உப்பு சீடை செய்வது எப்படி?

உப்பு சீடை கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்து, இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பதார்த்தங்களுள் ஒன்று.

வீட்டில் எளிய முறையில் சுவையாக, உப்பு சீடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சீரகம் – 1 ஸ்பூன்

எள் – 1 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உப்பு சீடை செய்முறை

முதலில் பச்சரிசியை அலசி ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

 

தண்ணீர் வடிக்கப்பட்ட அரிசி
தண்ணீர் வடிக்கப்பட்ட அரிசி

 

தண்ணீரை வடித்துவிட்டு, மெல்லிய காட்டன் துணியில் அரிசியை விரித்து, 10நிமிடங்கள் உலரவிட்டு, எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பின்னர் சல்லடையில்(சின்ன ஓட்டை உள்ளதில்) போட்டு சலிக்கவும்.

சல்லடையில் மேலே உள்ளதை மீண்டும் மிக்ஸியில் போட்டு, அரைத்து சலித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சலித்து வைத்துள்ள மாவைப் போட்டு, ஈரப்பதம் போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.

 

அரிசி மாவை வறுக்கும் போது
அரிசி மாவை வறுக்கும் போது

 

வறுத்த மாவை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். சல்லடையில் மேலே உள்ளதை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும்.

உளுந்தம் பருப்பை லேசாக சிவக்கும்படி வறுத்து ஆறவிடவும்.

 

உளுந்தை வறுக்கும் போது
உளுந்தை வறுக்கும் போது

 

ஆறிய உளுந்தை மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வறுத்து சலித்த அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள உளுந்தமாவில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்.

மாவுக் கலவையுடன் உப்பு, சீரகம், எள், பெருங்காயப் பொடி, வெண்ணை ஆகியவைச் சேர்த்து ஒரே கலந்து கொள்ளவும்.

 

தேவையான பொருட்கள் கலப்பதற்கு முன்
தேவையான பொருட்கள் கலப்பதற்கு முன்

 

தேவையான பொருட்கள் கலந்து தண்ணீர் சேர்ப்பதற்கு முன்
தேவையான பொருட்கள் கலந்து தண்ணீர் சேர்ப்பதற்கு முன்

 

அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு ஒருசேரத் திரட்டவும்.

 

திரட்டப்பட்ட சீடை மாவு
திரட்டப்பட்ட சீடை மாவு

 

அம்மாவிலிருந்து சிறிதளவு மாவினை (கொட்டைப் பாக்கு அளவு) எடுத்து விரல்களுக்கு இடையில் வைத்து உருண்டையாகத் திரட்டவும்.

உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து உருட்டக் கூடாது.

 

சீடையைத் திரட்டும் போது
சீடையைத் திரட்டும் போது

 

திரட்டப்பட்ட சீடைகள்
திரட்டப்பட்ட சீடைகள்

 

எல்லா மாவையும் உருண்டையாக்கியதும், பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.

எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை போட்டு, பொரித்து எடுக்கவும்.

 

சீடைகளைப் பொரிக்கும் போது
சீடைகளைப் பொரிக்கும் போது

 

சுவையான உப்பு சீடை தயார்.

 

சுவையான உப்பு சீடை
சுவையான உப்பு சீடை

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் துருவலை வறுத்து, சேர்த்து சீடை தயார் செய்யலாம்.

மாவினை உள்ளங்கைகளில் வைத்து அழகான உருண்டையாக திரட்ட வேண்டாம். அவ்வாறு செய்தால் சீடை வெடிக்கும். ஆதலால்தான் விரல்களுக்கு இடையில் கிட்டத்தட்ட உருண்டை வடிவத்திற்கு உருட்டவும்.

மேற்கூறிய முறைகளில் மாவினைச் சலித்து, ஏறத்தாள உருண்டையாக உருட்டி, காய வைத்து செய்தால் சீடை வெடிக்காது.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.