உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7

எங்கள் கல்லூரி சார்பாக வருடா வருடம் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

நான் வேலைக்குப் புதிதாக சேர்ந்த காலம் அது. அப்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ மாணவியருக்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தும் முறை இருந்தது.

இந்த வகுப்புகளில் பள்ளியில் நடத்தும் பரீட்சைகளில் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவச் செல்வங்களே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் அவர்களின் மதிப்பெண்கள் எடுக்கும் விகிதத்தில் நல்ல வளர்ச்சியினைக் காணமுடியும்.

அதாவது அதுவரை 80% எடுத்த மாணவர்கள் 85 மற்றும் 90% என எடுப்பார்கள். அதேசமயத்தில் சராசரியாக 95% எடுத்து வரும் மாணவர் அதனை 96 சதவீதமாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுவதை நாம் கண்கூடாக பார்க்க இயலும்.

எனது பேராசிரியர் சண்முகசுந்தரம் அவர்கள் இவ்வாறு அடிக்கடி கூறுவார்.

“சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனை நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாக மாற்றுவதற்கு சில பயிற்சிகளும் யுக்திகளும் சொல்லிக் கொடுத்தால் போதும். ஆனால் அதே மாணவனை மிகச் சிறந்த அல்லது முழுமதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாக்க மிகவும் பிரயாசைப்பட வேண்டும்”.

ஐஐடி மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளில் 0.25 அல்லது 0.5 மதிப்பெண்களில் தனக்குரிய இடத்தை தவற விடும் மாணவ மாணவியர் நிறைய பேரை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒலிம்பிக் போட்டியில் கூட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மைக்ரோ செகண்ட் தாமதத்தினால் தங்கப் பதக்கத்தினை இழந்த வீரர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு மைல் என்பதனை 63,360 அங்குலங்களாகப் பகுக்க முடியும். பல மைல்கள் சுற்றளவில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில், ஒரு அங்குல வித்தியாசத்தில் பல மில்லியன் டாலர்களைக் தவற விட்ட குதிரைகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

எனவே ‘இன்னும் கொஞ்சம்’ என்பது, எல்லோராலும் சொல்லப்படக் கூடிய எளிதான ஆலோசனைதான்.

அதே நேரத்தில் அதனை செயலாக்க முனைபவருக்கு மட்டும்தான் தெரியும் அது எவ்வளவு கடினமானது என்று;

மேலும் அதனை அடைவதற்கு எவ்வளவு அதிகமாக மற்றும் நுணுக்கமாக உழைக்க வேண்டும் என்று.

ஆழத்தின் பலன்

இப்படித்தான் ஒருவர் ஒரு மாலை நேரம் கடற்கரைக்குப் போனார். கடற்கரை மணலில் அமர்ந்தபடியே நல்ல த‌ண்மையான காற்றினை அனுபவித்தார்.

கடற்கரையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள் மற்றும் விளையாட்டுக்களை ரசித்தார்.

இரண்டு மணி நேரங்கள் எப்படிப் போனது என்றே அவருக்குத் தெரியவில்லை. பொன்மாலைப் பொழுதில் கடற்கரைக் காற்றினை வாங்கிய புத்துணர்வுடன் அவர் வீடு திரும்பினார்.

அது போலவே மற்றொரு நபரும் கடற்கரைக்கு வந்தார். வந்த அவர் கடல் நீர் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பரந்து விரிந்து இருப்பதைப் பார்த்து வியந்தார்.

‘குளத்துத் தண்ணீர் போல கலங்கிய நிலையில் இல்லாமல் இந்தத் தண்ணீர் தெளிவாகவுள்ளதே!’ என்று வியந்து அவர் கடல்நீரை சுவைத்துப் பார்க்க எண்ணி ஒரு கையளவு எடுத்துப் பருகிப் பார்தார். அது பயங்கரமாக உப்புக் கரித்தது.

உடனே அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது. கடற்கரை அருகே கடல்நீரை ஒரு பாத்தி கட்டி அதில் தேக்கி, சூரிய ஒளியில் தண்ணீரை ஆவியாகச் செய்தார்.

நீர் ஆவியான பின் பாத்திகளில் படிந்திருக்கும் உப்பினை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இப்படியே அவர் ஒரு உப்பள அதிபராக மாறி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

மற்றொரு நண்பரும் கண்ணுக் கெட்டும் தூரத்துக்கு அப்பாலும் பரந்து விரிந்து கிடந்த கடலினைப் பார்த்தார்.

ஒரு படகினை ஏற்பாடு செய்து கடலுக்குள் பயணம் செய்து அங்கிருந்த பெரிய பெரிய மீன்களைப் பிடித்து வந்தார்.

அனைத்தும் நல்ல விலைமிக்க வஞ்சிர மீன்கள். அவற்றை விற்று கைநிறைய பணம் பெற்றார். இப்படியே தொடர்ந்து செய்து அவர் பெரிய மீன் வணிகராக மாறி நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

இன்னொருவரும் அந்தக் கடலைப் பார்த்தார். நடுக்கடலுக்கு ஒரு விசைப்படகில் சென்று அங்கே கடலில் குதித்து மூச்சடக்கி மூழ்கி கடலின் அடிவாரத்தில் குவிந்து கிடந்த முத்துக்களை அள்ளி வந்தார்.

முத்துக் குளித்த அவர் பெரிய முத்து மற்றும் நவரத்தின வணிகராகி பெரிய செல்வந்தராகப் மாறிப்போனார்.

இந்த நான்கு பேருமே பார்த்தது ஒரே கடல்தான்.

மேலோட்டமாக கடற்கரைக்குச் சென்றவர் காற்று மட்டும் வாங்கித் திரும்பிச் சென்றார்.

இரண்டாமவர் இன்னும் கொஞ்சம் அதனை நுகர்ந்ததனால் ஓர் உப்பள அதிபராக மாறினார். மூன்றாம் நபர் மீன் வணிகராகவும் மற்றும் நான்காம் நபர் முத்து வியாபாரியாகவும் மாறினர்.

ஒருவருக்கு ஒருவர் இன்னும் கொஞ்சம் நுண்ணியமாக கடலை கற்றுக் கொள்ள நினைத்ததன் பலன் எவ்வளவு உயரியது என்பதனைத் தெளிவாக அறிந்தோம்.

அகல உழுவதை விட ஆழ உழவதே மேல்‘ என்று சொல்லுகிறது ஒரு தமிழ் பழமொழி.

அதாவது ஒரு விவசாயி தனது நிலத்தினை ஆழமாக உழவு செய்யும்போது மணிச்சத்து தாங்கியிருக்கும் அடிமண் புரண்டு மேலே வரும். எனவே அதில் செய்யப்படும் பயிர்கள் செழித்து வளரும்.

அது போலவே, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், கலைகளைக் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்து கொள்ளல் அவசியமாகும். அதுவே ஒருவரை தேர்ந்த மேதையாகச் செய்யும்.

ஆழ்ந்து கற்றவன் வகுப்பில் முதல் மாணவன் ஆகிறான்

ஆழ்ந்து சிறுதொழில் செய்பவர் தொழிலதிபர் ஆகிறார்

ஆழ்ந்து புற உலகைப் பார்ப்பவர் விஞ்ஞானியாகிறார்

ஆழ்ந்து தன்னைப் பார்பவர் மெய்ஞானியாகிறார்.

எனவே எந்த ஒரு செயலிலும் போதும் என்று திருப்தி கொள்ளாமல், இன்னும் கொஞ்சம் என அதனை ஆழ்ந்து நோக்கும் போது வளர்ச்சி சாதனை என்பது சாத்தியமாகிறது. இதைத்தான் Extra mileage அல்லது Extra credit யுக்திகள் என்றெல்லாம் சொல்லுவார்கள்.

இந்த இன்னும் கொஞ்சம் பயிற்சியினால் உச்சம் தொட்டு உருப்படியான ஒரு உயர்ந்த மனிதராவது சாத்தியமானதே!

மேலும் உற்று நோக்குபவன் கற்றுக் கொள்கிறான் என்று சொல்லுவார்கள். அது சார்ந்த இரண்டு அழகிய சம்பவங்களை அடுத்துக் காண்போம்.

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

அடுத்தது உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8

முந்தையது இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6

4 Replies to “உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.