உருளை பூண்டு கார குழம்பு செய்வது எப்படி?

உருளை பூண்டு கார குழம்பு அசத்தலான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குழம்பு ஆகும். இதனை சட்டென செய்து விடலாம்.

இதனை தயார் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வெந்தயம் சேர்த்து இக்குழம்பை தாளிதம் செய்வதால் மணமும் சுவையும் கூடும்.

இனி சுவையான உருளை பூண்டு கார குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1 எண்ணம் (நடுத்தர அளவு)

தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

சின்ன வெங்காயம் – 50 கிராம்

வெள்ளைப்பூண்டு – 5 பற்கள் (பெரியது)

கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மசாலா தயார் செய்ய

மசாலா பொடி – 1& 1/2 ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் – 3 எண்ணம்

தண்ணீர் – தேவையான அளவு

மண்டை வெல்லம் – நெல்லிக்காய் அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

செய்முறை

உருளை கிழங்கினை நன்கு கழுவி தோலுடன் 1/2 இன்ச் அளவுடைய கனசதுரமாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தக்காளியை அலசி விழுதாக்கிக் கொள்ளவும்.

புளியை கால் டம்ளர் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் மசாலா பொடி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

மசாலா பொடி, சின்ன வெங்காயம் சேர்த்ததும்
மசாலா பொடி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்ததும்

அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர் சேர்த்து லேசாக சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

புளித் தண்ணீர் சேர்த்ததும்
புளித் தண்ணீர் சேர்த்ததும்
தேவையான மசாலா
தேவையான மசாலா

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

கடுகு வெடித்ததும் அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பூண்டு சேர்த்ததும்
பூண்டு சேர்த்ததும்

ஒருநிமிடம் கழித்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதினைச் சேர்க்கவும்.

தக்காளி விழுது சேர்த்ததும்
தக்காளி விழுது சேர்த்ததும்

இரண்டு நிமிடம் கழித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும்.

மசாலா விழுது சேர்த்ததும்
மசாலா விழுது சேர்த்ததும்

எண்ணெய் பிரிந்து வந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கினை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து மசாலா கலவையில் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

எண்ணெய் பிரிந்ததும்
எண்ணெய் பிரிந்ததும்
உருளைக்கிழங்கு சேர்த்ததும்
உருளைக்கிழங்கு சேர்த்ததும்

பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்துக் கிளறவும்.

கொத்தமல்லி இலை சேர்த்ததும்
கொத்தமல்லி இலை சேர்த்ததும்

அதனுடன் 2 டம்ளர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு மூடி எட்டு நிமிடங்கள் வேக விடவும்.

அவ்வப்போது குழம்பைக் கிளறி விடவும்.

கொதி வந்ததும்
கொதி வந்ததும்

பின்னர் கிழங்கு வெந்ததை உறுதி செய்து அதனுடன் மண்டை வெல்லத்தை சேர்த்து சிம்மிலேயே வைத்து கொதிக்க விடவும்.

ஓரிரு நிமிடங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான உருளை பூண்டு கார குழம்பு தயார்.

இதனை வெள்ளை சாதம் மற்றும் அப்பளம், வடகத்துடன் சேர்த்து உண்ணலாம். இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் கூட தொட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக மல்லிப் பொடி, சீரக பொடி, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து குழம்பு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.