எள்ளோதரை செய்வது எப்படி?

எள்ளினைக் கொண்டு தயார் செய்யப்படும் கலவை சாதம் எள்ளோதரை ஆகும். இதில் எள்ளும் உளுந்தும் சேர்க்கப்படுவதால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இது உள்ளது.

கோவில்களில் வழிபாட்டில் பிரசாதமாக இச்சாதம் படைக்கப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான எள்ளோதரை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

அரிசி – 200 கிராம்

உளுந்தம் பருப்பு – 25 கிராம்

கருப்பு எள் – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

கறிவேப்பிலை – ஐந்து கீற்று

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 3 எண்ணம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

நிலகடலை பருப்பு – ஒரு கைபிடி அளவு

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை

முதலில் அரிசியை உதிரி உதிரியான சாதமாக வடித்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

நிலக்கடலை பருப்பை தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சேர்த்து வறுக்கவும்.

 

மிளகினை வறுக்கும் போது
மிளகினை வறுக்கும் போது

 

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

 

உளுந்தினைச் சேர்த்ததும்
உளுந்தினைச் சேர்த்ததும்

 

உளுந்து லேசாக நிறம் மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

கறிவேப்பிலையைச் சேர்த்ததும்
கறிவேப்பிலையைச் சேர்த்ததும்

 

பின்னர் இதனுடன் எள்ளினைச் சேர்த்து வறுக்கவும்.

 

எள்ளினைச் சேர்த்து வறுக்கும் போது
எள்ளினைச் சேர்த்து வறுக்கும் போது

 

எள் படபடவென பொரிந்ததும் அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி வறுத்த பொருட்களை ஆற விடவும்.

பின்னர் ஆறிய பொருட்களுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, நிலக்கடலை பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதில் பொடித்து வைத்த எள்ளு கலவை பொடியைப் போட்டு ஒருசேர கிளறவும்.

 

எள்ளுப் பொடியைச் சேர்த்ததும்
எள்ளுப் பொடியைச் சேர்த்ததும்

 

வாயகன்ற பாத்திரத்தில் வடித்து வைத்துள்ள சாதத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் தாளித்த பொருட்களைக் கொட்டி நன்றாகக் கிளறவும்.

 

சாதத்தில் தாளித்தவற்றைக் கொட்டியதும்
சாதத்தில் தாளித்தவற்றைக் கொட்டியதும்

 

சுவையான எள்ளோதரை தயார்.

 

எள்ளோதரை கிளறியதும்
எள்ளோதரை கிளறியதும்

குறிப்பு

எள்ளு பொடி தயார் செய்யும் போது கொர கொரப்புக்கும், மிருதுத் தன்மைக்கும் இடைப்பட்ட அளவில் எள்ளுக் கலவையை பொடித்துக் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் மிளகுக்குப் பதில் மிளகாய் வற்றல் பயன்படுத்தி பொடி தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் உளுந்தம் பருப்பிற்கு பதிலாக உளுந்தம் பயறினைப் பயன்படுத்தி சாதம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.