உயிர்மேல் ஆசை – சிறுகதை

“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”

“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”

“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.

அவங்களுக்கும் பொறுப்பு இருக்கு. எல்லாவற்றையும் உங்க தலையில கட்டிட்டு அவங்க பாட்டுக்கு அவங்கவுங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்காங்க. நல்லாவே மிளகாய் அரைக்கிறாங்க போங்க.

இதையெல்லாம் சொன்னா என்மேல்தான் சீறிப் பாய்வீங்க. உங்க வீட்டு மனுஷங்களைப் பற்றி வாய் திறந்து ஒருவார்த்தை சொல்லிட்டாப் போதும், கோபம் பொத்துக்கிட்டு வந்துடுமே உங்களுக்கு?”

சங்கருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவருக்குள்ளும் சென்ற இரண்டு மாதங்களாக இப்படிப்பட்ட சம்பாஷணைகள்தான்.

“எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், புரிய வைத்தாலும் குத்தலாகவும், குதர்க்கமாகவும்தான் பேசுகிறாள். ‘சே… என்ன வாழ்க்கைடா இது?’ – மனம் ஒடிந்துபோய் ரொம்பவும் விரக்தியடைந்தான் சங்கர்.

இப்படிப்பட்ட சம்பாஷணைகளால் மீராவுக்கும் சங்கருக்கும் கொஞ்ச நாட்கள் பேச்சுவார்த்தை கூட இருக்காது.

‘எதையும் வளரவிடக்கூடாது. குடும்பம் என்றால் ஆயிரமாயிரம் சண்டைகளும், சச்சரவுகளும் இருக்கத்தான் செய்யும். த‌ணிந்து போவதால் என்ன குறைந்துவிடப் போகிறேன்?’ – என்னும் எண்ணத்துடன் சங்கர் வலியச் சென்று மீராவிடம் பேச்சுக் கொடுப்பான்.

அவளிடம் சகஜமாக இருக்க ஆரம்பிப்பான். எல்லாம் விக்கிரமாதித்தன் கதைதான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடும்.

அன்றும் அப்படித்தான். சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு எங்கெல்லாமோ சென்று, யாரைப் பற்றியெல்லாமோ விவாதித்துக் கடைசியில் சங்கரின் அப்பா உடல்நிலை விஷயத்தை வந்தடைந்தது.

“மீரா, சொல்றேன்னு தப்பாய் நினைக்காதே. ரெண்டு வருஷத்துக்கு முன்னால உங்க அப்பா வண்டில போறப்போ ஆக்ஸிடெண்டாகி உயிருக்கு மன்றாடிட்டிருந்தப்போ, நீ என்ன சொன்னே?

டவுன்ல நல்ல டாக்டருக்கிட்டே கூட்டிட்டுப்போய் கவனிக்கச் சொன்னப்போ, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லேன்னு நல்ல பிரைவேட் ஆஸ்பிட்டல்ல சேர்த்து கவனிக்கலே?

எங்கப்பாவை ஜி.எச்-ல நீ சேர்க்கச் சொன்ன மாதிரி உங்கப்பாவுக்கும் நான் சொல்லியிருந்தா நீ சும்மா இருந்திருப்பியா?” என சங்கர் சொல்லி முடிக்கும்முன் மீரா ருத்திரதாண்டவமாடினாள்.

“என்ன சொன்னீங்க? எங்கப்பாவை ஜி.எச்-ல சேர்த்திருக்கணுமா..?

யாரை யாரோடு ஒப்பிட்டுப் பேசறீங்க…?

உங்கப்பாவும் எங்கப்பாவும் ஒண்ணாயிடுவாங்களா?

எங்கப்பா என் பேர்ல எழுதிவச்ச வீட்லதான் இப்போ நாம வாழுறோம். எங்கப்பாவுக்கு இன்னும் ரெண்டு வீடுகள் இருக்கு. ரெண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரர் அவர்.

இந்த வீட்டின் மதிப்பே இன்றைய தேதியில் அம்பது லட்சம் தேறும். என் கல்யாணத்துக்கு வைரத்தோடு, வைர மூக்குத்தி போட்டிருக்கிறார். உங்களுக்கு வரதட்சணையே ஒரு லட்சம் கொடுத்தவர்.

அதுமட்டுமா? தலை தீபாவளிக்குக் கார் வேறு. இவ்வளவு செஞ்சவருக்கு செலவு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யச் சொல்றீங்க?”

“இல்ல மீரா என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா? நான் எந்த அர்த்தத்தில் சொன்னேங்கிறதைப் புரிஞ்சுக்கோ… செலவைப் பற்றி கவலைப்படாமல் உங்கப்பாவை எப்படியாவது உயிர் பிழைக்க வைக்கணும்னு அவர் பெண்ணான நீ எப்படித் துடிச்சே?

அந்த துடிப்பு எனக்கும் இருக்கும்தானே…?

அவரவர் ரத்த சம்பந்தப்பட்ட உறவுன்ன வரும்போது உயிருக்கு போராடிக்கிட்டிருக்கிற நிலையில் எப்பாடு பட்டாவது, கடன்பட்டாவது செலவு பண்ணி காப்பாற்றத்தான் முயற்சிப்பாங்க. அது இயற்கை.” – சங்கர் குறுக்கிட்டுப் பேச, அவனை மேலும் பேசவிடாமல் தொடர்ந்தாள் மீரா.

“எங்கப்பாவுக்குப் பிள்ளை இல்லைங்கிற இளக்காரம் உங்களுக்கு. உங்களை மாப்பிள்ளையாவா பார்த்தாரு…? தன்னோட பிள்ளையாட்டம் வச்சிருக்காரு.

உங்களுக்கு ஆண் பிள்ளைங்கிற ஆணவம், அகம்பாவம். தெரியாத்தனமா விவரம் தெரியாத வயசுல உங்ககிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். உங்ககூட எந்த ஒரு பொண்ணும் வாழமாட்டா.

உங்கப்பா உங்களுக்கு என்ன சேர்த்து வச்சிருக்காரு? உங்க வேலைகூட எங்கப்பா சிபாரிசுல கிடைச்சதுதான்.

தனக்கு பிள்ளையில்லையேங்கிற குறை வேண்டாமேன்னுதான் தூரத்து உறவான உங்களுக்கு எந்த வசதியும் இல்லேன்னு தெரிஞ்சும் என்னைக் கட்டி வச்சாரு. இப்போ பெரிசா பேசறீங்களாக்கும்?”

சங்கர் மனம் சுக்குநூறாக உடைந்தது. மேலும் அவளிடம் பேச விரும்பாமல் மௌனமாக அங்கிருந்து வெளியேறினான்.

மறுநாள் காலை. வழக்கமாக சரியாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடும் வீட்டு வேலை செய்யும் வயதான செல்லம்மாள் மணி ஒன்பது ஆகியும் வேலைக்கு வரவில்லை.

எரிச்சலுடனும் ஆத்திரத்துடனும் அவளைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

வாசலில் ‘அம்மா’ என யாரோ அழைக்கும் குரல்கேட்டு வெளியே வந்தாள்.

செல்லம்மாவின் மகன் முத்து தள்ளாடியவாறே உளறினான்.

“ஆத்தா, குளிக்கும்போது ஆற்றில் வழுக்கி கீழே விழுந்து மண்டைல அடிபட்டு பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறா. விஷயத்தைச் சொல்லிட்டுப் போக்ததான் வந்தேன், வர்றேன்மா…” என்றவன், ஆடியவாறே சென்றான்.

அவனைத் தேடிக்கொண்டு அழுதவாறே வந்த முத்துவின் மனைவி ரஞ்சிதம், மீராவைப் பார்த்ததும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.

“என்ன ரஞ்சிதம், சொல்லு என்னாச்சு?”

“அம்மா பிழைக்க மாட்டாங்க போலிருக்கு. ரொம்பவும் சீரியஸா இருக்காங்க. அம்பது, அறுபதாயிரம் செலவாகுமாம். இல்லைன்னா தர்மாஸ்பத்தரிக்குக் கூட்டிட்டுப் போக சொல்லிட்டாங்க.

குடிகார புருஷனை வச்சுக்கிட்டு நான் என்னம்மா பண்ணுவேன்? அங்க, இங்கன்ன கடன்கேட்டு பத்தாயிரம் ரெடி பண்ணிட்டேன். நீங்க மனசுவச்சு ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கம்மா.

என்னோட தாலி, தோடு, மூக்குத்தி, வீட்ல இருக்கிற ஆடு, மாடு, கோழிங்கள வித்தாவது மீதிப் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவேன்.

உங்க வீட்ல மாடாய் உழைச்சு உங்ககிட்டயும், மத்தவங்கிட்டயும் வாங்கின பணத்தை கொடுத்திடுறேம்மா… மனசு வைங்கம்மா…” என ரஞ்சிதம் புலம்பவும், மீராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

அந்த சமயம் பார்த்து அங்கே வந்த சங்கர் மீராவைப் பார்த்து,

“பார்த்தாயா? ரஞ்சிதம் தன் மாமியாரைக் காப்பாற்ற எப்படித் துடிக்கிறா..? குடிகாரக் கணவனை வச்சிக்கிட்டு என்ன செய்வாள் பாவம்? கடன்பட்டாவது அவன் அம்மாவைக் காப்பாத்தணும்னு நினைக்கிறா.

மாமியாரும் போயிட்டா, அவள் பாடு திண்டாட்டமா போயிடும். கணவனோட நிலைமை இன்னும் மோசமாயிடும். நிறைய குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கிட்டு, அவனும் போயிட்டா என்ன பண்றதுன்னு பயம் அவளுக்கு.

என்னதான் மாமியாரானாலும் தன் கணவனின் அம்மாமேல் அவளையும் அறியாமல் ஒருவித பாசம். கண்ணெதிரில் துவண்டு போய் கிடக்கும் மாமியாரை எப்பாடுபட்டாவது பிழைக்க வைக்க ஆசைபடறா. இது இயற்கை மீரா.

உயிர் என்பது வசதி உள்ளவங்களுக்கும், வசதி இல்லாதவங்களுக்கும், பங்களாவாசிகளுக்கும், பிளாட்பாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒன்றுதான்.

ஏழை, பணக்காரன், வசதி, அந்தஸ்து என்கிற பேதம் எல்லாம் அதற்கு இல்லை.உயிரோடு இருக்கிற வரைக்கும்தான் இப்படிப்பட்ட பாகுபாடுகளை பார்க்கிறோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றெல்லாம் நினைக்கின்றோம்.

உயிர் உடலை விட்டுப் பிரியும்போதுதான் இப்படிப்பட்ட மனோபாவமும் நம்மமை விட்டு விலகுகிறது.” என உணர்ச்சிப் பெருக்கோடு சங்கர் பேசவும், மீராவின் தவறான மனோபாவமும் அறியாமையும், சுயநலத்தன்மையும் அந்த நிமிடமே அவள் மனதை விட்டு மறைந்தது.

தலைகுனிந்தவாறே, “ரஞ்சிதம் கேட்ட ஐயாயிரம் ரூபாயை உடனே கொடுத்தனுப்புங்க” சங்கரிடம் கூறினாள் புதியவளாக மாறியிருந்த மீரா!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

2 Replies to “உயிர்மேல் ஆசை – சிறுகதை”

  1. அருமையான கதை.

    நிஜ உலகில் இப்பொது நடக்கும் தனிக்குடித்தனம், மாமியார் கொடுமை எல்லாமே நம் மனம் தவறாக புரிந்து கொள்வதே! என்பதை அழகாக விளக்கியுள்ளது சிறப்பு.

    எல்லா நிகழ்கால கணவன் போல கணவன் கதாபாத்திரம் சிரிக்க சிந்திக்க வைக்கிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.