உயிருக்குயிராய்

டென்சன் மிகுந்த காலை பத்து மணி. பெருத்த சப்தத்துடன் ஒலித்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தது கடிகாரம். அனைவரும் சுறுசுறுப்பாய் தம் அலுவலில் ஈடுபட்டனர்.
அக்கம்பெனியில் எம்.டி.ராஜன். இருபத்தேழு வயது இளைஞன். அறிவின் முதிர்ச்சியும், சுறுசுறுப்பும், வேலையில் அவன் காட்டிய அக்கரையும் எம்.டி. யாக அவனை உயர்த்திருந்தது.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் புன்னகை ததும்பும் முகம். இனிய பேச்சு. வருகை பதிவேட்டை நோட்டமிட்டுவிட்டு தன் பணியை தொடர இருக்கும்போது நந்தியாய் புகுந்தது டெலிபோன் குரல்.

அலட்சியமாய் ரிசீவரை எடுத்து காதில் பொருத்தினான்.

“ஹலோ! ராஜன் ஹியர்”

“ராஜன்! நான்தான் வைஷ்ணவி பேசறேன்” குரலில் பதட்டம்

“ஹேய்! வைஷ்! என்ன விசயம்? காலையிலேயே போன் பண்ற? உன் குரல் வேற சரியில்லை என்னம்மா? என்னாச்சு சொல்லு”அன்பாகவும் ஆதரவாகவும் அவன் பேசினான்.

“ராஜன் நான் இப்போ பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து பேசுறேன். புக்ஸ் வாங்க போறேன்னு வீட்ல கதை விட்டுட்டு வந்து போன் பண்றேன். வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு ராஜன். நீதான் எனக்கு ஏதாவது வழி சொல்லணும். பிளீஸ்”

அவள் குரலில் கெஞ்சலும் பயமும் மாறி மாறி டைப் அடித்தன.

“வைஷ்! நீ பயப்படாத. நான் இருக்கேன்ல. நான் இப்போ என்ன செய்யணும் அதச் சொல்லு மொதல்ல”

“நான் உன்கிட்ட நேர்ல பேசணும். பிளீஸ். உன் வேலையை கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு இன்னைக்கு சாயுங்காலம் அஞ்சு மணிக்கு நாம வழக்கமா சந்திக்கிற பெருமாள் கோவிலுக்கு வந்திரு”

“சரி வைஷ்! நீ பயப்படாத. நான் கண்டிப்பா வர்றேன்.”

“ஏமாத்திடாத ராஜன். அஞ்சி மணிக்கு ஓ.கே”

ரிசீவரை வைத்த ராஜன் மனதில் எண்ணங்கள் சுழன்றன. இந்த வைஷ்ணவி எத்தனை அழகான நல்ல பெண். ஆதரவற்ற தன்னிடம் எப்படி அன்பைப் பொழிகிறாள்?

உரிமையுடன் கட்டளை இடுகிறாள். அவளுக்கு கல்யாணமாமே? என்ன செய்வது” என்ற யோசனைகளுடன் வேலைகளில் ஆழ்ந்தான்.

சூரியன் மேற்கைத் தழுவிய நேரம். கோவிலில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ராஜன் வழக்கமாக தான் உட்காரும் இடத்தில் அமர்ந்திருந்தான்.

மணி 5.10

“சே! இந்த பொம்பளைங்களே இப்படித்தான். சரியான நேரத்துக்கு வரமாட்டாங்களே” என சிறிது எரிச்சலுடனும் ஆவலுடனும் வைஷ்ணவியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.

நீல நிற புடவையில் ஓர் தேவதையைப் போல் வந்த வைஷ்ணவி பதற்றத்துடன் இருந்தாள்.

“என்ன வைஷ்! இவ்வளவு நேரம்? ஏன் இப்படி பதட்டப்படுற? ரிலாக்ஸ்மா” அன்புடன் கூறினான்.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வைஷ்ணவி பேச ஆரம்பித்தாள்.

“ராஜன் முதல்ல ஸாரி! வீட்ல இருந்து தப்பிச்சி வர லேட்டாயிடுச்சி. என்னைய வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வர்றாங்க. எனக்கு பயமா இருக்கு ராஜன். எங்க வீட்ட பொருத்த வரைக்கும் அவங்க சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டணும்.இந்த மாப்பிள்ளைய எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. முடிஞ்சிரும் போல தெரியுது”

“ம்” ஒற்றைச் சொல்லில் தன் யோசனையை வெளிப்படுத்தினான்.

எனக்கு பயமா இருக்கு ராஜன்! வர்ற மாப்பிள்ளை என் மனச புரிஞ்சி நடப்பானோ என்னமோ?

நம்ம நட்பை புரிஞ்சி ஆதரிப்பானோ என்னமோ? தெரியல வீட்ல இதப்பத்தி எல்லாம் பேச முடியாது.

எப்படியோ அந்த மாப்பிள்ளை அட்ரஸை அடிச்சிட்டு வந்திருக்கேன். நீதான் மாப்பிள்ளைய பத்தி விசாரிச்சு, என் மனச புரிஞ்சி நடக்கிறவனா இல்லையான்னு விசாரிச்சு சொல்லணும். நீ ஓ.கே சொன்னா தான் நான் ஓ.கே சொல்வேன். செய்வியா ராஜன்?

அவன் கரங்களைப் பற்றி கெஞ்சினாள்.

“கண்டிப்பா செய்றேன் வைஷ். உயிருக்குயிரா பழகுற உனக்கு இதக் கூட நான் செய்யாமல் இருப்பேனா? கண்டிப்பா செய்றேன். நீ கவலைப்படாம போய்ட்டு வா” ஆதரவாக கூறினான்.

நன்றிப் பெருக்குடன் பார்த்த வைஷ்ணவியின் கண்களில் நட்பின் எவரெஸ்டாய் ராஜன் உயர்ந்து நின்றான்.

-மு.அருண்