ஏயர்கோன் கலிக்காம நாயனார் – சுந்தரரைப் பகைத்துப் பின் நண்பரானவர்

ஏயர்கோன் கலிக்காம நாயனார், இறைவனை தன்னுடைய காதலுக்காக தூது அனுப்பிய சுந்தரரை பகைத்து, பின் சூலைநோயால் ஆட்கொள்ளப்பட்டு சுந்தரருடன் நட்பான வேளாளர்.

வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாள மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம் வழிவழியாக சேனாதிபதியாக இருந்து வந்தனர்.

அம்மக்களில் ஒருவராக கலிக்காமன் நாயனார் வாழ்ந்து வந்தார். அவர் தம் வழிதோன்றல்களின் மரபுப்படி சிவவழிபாட்டையும் சிவனடியார் வழிபாட்டினையும் முறையாகச் செய்து வந்தார்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.

சிவனடியார்களின் வியக்கத்தக்க செயல்களையும் அவர்களது பக்திப் பெருக்கின் தன்மையையும் கேள்வியுற்று களிப்பெய்தி வந்தார்.

அப்போதுதான் சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய காதலுக்கு தூதுவராக இறைவனாரை பரவை நாச்சியாரிடம் அனுப்பினார்.

அதனைக் கேள்வியுற்ற ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெரும் அதிர்ச்சியும் கோபமும் கொண்டார்.

‘பெண்ணின் மேல் கொண்ட பேரராசையினால், உலகாளும் நாயகனை, திருமாலும் பிரம்மனும் அறியாத திருவடியை, திருவாரூரின் தேரோடும் வீதியில் அலைய விடுவதா?

இறைவனாரே தூது செல்ல இசைந்தாலும், தொண்டன் எனக் கூறிக் கொள்ளும் சுந்தரன் அவரைத் தூது அனுப்புதல் முறையாகுமோ?’ என்றெல்லாம் எண்ணி மனதில் சுந்தரரின் மீது பெருத்த கோபத்தைக் கொண்டிருந்தார் கலிக்காமர்.

‘இறைவனாரை தூது அனுப்பியவன் நெஞ்சம் எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? அவனை நான் காண்பேன் ஆகில் என்னாகுமோ?’ என்று எல்லோரிடத்திலும் பொருமினார்.

இறைவனாரை தூது அனுப்பியதால் கலிக்காமர் தன் மீது கோபத்தில் இருக்கும் செய்தி சுந்தரர் காதுக்கு எட்டியது.

‘தம்மால் ஒரு அடியவருக்கு ஏற்பட்ட வருத்தத்தை எவ்வாறு போக்குவது?’ என எண்ணினார். தம்முடைய பிழையைப் பொறுத்தருள வேண்டுமாறு இறைவனிடம் வேண்டினார் சுந்தரர்.

சிவனார் சுந்தரரையும் கலிக்காம நாயனாரையும் நண்பராக்க திருவுள்ளம் கொண்டார். ஆதலால் கலிக்காமருக்கு தீரா வயிற்றுச்சூலை நோயை உண்டாக்கினார்.

கலிக்காமர் சூலைநோயால் துடித்துக் கொண்டிருந்தார்.

கலிக்காமரின் கனவில் தோன்றிய இறைவனார் “உனக்கு ஏற்பட்ட சூலை நோயினை தீர்ப்பவன் சுந்தரன் ஒருவனே” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

கனவில் இருந்த எழுந்த கலிக்காமர் இறைவனார் உரைத்ததைக் கேட்டு அதிர்ந்தார்.

அதேசமயம் சுந்தரரிடம் ‘நீ போய் கலிக்காமனுக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயை போக்கு’ என்று ஆணையிட்டார் இறைவனார்.

இறையாணைக் கேட்டதும் சுந்தரர் கலிக்காமரின் சூலையை நோயைப் போக்கி அவருடன் நட்பு கிடைக்க இதுவே சரியான வழி என்று மகிழ்ந்திருந்தார்.

சுந்தரர் இறையாணையின்படி கலிக்காமரின் சூலை நோயை தீர்க்க வருவதாக ஆட்கள் மூலம் கலிக்காமருக்கு சொல்லி அனுப்பினார்.

ஏவலாள் மூலம் சுந்தரர் சூலை நோயை தீர்க்க வருவதை அறிந்த கலிக்காமர் ‘இந்த சூலைநோயால் உண்டாகும் துன்பத்தை ஏற்பேன் அன்றி, பெரிய பிழையைச் செய்த வன்தொண்டனால் உண்டாகும் பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.’ என்று எண்ணினார்.

“வன்தொண்டன் இங்கு வந்து சூலையை நோயை தீர்ப்பதற்கு முன்பு, இச்சூலையையும் அதுபற்றி இருக்கும் வயிற்றையும் கிழிப்பேன்” என்று கூறி உடைவாளால் தன்னுடைய வயிற்றினைக் கிழித்து மாண்டார்.

இதனைக் கண்ட அவருடைய மனைவியார் தம்முடைய கணவர் சென்ற இடத்திற்குச் செல்ல ஆவண செய்யலானார். அப்போது வன்தொண்டர் அருகில் வந்து விட்டார் என்ற செய்தியை ஏவலாள் அவ்வம்மையாரிடம் தெரிவித்தார்.

உடனே அப்பெண்மணி “வருபவர் சிவனடியார். ஆதலால் அவருக்கு உரிய மரியாதையை நாம் தரவேண்டும். இங்கு நடந்தது பற்றி யாரும் அவரிடம் தெரிவிக்கக்கூடாது.” என்று ஆணை பிறப்பித்தார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் உடலை மற்றொரு அறையில் வைத்துவிட்டு வரவிருக்கும் சிவனடியாரை வரவேற்க எல்லோரும் தயார் ஆனார்கள்.

சுந்தரர் குறித்த நேரத்தில் கலிக்காமரின் இல்லத்தில் எழுந்தருளினார். குலிக்காமரின் மனைவியார் அவரை முறைப்படி வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி கால்களை நீராட்டினார்.

அதன் பின்னர் சுந்தரர் அப்பெண்ணிடம் “அம்மையே, ஏயர்கோனுக்கு ஏற்பட்டிருக்கும் சூலையைப் போக்கி அவருடன் சிலநாட்கள் இங்கிருக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அவரைக் காண வேண்டும்.” என்று கூறினார் சுந்தரர்.

அதற்கு அங்கிருந்தோர் “அவருக்கு ஒரு துன்பமும் இல்லை. அவர் உள்ளே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.” என்றனர்.

“அவருக்கு ஒருதீங்கு இல்லை என்றாலும் என்னுடைய மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் நான் அவரைக் காண வேண்டும்” என்று கூறினார் சுந்தரர்.

சுந்தரரின் வற்புறுத்தலால் அங்கிருந்தோர் அவரை அழைத்துச் சென்று கலிக்காமரின் உடலைக் காட்டினார்கள். அங்கே அவர் வயிறு கிழிந்து குடல் வெளியேறி இரத்த வெள்ளத்தில் மாண்டு கிடந்தார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற சுந்தரர் “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே. நானும் இவர் வழியிலேயே செல்வேன்.” என்றபடி கையில் உடைவாளைப் பற்றினார்.

அப்போது கலிக்காமர் இறையருளால் உயிர்பெற்று எழுந்து “நான் நண்பராகி விட்டேன்” என்றபடி சுந்தரரின் கையில் இருந்த வாளைப் பற்றினார்.

அதனைக் கண்டதும் சுந்தரர் வீழ்ந்து பணிந்தார். உடனே ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரரை பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

அதுமுதல் இருவரும் நண்பர்களாகினர். அந்நண்பர்களைக் கண்டு கலிக்காமரின் மனைவியாரும் மகிழ்ந்தார்.

சுந்தரர் கலிக்காமரின் மனஉறுதியைப் பாராட்டினார். மானக்கஞ்ச மாற நாயனாரின் மகள் அல்லவா என்று அவர் மனைவியை வியந்து போற்றினார்.

சிலநாட்கள் அங்கு தங்கிவிட்டு பின்னர் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு நண்பர்கள் இருவரும் சென்று இறைவனாரை வழிபட்டனர். அப்போது சுந்தரர் ‘அந்தனாளன்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானாரை வணங்கினர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் திருவாரூரில் சுந்தரருடன் பரவை நாச்சியார் இல்லத்தில் சிலநாட்கள் தங்கியிருந்து வீதிவிடங்கரை வணங்கிவிட்டு திருபெருமங்கலம் திரும்பினார்.

சிவவழிபாட்டினையும் சிவனடியார் வழிபாட்டினையும் முறையாக மேற்கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் இறுதியில் பேரின்ப வீடாகிய இறைபதம் பெற்றார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுந்தரரைப் பகைத்து பின் நண்பரான ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஏயர்கோன் கலிகாமன் அடியார்க்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.