உலர்பழ கடலை உருண்டை செய்வது எப்படி?

உலர்பழ கடலை உருண்டை ஆரோக்கியமான, அசத்தலான இடைவேளை உணவுப் பொருள். இதனைத் தின்று விட்டு தண்ணீர் குடித்தால் பசி அடங்கும்.

உலர் பழங்கள், கொட்டை வகைகள், கடலை, தேங்காய் என புரதம், கார்போஹைட்ரேட், நல்லக் கொழுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுவதால் இது சரிவிகித உணவாகவும் திகழ்கிறது.

இதனைத் தயார் செய்து ஒருவாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் இதனைக் கொடுத்து அனுப்பலாம். இதனைத் தயார் செய்ய குறைந்த காலஅளவே ஆகும்.

இனி சுவையான உலர்பழ கடலை உருண்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நிலக்கடலை பருப்பு – 1 கப்

எள் – 1 கப்

பிஸ்தா பருப்பு – 1/3 கப்

பாதாம் பருப்பு – 1/3 கப்

வால்நட் – 1/3 கப்

தேங்காய் துருவல் – 1/3 கப்

கிஸ்மிஸ் – 10 எண்ணம்

பேரீச்சை – 2 எண்ணம்

நாட்டுச் சர்க்கரை – 1&1/2 கப்

தண்ணீர் – 1/4 கப்

ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை

நிலக்கடலைப் பருப்பினை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து ஆற விடவும்.

நிலக்கடலையை வறுக்கும் போது

பின்னர் நிலக்கடலையின் தோலினை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

நிலக்கடலையை அரைத்ததும்

வெறும் வாணலியில் எள் சேர்த்து பொரியும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

எள்ளை வறுக்கும் போது
அரைத்த எள்ளை சேர்த்ததும்

பிஸ்தா, வால்நட் மற்றும் பாதாம் ஆகியவற்றை வெறும் வாணலியில் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வால்நட், பிஸ்தா மற்றும் பாதாமை வறுக்கும்போது
வால்நட், பிஸ்தா மற்றும் பாதாமை அரைத்ததும்

தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து நீர்ச்சத்து முழுவதும் நீங்கும் வரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

வறுத்த தேங்காய் துருவல்

கிஸ்மிஸ் மற்றும் பேரீச்சையை பொடித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கொர கொரப்பாக அரைத்த நிலக்கடலை, எள் மற்றும் பிஸ்தா, பாதாம், வால்நட் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வறுத்த தேங்காய் துருவல் சேர்த்ததும்

அதனுடன் வறுத்த தேங்காய் துருவல், நறுக்கிய கிஸ்மிஸ் மற்றும் பேரீச்சையைச் சேர்த்து ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

நறுக்கிய கிஸ்மிஸ் சேர்த்ததும்
நறுக்கிய பேரீச்சை சேர்த்ததும்
ஒருசேரக் கலந்ததும்

நாட்டுச் சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்ததும்
சர்க்கரை தண்ணீர் கொதித்ததும்

கொதித்து ஓரிரு நிமிடங்களில் சர்க்கரைக் கரைசலை பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே வைத்து ஒருகம்பி பதத்தைச் சரிபார்க்கவும்.

ஒருகம்பி பதம் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அதில் கலந்து வைத்துள்ள மாவுக் கலவையைக் கொட்டி நன்கு ஒருசேரக் கிளறி லேசாக ஆற விடவும்.

சர்க்கரைக் கரைசலுடன் மாவினைச் சேர்த்ததும்
உருண்டை பிடிக்கத் தயார் நிலையில்

கைபொறுக்கும் சூட்டில் தேவையான அளவில் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

சுவையான உலர்பழ கடலை உருண்டை தயார்.

உருண்டைகள் நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் நாட்டுச் சர்க்கரைக்குப் பதிலாக மண்டை வெல்லத்தைப் பயன்படுத்தியும் உருண்டை தயார் செய்யலாம்.

வெல்லத்தைப் பயன்படுத்தும்போது வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி பின்னர் அடுப்பில் வைத்து கம்பிப் பதம் தயார் செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.