உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல் 48

ஜீன் 05. உலகச் சுற்றுச்சூழல் நாள். அன்று காலையில் இருந்தே எனக்கு பல்வேறு நிகழச்சிகள் இருந்தன.

முதலில் நீர் மாசுபாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான ஒரு ஆய்வரங்கத்தில் கலந்துக் கொண்டேன்.

அதன் பின்னர், காணொலி வாயிலாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ′புதிப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள்′ பற்றிய உரை நிகழ்த்தினேன்.

அடுத்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இருந்தது. அதுவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்தது தான்.

அடுத்துக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்றேன்.

மாலையில் குடியிருப்பு நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற ஒரு விழாவிலும் பங்கேற்றேன்.

அந்த விழாவில் எனக்கு கொடுத்த செடிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். நேராக மாடிக்குச் சென்று அந்தச் செடிகளை தொட்டியில் நட்டுவைத்தேன். பின்னர் அங்கிருந்த பிற செடிகளுக்கும் நீர் ஊற்றினேன்.

கிட்டத்தட்ட நேரம் மாலை ஆறு மணிக்கு மேல் இருக்கும். உடல் சோர்வு மிகுதியாக இருந்தது.

மாடியிலிருந்து கீழே வந்தேன். குழாயை திறந்து நீரை ஒரு வாளியில் பிடித்தேன். முதலில் கைகளை சோப்பு போட்டு கழுவினேன்.

அப்பொழுது ″என்னாச்சு சார்?″ என்றக் குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. மெதுவாக மீண்டும் கைகளை கழுவ, ″என்னாச்சு சார்?″ என்ற குரலை மீண்டும் கேட்டேன்.

நீர் தான் கேட்கிறது என்பதை அப்பொழுது உணர்ந்தேன்.

″நீர் தான?″

″ஆமாங்க… என்ன இன்னிக்கு ரொம்ப சோர்ந்து போய் இருக்கீங்க? என்னாச்சு?″ நீர் கேட்டது.

″இன்னிக்கு உலகச் சுற்றுசூழல் நாள். சில நிகழ்ச்சிகள்ல அடுத்தடுத்து கலந்துக்க வேண்டியிருந்தது. அதான் கொஞ்சம் சோர்வாயிருக்கு. வயசாகுதில்ல″

″ஓ சுற்றுச்சூழலுக்கான நாளா?″

″ஆமாம்″.என்றேன்.

அப்பொழுது ′உலக நீர் நாள்′ இருப்பது என் நினைவிற்கு வந்தது.

உடனே, ″உனக்காகவும் ஒரு நாள் இருக்கு தெரியுமா?″ என வாளியில் இருந்த நீரைப் பார்த்துக் கேட்டேன்.

″எனக்கா?″

″ஆமாம். ஒவ்வொரு வருஷமும் மார்ச் 22, உலக நீர் நாளா கொண்டாடப்படுது.″

″அப்படியா! மகிழ்ச்சி சார்″

″இம்ம்.. 1993 ஆம் ஆண்டுல இருந்து தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் நாள் கொண்டாடப்படுது.″

″ஆமா, எதுக்காக உலக நீர் நாள் கொண்டாடப்படுது?″

″அப்படிக் கேளு. நன்னீரோட முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்வதற்காகத்தான். குறிப்பா, 2030-ஆம் ஆண்டுக்குள்ள உலகத்துல இருக்கும் எல்லோருக்கும் நீர் மற்றும் சுகாதாரம் தடையில்லாம கிடைக்கணும் என்பது தான் உலக நீர் நாளின் முக்கிய நோக்கம்.″

″நல்லது சார். இந்த நாள்ல என்ன செய்வீங்க?″

″அன்று, நீரின் முக்கியத்தும் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வ, செய்திகள், புத்தக வெளியீடுகள், சமூக ஊடகங்கள், பிரத்யேக இணையதளங்கள் உள்ளிட்ட பலவழிமுறைகள் மூலமா பல்வேறு நாடுகளில் இருக்கும் கோடிக்ககணக்கான மக்களிடையே ஏற்படுத்துறாங்க.″

″இதனால என்ன நடக்கும்?″

″நீரோட முக்கியத்துவத்த உணர்ந்தா அத வீணாக்க மாட்டோம். நீர் நிலை மாசுபாடுகளை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.″

″ஓ..ஓ..″

″இன்னொரு தகவலும் இருக்கு. அது என்னென்னா, ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருள முன்வச்சு உலக நீர் நாள் முன்னெடுக்கப்படுது. அந்த வகையில, 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள் “நீரும் கலாச்சாரமும்” என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.″

″சார் இதுக்கு முன்னாடி நீருக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்ப பத்தி நீங்க எனக்கு சொன்னீங்க தானே?″

″நினைவுல இருக்கா?″

″இருக்கு சார்″

″சிறப்பு″

″சரி சார். இந்த 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்ன?″

“நிலத்தடி நீர், கண்ணுக்குத் தெரியாததைக் காணக் கூடியதாக மாற்றுதல்” இது தான் இந்த 2022-ஆம் உலக நீர் நாளின் கருப்பொருள்″

″உம். நிலத்தடி நீர மையமா வச்சு கொண்டாடப்படுதா?″

″ஆமாம். நிலத்தடி நீர்ப் பற்றி ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கேன். இது பூமியில இருக்கும் மிகப்பெரிய நன்னீர் ஆதாரம்.″

″ஆமா சார். நீங்க முன்னாடி நிலத்தடி நீர் பற்றி சொன்னீங்க.″

″உம்ம்.″

″சரி சார். நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. மொதல்ல போய் ஏதாவது சாப்புடுங்க, நான் கிளம்புறேன்″ என்றுக் கூறி நீர் சென்றது.

கை கால்களை கழுவிக் கொண்டு வீடிற்குள் நுழைந்தேன் தேநீர் அருந்துவதற்காக.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.