உதகை பயணம் – இனிய நினைவுகள்

உதகை பயணம் இனிய நினைவுகள் பலவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

இளங்காலை வேளை.

கோவையிலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்து இறங்கிய இடம் சேரிங்கிராஸ்.

ஆதவனின் இளங்கதிர்கள் மேனியில் விழுந்தும், குளிர்மை நிறைந்த காற்றில் அதன் வெப்ப கீற்று என் உடலுக்கு சிறிதும் உறைக்கவில்லை.

 

ஒத்தக்கால் மந்து, நீலகிரி என்ற சிறப்பான மாவட்டத்தின் தலைநகரம்.

ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை தன் கைப்பற்றியபோது, அவர்கள் நாட்டு தட்ப வெப்பநிலையை ஒத்த, ஒத்தக்கால் மந்தில் குடியேறினர்.

அப்போது அவர்களுக்கு அந்த பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் ஒட்டகமண்ட் எனக்கூறி அன்றைய காலத்தில் அப்படியே உச்சரித்து வந்தனர்.

நம்மவர்கள் ஒத்தக்கால் மந்து என்று அழைத்து, பின்னாளில் ஊட்டி என்றும் தமிழில் உதகமண்டலம் என்றும் அழைத்து வந்தனர். அது தற்போது மறுவி உதகை எனவும், ஊட்டி எனவும் இரு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.

 

நான் சிறுவயதில் பள்ளிப் படிப்பிற்காக இந்த மலை ராணியின் நகரத்தை கடந்த போதும், வனத்துறையில் பணியில் சேர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் நடந்த போதும் இருந்த உதகையில் இன்று எத்தனை எத்தனை மாற்றங்கள்?

மலை நகரத்தில் கட்டிடங்களின் பெருக்கம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேருந்து சென்றதும் சாலையை கடக்க முயற்சித்தேன். உடனே கடந்திட முடியவில்லை.

வாகனப் பெருக்கத்தால் வழி கிடைக்க சிறிது நேரம் பிடித்தது. இங்கே சாலையின் நடுவே ஆங்கிலேயர்கள் கட்டிச் சென்ற, இன்றும் அதன் இளமை மாறாமல் பாதுகாக்கும் செயற்கை நீரூற்று புதுப்பொலிவுடன் வரவேற்றது.

ஆங்கிலேயர்களின் கைவண்ணத்தில் பல கட்டிடங்களும் அதன் அழகை இழக்காமல் காட்சி தருகிறது.

 

சிறு வயதில் பலமுறை சுற்றித் திரிந்த இடமென்பதால், கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி தன்னிச்சையாகவே நடந்தது.

ஏனோ இன்று மட்டும் என்னை பள்ளிப் பருவ மாணவனைப் போல் உணரவைத்தது மனம்.  இரண்டாவது வட்டச் சாலை. இங்கே சற்று நிற்க வைத்தது கால்கள். காரணம் இருக்கிறதே.

அங்கே இடது புறச்சாலையின் சிறிது மேற்புறம் தான் வனக்காவலராக நான் பணி புரிந்த  நீலகிரி தெற்கு வனக்கோட்ட அலுவலகம் இருந்தது.

ஆனால் இன்று நீலகிரி வனக்கோட்டமாக எனப் பெயர் மாறியுள்ளது. அதற்கான சாட்சியாய் பெயர்ப் பலகை. எண்ணங்கள் சிறகை விரித்தது.

மனம் என்னை விட்டு பறந்தது, கனவாய் சில நிமிடங்கள். மீண்டும் நடந்தேன்.

 

ஆட்சியர் அலுவலகம் செல்ல படிகள் மேலேறி நடந்தேன்.

சிவந்த உடல் போலிருந்தது கட்டிடங்கள். மணிக்கூண்டில் கடிகாரம் அதன் பணியை தொடர்ந்திருக்க, என் வயிறு பசிக்கிறது என்றது. அருகில் உணவகம் இருக்குமிடத்தை தேடினேன்.

வளாகத்தினுள் சிறிய அறையுடன் ஒரு உணவகம். அதில் இரண்டு அம்மையார்கள் சூடாக இட்லியை எடுத்து வைத்தபடி இருக்க, நான் ‘அம்மா டிபன் சாப்பிடலாமா?’ என்று வினவ, ‘ரெடி மகனே, உட்கார்’ என்றனர்.

‘மகனே எத்தனை இட்லி வைக்க?’ எனக் கேட்டு, தட்டில் துண்டு வாழை இலையுடன் தயாராக இருந்த இட்லியை  வைத்து விட்டு, ‘வடை வைக்கவா மகனே?’ என ஒவ்வொரு சொல்லுக்கும் மகனே மகனே என அழைத்து என் அன்னையின் நினைவுகளை கண்முன் கொண்டு வந்தார்கள்.

மனு கொடுப்பது பற்றி கேட்டதும், ‘அங்கே ஒரு பெரியவர் எழுதிக் கொடுப்பார்’ என்றார்கள். ‘அதில்லம்மா அத நானே எழுதிக்குவேன். மனு கொடுக்கணும் அத கேட்டேன்’ என்றேன். ‘அதுவா பத்து மணிக்கு மேல வாங்கு வாங்கப்பா’ என்றார்கள்.

எவ்ளோம்மா ஆச்சு?

’35 ரூபாப்பா’ என்றதும் சில்லரையுடன் இருக்க கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.

 

எதிரிலும் ஒரு வட்டச் சாலை. அங்கே, வலதுபுறம் என்றென்றும் மஞ்சள் நிறத்தில் தேவாலயம். அதன் முன்பு நவரச நாயகன் கார்த்திக் நடித்த படத்தின் நியாபகம் நிழலாடியது.

நீலகிரி மலை ராணியின் மருமகன் என்பதில் ஒரு மகிழ்ச்சி. அவருடைய எந்த படமானாலும் இந்நகரின் மையத்தில் ஒரு காட்சியாவது கட்டாயம் படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

என் பால்ய வயதில் (1995-96) மாவட்ட ஆட்சியர் அலுலகத்திற்கு இதுபோல் ஒரு தேவையின் பொருட்டு வந்திருந்தேன்.

அன்றைய தினம் அங்கே ஆட்சியர் அலுவலகம் பின்புறச் சாலையில் கூட்டமாக மக்கள் நின்றிருக்க, ஒருவர் பறந்து வந்து விழுகிறார். அருகே சென்றபோது தான் தெரிந்தது திரைப்பட படப்பிடிப்பு செய்துகொண்டிருந்தனர்.

நவரச நாயகன் கார்த்திக் அடித்து உதைக்கும் காட்சி. இரண்டு தள்ளுவண்டி கடை நிற்கிறது. அந்த வண்டிகளின் பின்புறம் கூட்டத்தில் ஒருவனாக நின்றிந்தேன்.

ஒரு வண்டி மீது வில்லன் ஒருவர் ஏறி நின்றிருந்தார். அவர் முகத்திற்கு நேராக வெள்ளை நிற மானிட்டரை வைத்து பார்த்து, ‘ஓகே சார்’ என்றதும், நின்றிருந்த வில்லன் ‘ரெடியா சார்?’ என்று கேட்டு தயாராக இருந்தார்.

லைட்ஸ் ஆன்…

ரெடி…

டேக்…

ஆக்சன் என்றதும் தான் தாமதம், அவராக உயரே பறந்து அருகிலிருந்த மற்றொரு வண்டி மீது தடார்ரென விழுந்தார்.

‘ஓகே, ஓகே’ இயக்குநர் கூற படப்பிடிப்பு நடந்தது.

அது சுந்தர். சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் சண்டைக் காட்சியாகும். இன்று அந்த இடங்களில் நடந்த போது, அவை கண்முன் மீண்டும் நடக்கின்ற உணர்வை தந்தது.

 

மனுவிற்கு தேவையானவைகளை நகலெடுத்துக் கொண்டு, ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் சென்றேன். கூட்டம் அலை மோதியது.

நூற்றாண்டுகள் கடந்தும் பழமை மாறாமல், அதே பொலிவுடன் பசுமையான புல்வெளிகளுடன், பூக்கள் நிறைந்த வளாகமாக காட்சி தந்தது மனதை மகிழச் செய்தது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்த அழகுடன் இருப்பதாக தெரியவில்லை.

மனு கொடுக்க பதிவெண் இட வரிசையில் ஏராளமானோர் நின்றிருந்தார்கள். வயதான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தார்கள்.

அவர்களுடன் நானும் கலந்து நின்றபோது. வாழ்க்கைக்கு வழித் தெரியாத காலத்தில் இதுபோல எனக்கும் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சுமந்து நின்ற நிகழ்வை மனது அசைப் போட்டது.

யார் யாருக்கு எப்போது என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்காமல் போகாது என்பது என் மனதின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கைதான் 1998 ஜனவரி 1ம் தேதி நடந்தது. நான் இயற்கை பணியில் இணைந்த நன்னாள் ஆகும். இப்போது என் பிள்ளைகளுக்கான ஒரு கோரிக்கை மனுவை சுமந்து நின்றிருந்தேன்.

கூட்டம் முன்னால் நகர்ந்த வண்ணம் இருந்தது. மனுவில் எண்ணிடப்பட்டு கணிணியில் பதிவிடக் கொடுத்தாகி விட்டது.   மாவட்ட ஆட்சியர்  அவர்களை நேரில் பார்த்து கொடுக்க போகும் ஆவலில் கணிணியில் பதிவேற்றிய சான்றிதழுடன் மாடிப் படியேறி சென்றேன்.

 

எல்லா திசைகளிலும் அவர்களை சந்திக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு நிறைந்திருந்த கூட்டத்தில் உள்ளே சென்று ஒரு இருக்கை தேடி அமர்ந்தேன். அப்போது ஒரு அலுவலர் பதிவேட்டில் கையொப்பம் வாங்கியபடி வந்தார்.

வந்திருக்கும் பொது மக்களும் கையொப்பம் இடவேண்டும் போலும் என்ற எண்ணத்தில் கை நீட்ட பதிவேடு பெற்று பார்த்தபோது தான் தெரிந்தது, அமர்ந்திருந்த அனைவரும் அனைத்து துறை அலுவலர்கள்.

நான் தான் அறியாமல் உள்ளே சென்று அமர்ந்துவிட்டேன். கையேட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு “சாரி நான் மனு கொடுக்க வந்தவன்” என்றேன்.

“நீங்க வெளியே இல்ல நிக்கணும் அங்க போங்க” என்றார்கள்.

“நான் வனத்துறையில் பணி புரிகிறேன். ஆனால் மனு கொடுக்க வந்துள்ளேன் “என்றதும் அவர்கள் ஒன்றும் கூறவில்லை.

ஆனாலும் மனு கொடுக்க வந்தவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கும் போது நாம், இங்கமர்வது நன்றன்று என்றுணர்ந்து அறைக்கு வெளியே சென்றேன்.

மீண்டும் வரிசையில் நின்றிருந்த கூட்டத்தில் பின்னால் நின்றேன். கூட்டம் கரைய ஆரம்பித்தது. ஓ! மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்துவிட்டார்கள்.

நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கையை நேரில் சென்று கூறும் ஆவலுடனும், மக்கள் அனைவராலும் பாராட்டப்படு்ம் சிறந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் பார்க்கப்போகும் ஆவலும் மனதுள் மலர அறைக்குள் நுழைந்தேன்.

உள் சென்று மேடையை பார்த்தபோது அங்கே ஆண் அலுவலர்கள் தான் மனுக்களை பெற்று, அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களை அழைத்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆவல் அப்படியே சிறகொடிந்துப் போனது. அலுவலக வளாகத்தில் வைத்திருந்த பல நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்து கொண்டே நகர்ந்தேன்.

மனுவை கொடுத்தேன். என் கோரிக்கை சார்ந்த அலுவலரை அழைத்து, அவர்களிடம் என் மனுவை கொடுத்து வேண்டிய உதவிக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்கள்.

நானும் அது குறித்து அவர்களிடம் விளக்கிக் கூற நம்பிக்கை தெரிவித்து சென்றுவர சொன்னார்கள்.

அலுவலகம் விட்டு வெளியேறினேன். கூட்டம் குறையாதிருந்தது. நினைவை பகிர ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தபோது என் பால்ய நண்பன் நினைவு வர, அலைப்பேசியில் அவர் எண்ணிற்கு தூதுவிட்டேன்.

 

மறுமுனையில் நண்பன்.

“ஹலோ நடராஜ் நல்லா இருக்கிங்ளா?”

“நல்லா இருக்கேன் ராஜன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“எங்க இருக்கீங்க?”

“நான் இங்க கலெக்டர் ஆபிஸுக்கு ஒரு மனு கொடுக்க வந்தேன். உங்க நியாபகம் வந்துச்சு அதான் ஃபோன் பண்ணேன்.”

“வரீங்களா?”

“நான் எப்படி வரதுனுதான் யோசிக்கிறேன்..”

“வண்டியில வரலயா ராஜன்?”

“இல்ல பஸ்ல தான் வந்தேன் அதான் யோசிக்கிறேன்..”

“ஓ.. சரி இருங்க, நா டூவீலர்ல வரேன்” என்று அவர் அங்கே புறப்பட தயாரானார்.

அவர் என் பள்ளித் தோழன். பள்ளிப்படிப்பை நிறைவு செய்த சமயங்களில் நான், சம்சுதீன், மனோஜ் மற்றும் நடராஜ் ஆகிய நால்வரணி தான் எங்கு சென்றாலும் ஒன்றாக இருப்போம்.

நண்பர்கள் மூவரும் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கூடலூரைச் சேர்ந்தவர்கள். நான் கார்குடி.

அன்று யாரிடமும் பழகுவது என்றாலும் கூச்சமாக இருக்கும். என் ஏழ்மை அன்று ஒரு தடையாக இருந்தது. இவர்கள் தான் நான்  எல்லோரிடமும் சகஜமாக பழக உறுதுணையாக இருந்தனர். என்  மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மையை உடைத்தெரிய செய்தவர்கள்.

என் அன்னையின் இறப்பின் போதும் வந்திருந்து மறுநாள் நல்லடக்கம் செய்து திரும்பி வீட்டிற்கு வரும் வரை உடனிருந்த உறவுகள்.

அதிலும் எங்கள் வழக்கில் கோவில் சென்று திதி செய்வதென்பது கிடையாது.  ஆனால் நண்பர் நடராஜ் கோவை பேரூர் அழைத்து வந்து திதி கொடுக்க வைத்து அழைத்துச் சென்று உதவியவர்.

என் வாழ்க்கைப் பாதையில் பல நண்பர்களின் பாதச் சுவடுகளின்றி கடந்து வந்ததில்லை.

 

இதோ வந்துவிட்டார். உருவில் சிறு மாற்றம். எத்தனை வலிகள் இருந்தாலும் புன்னகை முகம். இரு சக்கர வாகனத்தின் பின்புறம் ஏறி அமர்ந்தேன். மூன்று வருடங்கள் கழிந்து சந்திக்கும் தருணமிது.

வாகனத்தை சேரிங்கிராஸ் கடந்து ரோஜா பூங்கா சாலையில் மேலேறி இடது பக்கம் திரும்பி நிறுத்தினார்.

பாதுகாவலர் கேட்டைத் திறந்துவிட FORTUNE RESORT SULLIVAN COURT ல் உள் சென்று நிறுத்தினார்.

ரோஜா பூங்கா அருகில் பிரம்மாண்டமான மூன்று நட்சத்திர உணவகம். உதகை நகரின் மத்தியில் அழகிய உணவகம். வசதி படைத்தவர்கள் வந்து செல்கின்ற இடம்.

நண்பர் அதில் தலைமை சமையலராக பணியில் இருக்கிறார். அவருடைய தீரா உழைப்பு தலைமை சமையலராக உயர்த்தியிருக்கிறது.

என்னை உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தோம்.

“என்ன சாப்டுறீங்க ராஜன்?”

“நீங்களே சொல்லுங்க”

அவரின் உதவியாளரை அழைத்து “இரண்டு காஃபி யும், ச்சீஸ் பிரட் டோஸ்ட் பண்ணி கொண்டு வாங்க” என்று கூறினார்.

பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டோம்.

பிறகு அவர் பணி குறித்தும், எதிர்காலத்தின் திட்டத்தைக் குறித்தும் பேசினார்.

பணியாளர் ச்சீஸ் பிரடும், காஃபியும் மேஜையில் வைத்துவிட்டு போக.. “சாப்பிடுங்க” என்றபடி ஒரு ச்சீஸ் ரொட்டித் துண்டை எடுத்து கடித்து சுவைக்க ஆரம்பித்தார்.

 

நானும் ஒரு துண்டு ரொட்டியை எடுத்து சுவைத்தேன். உப்பு சுவையுடன் நான் சுவைத்திராத உணவு. அவர் அன்பிற்காக உண்டு விட்டு காஃபியை சுவைத்தேன்.

சற்று நேரம் அமர்ந்துவிட்டு சிறிது நேரம் வெளியே நிற்கலாம் என்றேன். அவரும் சரி என்று கூற, வரவேற்பரை வழியே வெளியே வந்தோம். அப்போது அங்கிருந்ததின் நினைவாக  புகைப்படம் எடுத்தோம்.

பிறகு சிறிய குழந்தைகள் விளையாட அமைத்திருந்த திடலில் அமரச் சென்றபோது, அங்கே ஒற்றை பேரிக்காய் மரத்தில் காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

அவர் மரத்தினருகே சென்று காயை பறித்தார். கோத்தகிரி- அரவேணு உறைவிடப் பள்ளியில் தற்காலிகமாக இரண்டு மாதங்கள் தங்கியபோது, அருகிலிருந்த தோட்டத்தில் இதே மாதத்தில் பறித்து உண்ட நினைவை நண்பரிடம் பகிர்ந்தவாறே மிகவும் சுவையுடன் இருந்த பேரிக்காயை ருசித்துப் பார்த்துவிட்டு அமர்ந்தேன்.

சிலமணி நேரம் கடந்ததும், மதிய உணவிற்கு ஏற்பாடு செய்ய, சப்பாத்தியுடன் மீனை உண்டதும்,  என்னை தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

இனிய நினைவுகளுடன்….. நட்பில் அன்பும் ஊடலும் இரண்டற கலந்தது; என்றும் எப்போதும் இருக்கும்.

உதகை பயணம் எனக்குப் புதிதல்ல. ஆண்டில் பலமுறை உதகை கடந்துதான் நான் சென்று வருகிறேன். ஆனால் இம்முறை உதகை பயணம் என்னை எழுத்தாளனின் மனக்கண்ணோடு அனுபவிக்க வைத்தது. அதுவே இக்கட்டுரை எழுதக் காரணம்.

நன்றியுடன்…

என்றும் இயற்கை பணியில்,

ப. ராஜன்
வனவர்
ஆனைமலை புலிகள் காப்பகம்
பொள்ளாச்சி வனச்சரகம்

 

 

 

எழுத்தாளரின் பிற படைப்புகள்

நான் சிறுத்தை பேசுகிறேன்

மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

 

One Reply to “உதகை பயணம் – இனிய நினைவுகள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.