என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

ஒரு வழக்கமான நாளில் கல்லூரி கேண்டினில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பெண் திடீரென்று பிரவேசித்து என்னருகில் அமர்ந்திருந்த பெண்ணுடன் மிக சுவாரசியமாக சிற்ப கலையைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.

இரண்டு மூன்று நிமிடங்களில் கிளம்பி விடுவாள் என்று நினைத்தேன்.

அப்படி நினைத்தது அவளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ! பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் தன் பேச்சை நிறுத்தவில்லை.

அதே சூழ்நிலையில் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு விலகும் முன் அந்தப் பெண்ணை விளித்து, “கல்லூரி வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க விரும்பும் இடம் இந்த கேண்டீன் மட்டும் தான். எத்தனை சுவையான உணவு இருப்பினும் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சுவைக்க சமயம் கிடைக்காது. எனக்கு தொல்லை கொடுத்தது போல், வருங்காலத்தில் கேண்டினில் உண்ண வரும் எந்த ஒருவரையும் கஷ்டப்படுத்த வேண்டாம், ப்ளீஸ்” என்று சொன்ன எனக்கு, அந்தப் பெண்ணின் தோழியிடம் இருந்து ஒரு கோபமான முறைப்பு தான் பதிலாகக் கிடைத்தது.

மேற்சொன்ன சம்பவத்தில் அந்தப் பெண் என்ன தவறு செய்தாள்? ‘தொல்லை’ என்று குறிப்பிடுவது எதை? என்ற குழப்பம் உங்களுள் எழுந்திருக்கலாம்.

அந்தப் பெண் தன் தோழியிடம் பேசினது தவறில்லை. ஆனால் போதுமான இடமில்லாததால், என் இருக்கையில் என் அனுமதியின்றி பாதி இடத்தை பறித்துக் கொண்டதைத் தான் ‘தொல்லை’ என்கிறேன்.

பெண்களின் உரிமையை பற்றி பேசும் பெரும்பாலான பெண்கள், தான் செய்யும் செயல்களுக்கு விளைவுகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?

‘என் இஷ்டம்; என் உரிமை; நான் இப்படித்தான் இருப்பேன்; யாரும் என்னை கேள்வி கேட்கக் கூடாது’ என்று சிந்தனையில்லாமல் செயல்படுவதனால் எத்தனை இன்னல்கள் மற்றவர்களுக்கு?

முன் குறிப்பிட்டிருந்த பெண்களுக்கு அவர்களது உரிமையை நான் அங்கீகரிக்கவில்லை என்று என் மேல் கோபம்.

ஆனால் தமது பொறுப்பின்மையினால் மற்றவர்களை அல்லல் படுத்துகிறோம் என்று துளி கூட அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒருவருக்கு உரிமை என்று ஒன்று இருந்தால், நிச்சயமாக பொறுப்பு என்ற ஒன்றும் இருக்க வேண்டும்.

இதில் வெறும் முதலாவதை மட்டும் பிடித்துக் கொண்டு, இரண்டாவதை முழுவதுமாக புறக்கணிப்பது சரியல்ல. அவை இரண்டிற்குமே சமமான அக்கறை செலுத்துவது சிறப்பு.

தன்னுடைய உரிமைகளை அறிந்து கொள்வதும், அவற்றை சரியான முறையில் உபயோகப் படுத்துவதும் ஒருவித பொறுப்பு தானே!

ஹ்ரிஷிகேஷ்
குஜராத்

One Reply to “என்னம்மா இப்படி பண்றீங்களேமா?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.