ஒரு பெண் நினைத்தால் – கதை

அன்றைய காரைக்கால் மிகவும் அமைதியாக இருக்கும்.

காத்தா பிள்ளை கோடியில் உள்ள முத்துப் பிள்ளை ரொட்டி கடையில் பக்கோடா என்றால் பேமஸ்.

அப்போதெல்லாம் பக்கோடாவை பேப்பர் சுத்தி பொட்டலமாக கொடுப்பார்கள். ஒரு பொட்டலம் 75 காசு.

ஒரு மாம்பழ வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு 5 பொட்டலங்களை வாங்கி தன் பழ கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு நடந்தார்.

சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு டைமண்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குள் சென்று பழ வியாபாரி திரும்பி வெளியே வந்தார்.

நீண்ட நாள் பழகிய நண்பர் கண்ணில் பட்டார்.

“அடடே வாங்க பாய், எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஆளையே காணோம்.”

“எங்க நான் இங்கே தான் பா இருக்கிறேன்.”

“ஆமா என்ன கூடையில?”

“கொஞ்சம் பழம் எடுத்துட்டு வந்தேன்.”

“பழம் எப்படி போடுறீங்க?”

“ஒரு டஜன் பத்து ரூபா, 12 ரூபானு போடுறேன். ஆமா நீங்க என்ன கொண்டு வந்து இருக்கீங்க?”

“நானா? பக்கத்துல உள்ள சந்தையில காய்கறி கடை போட்டு இருக்கேன். வாங்க போகலாம்.”

“இல்லப்பா இல்ல. இப்பவே மணி ஒன்றையே தாண்டிடுச்சு. புள்ளைங்க எல்லாம் சாப்பிடாம காத்துகிட்டு இருப்பாங்க. நான் போகணும்.’

“அட வாங்க பாய், நம்பக் கடை பக்கத்துல தான் இருக்குது நாலடி எடுத்து வச்ச கடைக்கு போயிடலாம். அப்படியே நீங்க வீட்டுக்கு போயிடலாம். செத்த நேரத்துல என்ன ஆயிடப் போகுது?”என்று வலுக்கட்டாயமாக கூப்பிட்டர்.

“இல்லப்பா” என்று யோசித்துக் கொண்டே வண்டியை நகர்த்த, இருவரும் சந்தை கடையை அடைந்தனர்.

“வாங்க பாய் இதான் நம்ப கடை. உட்க்காருங்க” என்று ஒரு சாக்கை விரித்தார்.

“இல்லப்பா நான் கிளம்புறேன்.”

“அட உட்காருங்க பாய் போகலாம் …” என்று வலுக்கட்டாயமாக உட்கார வைத்துவிட்டு தன் கடையை பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவரிடம், “டேய் இது யார் தெரியுதா? என் நண்பர்டா” என்று சொல்லிவிட்டு

“aப்புறம் பாய் எப்படி இருக்கீங்க? வீட்ல புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்குது?”

“எல்லாம் நல்லா இருக்காங்கப்பா. ஆமாம் நீங்க எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் பாய். நான் கும்பகோணத்திலேயே செட்டில் ஆகிவிட்டேன். என் ரெண்டு பசங்களுக்கும் தனித்தனியா கடை வைத்து கொடுத்துட்டேன். அப்புறம் நான் வாராவாரம் சந்தையில வந்து கடை போடுறேன். இந்த வாரம் தான் உங்களை நான் இங்கே பார்க்கிறேன். நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. சரி இருங்க. இந்த வரேன்”
என்று சொல்லிவிட்டு எங்கோ சென்று சிறிது நேரத்தில் திரும்பினார்.

கையில் இரண்டு டம்ளரில் ஏதோ குடிக்க கொண்டு வந்து “பாய் இதை சாப்பிடுங்க …”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா. வீட்ல எல்லாம் எனக்காக காத்து இருப்பாங்க.”

“அட கொஞ்சம் சாப்பிடுங்க பாய். ஒன்னும் அதிகமா ஆகிடாது.”

“வேண்டாம் பா.”

“சும்மா சாப்பிடுங்க பாய். பகலெல்லாம் மாடு மாதிரி உழைக்கிறோம். எல்லாம் இந்த புள்ளங்களுக்காக தானே … வெயில் தெரியாது களைப்பு தெரியாது பாய். சாப்பிடுங்க கொஞ்சம்.”

அதற்கு மேலும் மறுப்பு தெரிவிக்காமல் இருவரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்து சாப்பிட்டார்கள்.

“அப்புறம் பாய் பொழப்பு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”

“அதெல்லாம் நல்லா போயிட்டு இருக்குப்பா. ஆண்டவன் எனக்கு எந்த குறையும் வைக்கல. தல தெருவுல தான் இருக்கிறேன். இங்கு சுத்தி உள்ள கிராமங்களில் மா மரங்களை குத்தகைக்கு எடுத்து பொழப்பு நடத்திட்டு இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் சைக்கிள் அருகே சென்று இரண்டு டஜன் பழங்களை ஒரு பையில் போட்டு கொண்டு வந்து நண்பரிடம் கொடுத்தார்.

“வீட்டுக்கு கொண்டு போய் கொடுங்க. நல்லா டேஸ்ட்டா இருக்கும்.”

“இதெல்லாம் எதுக்கு பாய்?”

“பரவாயில்ல நான் கிளம்பறேன்.”

நண்பர் வாங்கி வைத்துவிட்டு “இருங்க… இருங்க…” என்று சொல்லி ஒரு பையில் காய்கறிகளை அள்ளிப்போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.

“ஏம்பா இதெல்லாம்?”

“பரவாயில்ல பாய்.”

“அப்போ நான் கிளம்புறேன் …”

“சரி பாய் அடுத்த வாரம் பார்ப்போம்.”

வியாபாரி சைக்கிளை தள்ளி கொண்டு சிறிது தூரம் நடக்க,

அருகில் ஒரு நொங்கு வியாபாரி நொங்கு விற்று கொண்டு இருக்க அவரிடமும் நுங்கை வாங்கிக் கொண்டு சைக்கிளில் ஏறினார்.

மேலும் சிறிது தூரம் சென்றதும், ஒரு பெண் சைக்கிளை நிறுத்தி பழம் வாங்கினார். சைக்கிள் அங்கிருந்து நகர்ந்தது.

சிறிது தூரம் சென்றதும் சாந்தி தியேட்டர் வாசலில் நின்றிருந்த கடலை வியாபாரியிடம் இரண்டு வார்த்தை பேசி விட்டு குழந்தைகளுக்கு கடலையும் வாங்கிக் கொண்டு சைக்கிள் நகர்த்தினார் தள்ளாட்டத்துடன்.

மூன்று மணிக்கு தலைதெரு முருகத் தோட்டத்தை அடைந்து கேட்டை தட்டினார் வியாபாரி.

“தாஜ் …தாஜ் …தாஜ் ….”

குழந்தை மரியம் ஓடி வந்து கேட்டை திறக்க, சைக்கிளை உள்ளே தள்ளி நிறுத்தினார்.

அடுப்பில் இருந்து சாதத்தை வடித்து இறக்கி வைத்து விட்டு நந்த தாஜ்நிஷாக்கு, தன் கணவர் சைக்கிளின் அருகே தள்ளாட்டத்துடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் கோபம் கொந்தளித்தது.

அதுவரை தென்றலாய் இருந்த தாஜ்நிஷா, புயலாய் உருவெடுத்து சூறாவளியாய் கரையைக் கடந்தாள்.

‘படார்’ என்று ஒரு சத்தம். சைக்கிளுடன் அப்படியே சாய்ந்தார் வியாபாரி.

தாஜிக்கு கையில் கிடைத்தது அவருடைய முடி. பிடித்து ஒரு ஆட்டு. “உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன். இப்படி குடிச்சிட்டு வராதே வராதேன்னு”

“அய்யய்யோ என்னைய விடுடி. விடு …விடு …”

இருவரும் கட்டிப் பிடித்து உருண்டனர்.

“சரிடி விடு. நில்லு நில்லு சொல்றத கொஞ்சம் கேளு. பொறுமையா இரு.”

“என்னத்த கேட்கிறது குடிகார பயகிட்ட.”

“அடியேய் நான் உன் புருஷன்டி. என்னடி வாடா போடான்கிற”

“உனக்கு என்னடா மரியாத கேக்குது குடிகாரா”

“இந்தாடி குழந்தைகள் எல்லாம் பாக்குதுடி. அப்புறம் எப்படி அதுங்க என்னைய மதிக்கும்?”

“உனக்கு என்னடா மதிப்பு கேட்குது. அப்படியே போறப்ப குடிச்சிட்டு சோறு கண்ட இடம் சொர்க்கம். நிழல் கண்ட இடம் தூக்கணும் போக வேண்டியது தானே”

“உனக்கு எதுக்குடா பொண்டாட்டி, புள்ளைங்க, குடும்பம்? உனக்கு குடும்பம் ஒரு கேடா?”

“அடியே ரொம்ப பேசுறடி நீ. ரொம்ப பேசுற.”

“அப்படிதாண்டா பேசுவேன். என்னடா பண்ணுவ”

அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

“என்ன இங்க நடக்குது? இது உங்களுக்கே நல்லா இருக்கா சொல்லுங்க?”

“நான் என்னம்மா செஞ்சேன். நான் ஒண்ணுமே செய்யலமா இங்க பாருங்க. வெளியில போயிட்டு வர ஆம்பளைக்கு அவ குடுக்குற மரியாதையை! புள்ளைங்க எல்லாம் அழுதுகிட்டு நிக்குதுங்க. அப்புறம் அதுங்களுக்கு என் மேல எப்படி மரியாதை வரும்.”

“ஆமாம் இவருக்கு மரியாதை ஒன்னு தான் கேடா? இவரு செஞ்சது தப்பு இல்லையாம். நான் செஞ்சதுலதான் இவருடைய மரியாதை போயிடுச்சாம்.”

“அட சும்மா இருங்க பாபம்மா. நீங்க செய்யறது முறையா பாய்?”

“அட என்னம்மா நீங்களும் என்னை கேள்வி கேட்கறீங்க? நான் அப்படி என்ன செஞ்சுட்டேன். ஊரு உலகத்துல இல்லாததையா செஞ்சுட்டேன்.”

“இப்படி குடிச்சிட்டு குடிச்சிட்டு வந்து என் குடும்பத்தையே அழிக்கிறாரு.”

“நான் ஒன்னும் செய்யலமா! இந்த இருக்குது அவ குடுத்த பழத்துக்கு உண்டான பணம். கணக்கு பார்த்து எடுத்துக்க சொல்லுங்க. அவ என்னமோ என்னால தான் அவ குடி முழுகி போகுதுன்னு சொல்லுறா. அவ குடும்பத்தை அவளையே பார்த்துக்க சொல்லுங்க. எனக்கு ஒன்னும் வேணாம்.”

“கொஞ்சம் சும்மா இருங்க பாய். நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல.”

“பின்ன என்னம்மா”

“நீங்க இப்ப போய் ஏன் குடிச்சிட்டு வந்தீங்க? நல்ல சம்பாதிக்கிறீங்க. நல்லா குடும்பம் பண்றீங்க. பிள்ளைங்களை பாசமா பாத்துக்குறீங்க. இந்த குடி ஒன்னுதான் உங்ககிட்ட பிடிக்காதது. மத்தபடி நல்ல மனுசனா இருக்கீங்க. இந்த குடியை விட்டுடுங்கன்னு தான் அவங்களும் சொல்றாங்க!”

“நான் எங்கம்மா குடிச்சேன்? என் பழைய நண்பன பார்த்தேன்.”

“அவன் வாங்கி ஊத்திட்டானா? அப்படியே போயிட வேண்டியதுதானே ஏன் இங்க வந்த?”

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க பாபம்மா. இனிமே குடிக்க மாட்டாரு. இந்தா மரியம் என்ன பாத்துகிட்டே நிக்கிற? அதெல்லாம் ஒன்னும் இல்ல. கீழ கிடக்கிற பண்டம் பொருள் எல்லாம் எப்படி கிடக்குது பாரு எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துட்டு போய் வச்சுட்டு வந்து அப்பாவை அழைச்சிட்டு போய் படுக்க வை. பாவம் அவர் காலில் வேறு அடிபட்டு ரத்தம் வருது”

குழந்தைகள் அழுது கொண்டே பொறுக்கின.

வியாபாரி தள்ளாடியவாறு நடந்து வர, பக்கத்து வீட்டார் “இந்தப் பாருங்க பாய் இனிமேலாவது நல்ல மனுஷனா இருங்க.. பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருங்க.

இந்தப் பிள்ளைங்க மொகத்தை பாருங்க. இவங்களுக்கு இனிமே தான் எதிர்காலமே இருக்குது. குடிக்கிறத விட்டுட்டு பிள்ளைகளை கரை சேக்குற வழிய பாருங்க …

பாபம்மா அவரு இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டாரு. நீங்களும் இனிமே இப்படி புள்ளைங்க எதிர்க்க நடந்துக்காதீங்க. போங்க அழைச்சிட்டு போயி எல்லாருக்கும் சாப்பாட்டை வச்சி கொடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றனர்.

மறுநாள் காலை, வியாபாரி வழக்கம் போல் எழுந்து பழங்களை எடுத்துக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பும் போது தாஜ் சுதாரித்தவளாய், சிறுவன் பாபுவை தூக்கி கூடைக்குள் உட்கார வைத்து பழங்களையும் வைத்து வியாபாரத்துக்கு வழி அனுப்பி வைத்தாள்.

வியாபாரி சிரித்துக் கொண்டே வண்டியை தள்ள ஆரம்பித்தார்.

தெருக்களில் வழக்கமாக பழம் வாங்கும் பெண்கள் பழத்தை மட்டும் வாங்கவில்லை பாபுவையும் விலை பேசினர்.

“என்ன பாய் இந்த பழம் எவ்வளவு? இதுவும் கொடுக்கிறது தானா?”

“ஆமாம்மா கொடுக்கிறது தான். வாங்க காசு வச்சிருக்கியா?”

“என்ன விலைன்னு சொல்லுங்க வாங்கிடலாம்.”

“அவங்க அம்மாக்கு யார் பதில் சொல்றது? என்னால முடியாதும்மா என்ன ஆள விட்டுடுங்க.”

“அதான பார்த்தேன் பாய். எங்க அவங்க அம்மா ஊருக்கு போய் இருக்காங்களா?”

“ஆமாம்மா சாயங்காலம் வந்திடுவாங்க” என்று பேச்சு முடிந்ததும் வண்டி நகர்ந்தது.

வியாபாரத்தை பார்த்துக் கொண்டே இருவரும் சென்றனர்.

ஓரிடத்தில் பாபு “அப்பா… அப்பா … இது என்னப்பா? இவ்வளவு பெரிய சுவரா இருக்குது.”

“இது அரிசி ஆலைப்பா.”

“அப்படின்னா?”

“அப்படின்னா நெல் அரைக்கிற மில்லுப்பா.”

“அப்புறம் ஏம்பா பூட்டி கிடக்குது?”

“இந்த மில்லு மேல கேஸ் நடக்குது. இந்த மில்லு நம்ப அரசாங்கத்துக்கு வேணுமா. இன்னும் கொஞ்ச நாள்ல நம்ப அரசாங்கத்துக்கு தீர்ப்பாயிடும்”

“அப்புறம் என்ன செய்வாங்க?”

“இந்த இடத்துல பெருசா புதுசா பஸ் ஸ்டாண்ட் கட்ட போறாங்களாம். நிறைய பஸ் வந்து இங்கு நிற்கும் .நாம ஊருக்கு போலாம்ல”

“இந்த செவுத்துல நிறைய படம் ஒட்டி இருக்காங்களே. யாருப்பா அவங்க இங்க ஏன் ஒட்டி இருக்காங்க?”

“அவங்க தாம்பா நம்ப பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மா.”

“அப்படின்னா நம்ப அம்மா மாதிரியா”

“இல்லப்பா இவங்க பெரியவங்க. உனக்கு பாட்டி மாதிரி.”

“அப்படின்னா இவங்க எங்க இருக்காங்க?”

“அவங்க இறந்துட்டாங்களாம் அதான் போஸ்டர் ஒட்டி இருக்காங்க” என்று பாபு கேட்கும் கேள்விக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டே வியாபாரத்தை பார்த்துக் கொண்டு நடந்தார் வியாபாரி.

சிறிது தூரத்தில் ஏழை மாரியம்மன் கோயில் கண்ணில் பட்டது. அருகில் இருந்த பெட்டிக்கடை வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு தன் பாக்கெட்டில் இருந்து சில்லறையை தடவி கற்பூர கட்டி ஒன்றை வாங்கி வாசலில் கொளுத்தி வைத்து விட்டு திரும்பவும் வியாபாரத்தை தொடர்ந்தார்.

உச்சி வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்த நேரம்.

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் வண்டி வந்து நின்றதும் சாராயக்கடை கண்ணில் பட, வாய் நமநமத்தது வியாபாரிக்கு.

“பாபு வெயில் அதிகமா இருக்குது. சர்பத் குடிப்போமா?”

” …ம் .சரிப்பா.”

“அப்போ நீ இங்கேயே கூடைக்குள்ளேயே உட்கார்ந்துக்க. நான் போய் சர்பத் குடிச்சிட்டு உனக்கும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி கடைக்குள் சென்று, சிறிது நேரத்தில் கையில் இரண்டு முட்டை போண்டாவுடன் வெளியே வந்தார்.

பாபுவின் கையில் போண்டாவை தந்து, “இதை சாப்பிடுப்பா. சர்பத் வேண்டாம். வெயிலில் சளி பிடிக்குமாம். அப்புறம் உன் அம்மா என்கிட்ட சண்டைக்கு வருவா.”

“ஆமா நேத்து ஏன்பா அம்மா உன்கிட்ட சண்டை போட்டுச்சு.”

“அப்பா ஒரு தப்பு பண்ணிட்டேன்.”

நம்ம அம்மா நல்ல அம்மா இல்லையா? சண்டை போட்டுக்கிட்டு இருக்குது.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா. உங்கம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு வெளிஉலகம் தெரியாது. அம்மா படிச்சதும் இல்ல. நான் தப்பு செஞ்சா அவங்களுக்கு கோவம் மட்டும்தான் வரும். வேற ஒண்ணுமே தெரியாது. நம்ம அம்மா ரொம்ப நல்லவங்க தெரியுமா?”

“நீங்க படிச்சி இருக்கீங்களா அப்பா?”

“ஓ நான் அந்த காலத்து மூன்றாம் கிளாஸ். தரையில மண்ண கொட்டி அதுல எழுதி படிச்சிருக்கேன் தெரியுமா? நான் அதனால தான் இப்போ பேப்பர், புக்கு இதெல்லாம் படிக்கிறேன்.

உன்னைய பள்ளிக்கூடத்துல அப்பா சேர்த்து விடுவேன். நல்லா படிக்கணும். நல்ல புள்ளையா இருக்கணும். அம்மாவை நல்லபடியா பாத்துக்கணும். தெரியுதா? சரி வா இப்போ வீட்டுக்கு போவோமா?

அக்காவும் அம்மாவும் என்ன சாப்பிட்டாங்கன்னு தெரியல. அந்தக் கடையில மிச்சர், பக்கோடா, காரா பூந்தி எல்லாம் வாங்கிட்டு போவோமா வீட்டுக்கு…”

“சரிப்பா”

சைக்கிள் திரும்பியது வீடு இருக்கும் திசை நோக்கி. சிறிது நேரத்தில் கேட் தட்டப்பட்டது.

“தாஜ்… தாஜ் …”

மரியம் ஓடிவந்து கதவை திறந்தாள். சைக்கிள் உள்ளே சென்றதும் தாஜ்நிஷாவின் பார்வை வியாபாரியின் மீது பாய்ந்தது.

வியாபாரிக்கு புரிந்து விட்டது. தாஜ் தன் அருகில் வருவதற்குள் பாபுவை வேகமாக கூடையிலிருந்து இறக்கி விட்டார்.

தாஜ் அருகில் வந்து “ஏன்யா நேத்துதான் அவ்வளவு நடந்துச்சு. கிளிப்பிள்ளைக்கு பாடம் படிச்சு சொல்ற மாதிரி சொன்னேன்ல. இப்போ என்ன பண்ணிட்டு வந்து நிக்கிற? உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க?” என்று சட்டையை பிடித்து இழுக்க.

“இரு இரு சட்டைய விடு. நான் ஒண்ணுமே செய்யலடி. சரி பிள்ளைய தூக்கிட்டு உள்ள போ. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் நான் இந்த வந்துடறேன். அங்க வர்ற வழியில ஒருத்தவங்க காசு கொடுக்கணும்; வாங்கிட்டு வந்துருவேன்”
என்று நகர்ந்தார்.

“பொய்யா? போ. ஓடுறியா ஓடு. இங்கதான வந்தாகணும்” என்று சொல்லிவிட்டு சென்றவள் என்ன யோசித்தாலோ தெரியவில்லை. ‘விறுவிறுவென்று வீட்டினுள் சென்று கதவை தாளிட்டாள்.

குழந்தைகள் வெளியே “அம்மா அம்மா” என்று அலறின.

பாபு ஜன்னலின் அருகே சென்று கதவை இழுத்து பார்த்தான் திறந்தது. ஜன்னல் டிக்கெட் கொடுக்கும் கவுண்டரை போல் இருந்தது. அதன் வழியாக உள்ளே பார்த்த காட்சிகள் குழந்தைகளுக்கு புதுவிதமாக இருந்தன.

தாஜின் உடல் மின்விசிறி மாட்டும் கொக்கியில் புடவை தலைப்பில் தொங்கியவாறு உதைத்து கொண்டு இருந்தது.

குழந்தைகள் “அம்மா அம்மா” என்று சத்தமிட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

அதற்குள் பாபு எப்படியோ அந்த டிக்கெட் கொடுக்கும் கவுண்டருக்குள் சென்று தன் தாயின் காலை பற்றி கொண்டிருந்தான்.

ஓடி வந்தவர்கள் நடப்பதைப் பார்த்துவிட்டு, “பாபு! பாபு! இப்படி வா வந்து தாள்பாழைத் திறந்து விடு …”

பாபு தாள்பாழை திறந்து விட்டதும், வந்தவர்கள் புடவை தலைப்பை அவிழ்த்து அம்மாவை தரையில் கிடத்தினர்.

பக்கத்து வீட்டு அக்கா ஒரு சொம்பில் மோர் கரைத்து எடுத்து வந்து அம்மாவின் வாயில் ஊற்றி நெஞ்சை தடவி கொடுத்தார்.

வெளியில் சென்று இருந்த வியாபாரி விசயம் அறிந்து ஓடி வர, அக்கம் பக்கத்தினர், “பாய் நாங்க தான் நேத்தே சொன்னோம்ல அவ்வளவு சொல்லி கேட்காம, குடிகாரன் பேச்சி பொழுது விடிஞ்சா போச்சுன்னு இப்படி பண்றீங்களே …

இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு? இதுவே ஏதாவது ஒன்னு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா என்ன செய்யறது? இந்த குழந்தைகள் எல்லாம் நடுத்தெருவுல நின்றிடுமே … இவர்களை விட உங்களுக்கு அந்த குடி தான் முக்கியமா?”

“இல்ல இல்ல. இனிமே எனக்கு இந்த பாழாப்போன குடி எனக்கு தேவையே இல்லை. நான் இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன். எனக்கு என் மனைவி மக்கள் தான் முக்கியம்” என்று கண்களில் கண்ணீர் வழிய தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்.

குடி ஒழிய … அங்கே குடி உயர ஆரம்பித்தது .

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.