூண்டிய வெற்றி.”

“ஒன்னும் புரியல சுரேந்தர். இந்த விழா முடிஞ்சதும் விளக்கமாகச் சொல்லு. இப்போ விழா மேடைக்கு உங்களை அழைக்கிறாங்க போங்க.”

மேடையில் சுரேந்தர் மகன் வினோத்திற்கு நல்ல பாடகர் என்ற விருது வழங்கப்பட்டது.

பரிசுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும், சொகுசு வீடும் வழங்கப்பட்டு விழாவும் கோலாகலமாக முடிந்தது.

விழா முடிந்து வீட்டில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறிய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

வினோத்தின் நண்பர்கள் அவனை தூக்கிக் கொண்டாடினார்கள். “நீ சாதிச்சுட்டடா” என்று உரக்க கத்தினார்கள்.

இதையெல்லாம் கண்ட தீபக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘பாடல் போட்டியில கலந்துக்கிறதுங்குறது இப்பெல்லாம் சாதாரணம். இவங்க ஏன் இதனைக் கொண்டாடுறாங்க’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“தீபக் என்ன கனவு கண்டுக்கிட்டு இருக்கிரியா?” என்றார் சுரேந்தர்.

“கனவு இல்லை சுரேந்தர். இங்க நடக்குறது ஒன்னும் புரியல. அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.”

“உன்னோட குழப்பத்துக்கு அதுதான் காரணமா?. வா தீபக், அப்படி போய் உட்கார்ந்து பேசுவோம்.”

இருவரும் அறையின் ஓரத்தில் இருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.

“வினோத்துக்கு பார்வை இல்லையின்னு உனக்குத் தெரியுந்தானே. அவனை நாங்க அந்த குறை தெரியாம வளர்த்தவிதம் உனக்கு நல்லா தெரியுமில்லையா…”

“ஆமாம், இது அவன் பிறந்ததிலிருந்தே, நான் பார்த்துக்கிட்டு இருக்கிறதுதானே.”

“அவனுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறதால, பாடல்கள பாடுறதுல அவன் விருப்பம் காட்டினான். அவனுக்கு முறையான பயிற்சி இல்லைனாலும் கேட்டதை வைச்சு அருமையா பாடுவான்.”

“என்னடா, இதெல்லாம் எனக்கு தெரிஞ்சதுதான. நீ என்ன புதுசா சொல்ற”

“இருடா, பொறுமையா கேளு. அவன் கல்லூரியில அதேபோல பல நிகழ்ச்சிகள்ல பாடினான். அவன் நண்பர்கள் அவனுக்கு பக்கபலமா இருந்தாங்க.

அப்போ தேசிய அளவுல நடந்த பாட்டுப் போட்டியில கலந்துக்குறதுக்கு இவங்க கல்லூரி சென்றது.

பாடல்கள் பாடுற குழுவில எல்லாரோட பேரும் இருந்துச்சு. ஆனா வினோத்தோட பேரு மட்டும் இல்ல.

வினோத்தும் அவனோட நண்பர்களும் கல்லூரி முதல்வர்ட இதைப் பத்திக் கேட்டாங்க.

அதுக்கு அவரு வினோத்துக்கு பார்வையில்லாததால அவனை டெல்லிக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அதுக்கு வினோத்தோட நண்பர்கள் அத நாங்க பார்த்துக்குறோம். நீங்க அவனுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு சொன்னாங்க.

ஆனா அதுக்கு வினோத் முறைப்படி எந்த பயிற்சியும் எடுக்கல. அதனால அவன தேர்வு செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாரு.

வினோத்தோட நண்பர்கள் எவ்வளவோ கேட்டும் அவரு அதுக்கு சம்மதிக்கல.

பிறகு வினோத் வீட்டுக்கு வந்து அவனுக்கு பார்வை இல்லையின்னு நினைச்சு முதன்முறையா அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்ததும் அவனோட நண்பர்களும் அழுதாங்க. அவர்கள் அழுவதைக் கண்டு நானும் என்னோட மனைவியும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

பாடல் போட்டி

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பாடல் போட்டியில, வினோத்தை கலந்து கொள்ள செய்யனும்முனு நினைச்சு அதுக்காக விண்ணப்பிச்சோம். அவன அதுக்கான நேர்முகத் தேர்வுல கலந்துக்க வைச்சோம்.

அப்ப தேர்வாளராக இருந்த பிரபல பாடகர், வினோத் குரல் வளத்த பார்த்திட்டு எங்ககிட்ட பேசினார்.

வினோத்துக்கு நல்ல குரல்வளம் இருக்கு. அவன் முறையா இசையை கத்துகிட்டு இந்த போட்டில கலந்துக்கிட்டா வெற்றி வினோத்துக்குத்தான்.

அவனுக்கு நானே இசையை கத்துக்குடுக்குறேன்னு சொன்னார். அவர் சொன்னது போலவே வீட்டுக்கு வந்து, தினமும் வினோத்துக்கு இசையக் கத்துக் குடுத்தாரு.

அதுமட்டுமில்லாம இசையை பத்திய தேர்வையும் எழுத வைச்சாரு. அதில முதல் மாணவனா வினோத் தேர்ச்சி பெற்றான். மூணு வருசம் இசைல கடுமையான பயிற்சி எடுத்தான்.

அவரு சொன்ன மாதிரியே தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பாடல் போட்டியில கலந்துக்கிட்டு, முதல் பரிசையும் வாங்கிட்டான்.

அத்தோட பிரபல மூணு இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்கள்ல பாட ஒப்பந்தம் செய்சுருக்காங்க. அந்த வெற்றியத்தான் இன்னைக்கு இவ்வாறு கொண்டாடுறாங்க தீபக்’

‘ஓ இவ்வளவு நடந்துருக்கா. நான் இங்க இல்லாத இந்த மூணு வருசத்தில. சரி, சுரேந்தர் கல்லூரி முதல்வருக்கு இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கலையா?’

‘வினோத்தோட நண்பர்கள் அவர அழைச்சிருக்காங்க. ஆனா அவரு வரல.’

தீபக் மறுநாள் வினோத்தின் கல்லூரி முதல்வரைப் பார்க்க கல்லூரிக்குச் சென்றார்.

அங்கு முதல்வரிடம் தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவரிடம் ‘நான் உங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை பேசிட்டுப் போய்டுறேன்.

ஒரு மாணவனின் விருப்பங்களையும், உணர்வுகளையும் மற்றும் திறமைகளையும் புரிஞ்சுக்க முடியாத நீங்க, இந்த கல்லூரியில படிக்கும் நாலாயிரம் மாணவர்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் எப்படி மதிப்பளிப்பீங்க?

நீங்க இந்த கல்லூரிக்கு முதல்வரா இருக்குறது தகுமா? வர்றேன்.’ என்று வெளியேறினார்.

செல்லும் வழியில் கோவிலுக்குச் சென்று வினோத் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, கடவுளுக்கும் நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்.

நமது அருகில் இருப்பவர்களை நாம் சில நேரங்களில் உதாசீனப்படுத்துகின்றோம்.

அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள் இருக்கும் என்பதை மறந்து விடுகின்றோம். அவ்வாறு செய்யாமல் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்போம்.

I.R.கரோலின்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.