என் ராதையை அறிவாயா? – கவிதை

வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே

என் ராதையை அறிவாயா?

சின்னஞ்சிறு சிரிப்பில்

உன் இன்னிசையை தோற்கடிப்பாள்

அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்

உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்

வாய்மொழி சொற்களால்

உன் ஆழ்க்கடல் சங்கின் ஓசையை மிஞ்சுவாள்

உரையாடலின் போது அவள் உதட்டசைவுகள்

உன் தங்கமீன்களை விழுங்கும்

தென்றலை வருடிச்செல்லும் அவளின் நீண்ட கேசம்

நீ அலை மீது வீசும் இன்னொரு அலையின் அழகை மீறும்

கேசத்தின் வாசம்

கவிச்சில் வாடும் நீ இதுவரை சுவாசிக்காத நறுமணம்

காதல் பார்வைகள், ஒளிந்திருந்து காணும் காட்சிகளால்

புதிய கண் பெற்ற குருடருக்கு நீ

காட்சியளித்த முதல் பார்வையை அழித்தாள்

கண்மணியின் கருவிழிகள்

உன் ஆழ்கடல் ஆழத்தை அலைக்கழிக்கும்

மெல்லிய இடை நீ வீசும் காற்றுக்கு அசையாது

இடுப்பின் வளைவு நீ நெளிந்தோடும் வழிகளை சாய்க்கும்

அவள் கோபம் உன் சுனாமியை சாகடிக்கும்

முதல் முத்தத்தின் சுகம், நீ அச்சிறுபிள்ளையின்

பாதத்தை அலையாய் முட்டிய சுகத்தை தாழ்த்தியது

அவளுடனான வாழ்க்கை என்பது

உன்னுள் வாழும் கோடிக்கணக்கான

ஜீவன்களின் வாழ்வின்பத்தை பெறுவதற்கு ஒப்பாகும்

இப்படி அனைத்திலும் உன்னை மிஞ்சிய ராதையை

கோபத்தில் விழுங்கிக் கொண்டாயோ?

நான் தொலைத்த இடத்திலிருந்து கேட்கிறேன்

என் ராதையை அறிவாயா?

க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.