உணவுப் பயிர் – நெல்

நெல் அதிக அளவில் விளைவிக்கப்படும் உணவுப் பயிர் ஆகும். உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவு அரிசி ஆகும். அரிசியானது நெல்லிருந்தே பெறப்படுகிறது.

நெல் ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது ஒரு வெப்ப‌ மண்டலப் பயிராகும். இது வண்டல்மண் பகுதிகளிலும், ஆறுகளின் டெல்டாப் பகுதிகளிலும் மிகச் செழிப்பாக வளரும்.

இப்பயிரின் மூல இனம் தெற்காசியப் பகுதியிலிருந்து வந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. சீனாவின் யாங்டிசி ஆற்றுச் சமவெளியில் இப்பயிரின் பயன்பாடு முதலில் தொடங்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் உள்ளது.

 

நெற்பயிர் வளரத் தேவையான சூழ்நிலைகள்

நெற்பயிர் வளர்ச்சிக்கு சராசரியாக 24C வெப்ப நிலையும், சராசரியாக 150 செ.மீ. மழையளவும் தேவைப்படுகிறது. மழைபோதுமான அளவு இல்லாத போது நீர்பாசன வசதி தேவைப்படுகிறது.

நெற்பயிர் விளைவிக்க சமமான நிலம் தேவை. ஏனெனில் அது தேங்கிய தண்ணீரில் வளர்ச்சியுறுகிறது. உயரமான நிலப்பகுதிகளில் நெல்விளைவிக்க சரிவுகளை சமப்படுத்தி தாழ்நிலங்களில் பயிரிடுவது போல் நீர் தேங்கி நிற்க படிக்கட்டு முறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஆற்றின் டெல்டாப் பகுதிகளில் நெற்பயிர் முப்போகம் விளைவிக்கப்படுகிறது. வண்டல் மண்ணில் சத்து மிகுந்து உள்ளதால் நெற்பயிர் நன்றாக செழித்து வளருகிறது.

இப்பயிரினை விளைவிக்க நிலம் தயார் செய்தல், விதையிடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல் என பல வேலைகள் செய்யப்படுவதால் இப்பயிரினை விளைவிக்க அதிக அளவு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

ஆசியா அதிக அளவில் நெல் உற்பத்தி செய்கிறது. 98% விவசாயிகள் ஆசியாவில் உற்பத்தியில் பங்கு பெறுகின்றனர். சீனா, இந்தியா, இந்தோனஷியா, வங்காள தேசம் ஆகியவை உலகில் முதல் நான்கு உற்பத்தி நாடுகளாக உள்ளன. இந்தியாவில் நெற்பயிர் அனைத்து பெரிய ஆற்று சமவெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.