உறைகுருதிக்கு அனல்காய்க

தாய்ச்சி யான தமிழ்நிலத்தில்
தவத்தால் வந்து பிறந்தவனே
காய்ச்சுப் பாலின் சுவையெனவே
கன்னல் தமிழைக் கொண்டவனே
வீச்சும் கைவாள் எறிதிறலில்
வெங்கான் சீயம் தலைவிழவே
பீய்ச்சுங் குருதிப் புனல்நடந்து
புழுதிக் காட்டை உழுதவனே

மானம் வீரம் இருவிழியின்
மாண்பாய்க் கொண்ட இளையவனே
தானம் தவத்தில் இமயத்தினும்
சாலப் பெருமை உடைத்தவனே
கூனல் குன்றல் குறைகளின்றிக்
குமுகக் குடியைச் செய்தவனே
வானம் நிமிர்ந்தே உனைபார்க்க
வாழ்க்கை நெறியை வகுத்தவனே

அறத்தாய் கொப்பூழ்க் குடிப்பிறந்த
அரிமா வேங்கை இனத்திறவே
மறத்தாய் மடியின் பால்குடித்த
மாண்பே மாறா அறக்கடலே
பொறுத்தாய் என்றால் நிலம்நாண
பொன்றாப் புகழை எய்தவனே
வெறுத்தாய் என்றால் நிலம்நடுங்க
வெறுக்கை உரத்தைக் கொண்டவனே
(வெறுக்கை-மிகுதி)

நிமிர்ந்தால் நெற்றி நிலவுரசும்
நிறைந்த அறிவைக் கொண்டவனே
அமர்ந்தால் ஆழக் கடல்வெளிகள்
அடியைத் தொழவே திகழ்ந்தவனே
திமிர்ந்தால் ஞாலம் பொடிபடவே
திறத்தோள் வலியைப் பெற்றவனே
அமிழ்தம் அன்ன இலக்கியங்கள்
ஆக்கி மகிழ்ந்த கொற்றவனே

மண்டிக் கிடந்த புகழொளிகள்
மங்கித் தேய்ந்து மாண்பழிந்து
நொண்டி நடந்து நொய்மையுற்று
நோனா உடலாய்த் தொய்வுற்றே
உண்டிக் கலையும் நிலைகண்டும்
உறக்கம் வளர்க்கும் மாண்டமிழா
அண்டிப் பிழைக்கும் சிறுகூட்டம்
அடிமைச் செய்வதை அறிகிலையோ

கணக்கில் தொண்டைக் கதறியதைக்
காதில் வாங்க மறுத்தனையே
பிணக்கில் முதுகைக் காண்பித்துப்
பித்தம் பிடித்துத் திரிந்தனையே
சுணக்கில் சோர்வில் வீழ்ந்தனையே
சுருங்கிப் போகப் பழகினையே
வணக்கி வைத்த வடவருக்கே
வாழ்நாள் அடிமை ஆகினையே

ஏச்சும் இழிவும் கொண்டனையே
இரும்பா கல்லா உன்னுடலம்
காய்ச்சும் ஈயக் குழம்பெடுத்துக்
காதில் வார்த்தும் கவலின்றிப்
பேச்சும் மூச்சும் பிறசெயலும்
பேதைச் செயலாய் மலர்த்தினையே
ஓச்சும் கைகள் இரந்தபின்னும்
உயிரை உடலில் கொண்டனையே

எதுவும் இல்லை உனக்கிங்கே
எல்லாம் அவனே கைக்கொண்டான்
மதுவில் உன்னை மூழ்கவிட்டு
மயக்கம் தெளிந்தால் திரையிட்டான்
பொதுவில் பெண்ணைப் புணர்ந்தாலும்
பொங்கா திருக்கப் பழக்கிவிட்டான்
உதவா தினியும் உன்தயக்கம்
உடனே வெடிப்பாய் அணுபிளப்பாய்

சிலந்தி வலைதாம் பகைப்புலமுன்
சீழ்க்கை ஒலிக்கே தெறித்துவிடும்
உலர்ந்த இலைதாம் உன்பகைமை
ஒற்றை உலுக்கலில் உதிர்ந்துவிழும்
அலகில் இருளாம் அழிம்பரையுன்
அனல்காய் பார்வை யெரித்துவிடும்
நலத்தை உறிஞ்சும் நரியரையுன்
நாக்குத் துருத்தல் விரட்டிவிடும்

உறைந்த குருதிக் கனல்காய்ந்துன்
உடைந்த இனத்தை மீட்டெடுப்பாய்
மறைந்து வாழும் மாண்டமிழர்
மலர்ந்து குலுங்க வழிசமைப்பாய்
நிறைந்த அறிவைக் கொண்டிருந்தென்
நீநான் பேதம் அழித்தொழிப்பாய்
இறைந்து கிடத்தல் இனியில்லை
எண்ணித் துணிவீர் தமிழோரே

ஆதிகவி(எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி 8667043574

2 Replies to “உறைகுருதிக்கு அனல்காய்க”

  1. எனது கவிதையை வெளியிட்டு இனிய உணர்வை நெஞ்சில் இழையோடவிட்ட “இனிது” இதழுக்கு என் அன்பு முத்தங்கள்.

    அழகாக கோத்த முத்துமணி மாலை போல இதழை வடிவமைத்து வெளியிட்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகை தமிழ்த்திரு.முனீஸ்வரன் அவர்களுக்கும் கவிதையை என்னிடமிருந்து வாங்கி அவரே இவ்விதழுக்கு அனுப்பி வைத்து அழகு பார்க்கும் அன்பு அண்ணன் கவிஞர்.திரு.கவியரசன் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.