ஐம்பது ரூபா நோட்டு – சிறுகதை

சென்டிரல் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டதுமே தீர்மானித்துக் கொண்டான் விஜய்.

‘இன்று எப்படியாவது இந்த ஐம்பது ரூபா நோட்டைத் தள்ளி விடணும்.’

பாக்கெட்டிலிருந்து வெகு ஜாக்கிரதையாக எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.

வயிறு எரிந்தது.

‘பாவிப் பயல், எவனோ ஒருத்தன் எங்கிட்டத் தள்ளி விட்டானே இதப் போயி!’

அந்த ஐம்பது ரூபாய் நோட்டைப் பார்க்க பார்க்க முகம் ‘ஜிவ்’வெனச் சிவந்தது.

எண்ணெய் பிசுக்குடன் இருந்தாலாவது பரவாயில்லை. அகலவாக்கில் இரண்டாக மடிக்கப்பட்டு நடுவே கோணி ஊசி செல்லுமளவுக்கு ஓட்டையுடன் காட்சியளித்தது.

எத்தனை பேர்களிடம் கை மாறியதோ?

இன்னும் இருமுறை மடித்தும், பிரித்தும் பார்த்தால் இரண்டு துண்டுகளாகி விடும் நிலையில் இருந்தது.

‘கடைசியில் நாம் ஏமாளியாகி விட்டோமே? நன்றாக ஏமாந்து விட்டோம்!’

விஜய் நொந்து கொண்டிருந்தான்.

கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் வந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பஸ்ஸில் அப்படி ஒன்றும் கும்பல் இல்லை.

‘இப்போது இந்த ஐம்பது ரூபா நோட்டை டிக்கெட்டுக்காகக் கண்டக்டரிடம் நீட்டினால் நிதானமாகப் பிரித்து, முகத்துக்கெதிரே தூக்கிப் பிடித்துப் பார்த்து நிச்சயமாகத் திருப்பித் தந்து வேறு நோட்டுக் கேட்பார்.

அதனால் பஸ் போய் கொண்டிருக்கும்போது நல்ல நெரிசலில் கண்டக்டர் திணறிக் கொண்டிருக்கிற வேளையில்தான் இந்தச் சனியனைத் தள்ளி விடணும்!’

முடிவெடுத்த விஜய் தன் இருக்கையில் கர்சீப்பைப் போட்டுவிட்டுக் கீழே இறங்கி நின்று கொண்டான்.

அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு பஸ்ஸிலிருந்து ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்தது.

“ஏமாறாதே! ஏமாறாதே! ஏமாற்றாதே! ஏமாற்றாதே!”

விஜய்க்கு ஏனோ அப்போதிருந்த சூழ்நிலையில் அப்பாடலை ரசிக்க முடியவில்லை.

எரிச்சலுடன் பஸ்ஸினுள் ஏறி அமர்ந்து கொண்டான்.

கண்டக்டர் இவனது சீட் தாண்டியிருந்தார்.

பஸ் கிளம்பி ஸ்டேஜ்களைத் தாண்டத் தாண்ட தேனடையாக மாறியது. பயணிகள் தேனீக்களாக ஃபுட்போர்டு வரை மொய்த்துக் கொண்டிருந்தனர்.

“டிக்கெட்… டிக்கெட்….”

கண்டக்டர் மறுபடியும் உள்நோக்கி முன்னேறினார்.

விஜய் நெஞ்சு படபடக்கக் கண்டக்டரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினான்.

அது என்னவோ தெரியவில்லை! மனசாட்சியைக் கொன்று, தப்புச் செய்யத் துணிவு பிறந்து விட்டால்கூட, செயல்படுத்தும் போது கூடவே பாழாய் போன படபடப்பும் வந்து விடுகிறது.

ஒருவேளை ஊசலாடும் மனசாட்சியின் ஓலமோ?

கண்டக்டர் விஜய் கையிலிருந்த ரூபாய் நோட்டைக் கவனிக்காமல் நின்று கொண்டிருப்பவர்களிடம் டிக்கெட்டை வழங்கிக் கொண்டிருந்தார்.

விஜய் பார்த்தான்.

யோசித்தான்.

‘ம்ஹூம்! அகலவாக்கில் மடித்துக் கொடுத்தால் கண்டக்டர் பிரித்துப் பார்க்க வாய்பிருக்கு. பேசாம அவர் பாணியையே பின்பற்றுவோம்’ என்று நினைத்தவன், நீளவாக்கில் இரண்டாக மடித்து கையில் ரெடியாக வைத்துக் கொண்டான்.

இப்படிக் கொடுத்தால்தான் கண்டக்டர் அப்படியே வாங்கி விரலிடுக்கில் வைத்துக் கொள்வார்.

புதுத்தெம்புடன் கண்டக்டரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி “ஸ்ரீரங்கம் ஒண்ணு” என்றான்.

‘படக்’கென வாங்கி விரலிடுக்கில் செருகிக் கொண்ட கண்டக்டர், டிக்கெட்டைக் கிழித்து விஜய் கையில் கொடுத்து மீதி சில்லறையைத் திணித்ததும், சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்துவிட்ட பெருமை அவன் முகத்தில் தாண்டவமாடியது.

நியாயமற்ற ஓர் சந்தோஷ அலை உள்ளக்கடலில் வீசியது.

‘அப்பாடா! ஒரு வழியாக அந்த நோட்டைத் தள்ளி விட்டாச்சு. ஒரு பயகூட வாங்கிக்காம எவ்வளவு சிரமம் எனக்கு?

தியேட்டரில், ரேசன் கடையில், காய்கறிக் கடையில், மளிகை கடையில், சந்தையில் என எத்தனையோ இடத்துல இந்த நோட்டைத் தள்ளிவிட முயற்சித்தும் முடியாமல் போயிடுச்சே.

நான்தான் சரியான ஏமாளியா இருந்திருக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டேன் இந்த ஐம்பது ரூபா நோட்டை மாத்த முடியாமல். சனியனை ஒருவழியா பஸ்ஸிலே தள்ளி விட்டாச்சு!’

விஜய் பூரண திருப்தியடைந்தான்.

ஸ்ரீரங்கத்தில் நண்பன் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் ஜங்ஷனுக்குத் திரும்பும்போது பஸ்ஸில் கால் வைக்க முடியாத அளவுக்குக் கும்பல்.

கல்யாணச் சத்திரம் எதிரிலேயே பஸ்ஸை நிறுத்தி ஏறிக் கொண்டதால் உட்கார்ந்து கொள்ள இடமில்லை. விஜய் கூட்டத்தினூடே நசுங்கிக் கொண்டிருந்தான்.

கண்டக்டரிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டி, “ஜங்ஷன் ஒண்ணு” என்றான்.

“சில்லறை வேணும். எல்லோரும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் நீட்டினா சில்லறைக்கு எங்கே போறது?” – கண்டக்டர் அலுத்துக் கொண்டார்.

“வேறு சில்லறையில்லை” என்றான் விஜய்.

“என்ன சார் உங்களோட பெரிய தொல்லையாப் போச்சு. இந்தாங்க சீட்டைப் பிடிங்க. பாக்கியை ஜங்ஷன்ல வாங்கிக்குங்க” என்று அவன் கையில் சீட்டைத் திணித்துவிட்டு நகர்ந்தார் கண்டக்டர்.

“ரயில்வே ஸ்டேஷன் இறங்குறவங்க எல்லாம் படிக்கட்டுக்கு வாங்க. பஸ் உள்ளாறப் போகாது…” என்ற கண்டக்டரின் குரல் கேட்டதும் முண்டியடித்து திணறியபடி படியருகே வந்தான் விஜய்.

வைகையில் சீட் ஒன்று ரிசர்வ் செய்ய வேண்டிருந்தது.

கண்டக்டரிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டி, “ஜங்கன் ஒண்ணு” என்றான்.

“சில்லறை வேணும். எல்லோரும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் நீட்டினா சில்லறைக்கு எங்கே போறது?” – கண்டக்டர் அலுத்துக் கொண்டார்.

“வேறு சில்லறையில்லை” என்றான் விஜய்.

“என்ன சார் உங்களோட பெரிய தொல்லையாப் போச்சு. இந்தாங்க சீட்டைப் பிடிங்க. பாக்கியை ஜங்ஷன்ல வாங்கிக்குங்க” என்று அவன் கையில் சீட்டைத் திணித்துவிட்டு நகர்ந்தார் கண்டக்டர்.

“ரயில்வே ஸ்டேஷன் இறங்குறவங்க எல்லாம் படிக்கட்டுக்கு வாங்க. பஸ் உள்ளாறப் போகாது…” என்ற கண்டக்டரின் குரல் கேட்டதும் முண்டியடித்து திணறியபடி படியருகே வந்தான் விஜய்.

வைகையில் சீட் ஒன்று ரிசர்வ் செய்ய வேண்டிருந்தது.

கண்டக்டரிடம் சில்லறை பாக்கி கேட்க,

“முதல்ல கீழே இறங்குங்க!” என்று சொல்லியவாறே தோல் பையினுள் கையைவிட்டுப் பாக்கிச் சில்லறைகளைப் பொறுக்கி விரலிடுக்கிலிருந்து ரூபாய் நோட்டுகளை உருவிக் கொண்டிருக்கும்போது டிரைவர் பஸ்ஸை எடுத்து அவசரத்தை உணர்த்தினார்.

“இருப்பா, அவசரப்படாதே” என்று டிரைவருக்கு ஒரு கத்தலை அனுப்பிவிட்டு கீழே நின்று கொண்டிருந்த விஜய் கையில், அவசர அவசரமாகப் பாக்கியைத் திணித்தக் கண்டக்டர் விசில் கொடுத்ததும் பஸ் பறந்தது.

நீளவாக்கில் இரண்டாக மடிக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை விஜய் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கையில் நடுவே இருந்த ஐம்பது ரூபாய் நோட்டு அவனது கவனத்தைக் கவர்ந்தது.

மொர மொரப்பான புத்தம் புது சலவை நோட்டு அது!

இதுவரை செத்து விட்டிருந்த மனசாட்சி இப்போது உயிர் பெற்று அவனைப் பார்த்துப் பேய் சிரிப்பு சிரித்தது.

கண்டக்டர் விரலிடுக்கில் எத்தனையோ பல கிழிந்த அழுக்கு ரூபாய் நோட்டுகள் இருந்தும், ரொம்ப கவனமாகப் புத்தம் புது நோட்டாகப் பார்த்து உருவித் தந்திருக்கும் கண்டக்டரின் எண்ணத்தையும், தன் எண்ணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான் விஜய்.

வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்ன,

மனசாட்சியோ கை கொட்டிச் சிரித்தது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.