ஒலி மாசுபாடு

அதிகப்படியான, விரும்பத்தகாத, காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சத்தமே ஒலி மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது.

ஒலியானது நம் அன்றாட வாழ்விற்கு தேவையான ஒன்று. ஆனால் சத்தம் விரும்பத்தகாதது.

ஒலி மாசுபாடானது மனிதனின் சாதாரண செயல்களான தூங்குதல், உரையாடல் போன்றவற்றிற்கு இடையூறுகளை உண்டாக்குகிறது. இன்றைய ஒலி மாசுபாட்டில் தொழிற்புரட்சி, நகர்மயமாதல், மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சத்தமான இசை, தொலைகாட்சிப் பெட்டியின் சத்தம், மக்கள் தொலைபேசியில் பேசுவது, போக்குவரத்து, இரவு நேரங்களில் நாய்கள் குரைப்பது போன்றவை ஒலி மாசுபாட்டின் வடிவங்கள் ஆகும்.

ஒலிமாசுபாடானது திடமாசுபாடு என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் மற்ற மாசுபாடுகள் இயற்கை வளத்தின் அளவின்படியே அமைகின்றன. இம்மாசுபாடு பெரும்பாலும் நேரடி விளைவுகளை கேட்பவர்களிடம் ஏற்படுத்துகின்றது.

ஒலியானது டெசிபல்கள் என்ற அளவில் அளவிடப்படுகிறது. ஒலியானது 40 டெசிபல்கள் என்றிருக்கும்போது அது மனிதர்களின் தூக்கத்தினைக் கெடுக்கிறது.

இனி ஒலி மாசுபாட்டின் காரணங்கள், விளைவுகள் மற்றும் அதனை தடுக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

 

ஒலி மாசுபாட்டின் காரணங்கள்

வணிக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள்

தொழிற்சாலைகளில் இயங்கும் பெரிய இயந்திரங்கள் ஒலி மாசுபாட்டினை உண்டாக்குகின்றன. ஜெனரேட்டர்கள், அரைக்கும் ஆலைகள், கம்பிரஸ்சர்கள் போன்றவையும் ஒலிமாசுபாட்டில் பங்கேற்கின்றன.

கட்டுமான இடங்கள், அச்சகங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் ஒலியானது மாசடைகின்றது. ஆகவே தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒலி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க காதுகளில் அடைப்பான்களை பொருத்திக் கொள்கின்றனர்.

 

மோசமான நகர்புற திட்டமிடல்

ஒலி மாசுபாட்டிற்கு மோசமான நகர்புறத்திட்டமிடல் ஒரு முக்கிய காரணமாகிறது. நெருக்கடியான வீடுகள், பெரிய குடும்பங்கள் சிறிய இடத்தினை பகிர்ந்து கொள்ளுதல், அடிப்படைத் தேவைகளுக்காக நடைபெறும் சண்டைகள் போன்றவை ஒலி மாசுபாட்டினை உண்டாக்கி சமூகத்தின் அமைதியான சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன.

 

சமூக நிகழ்வுகள்

திருமணம், விருந்து உபச்சாரங்கள், வழிபாட்டிடங்கள், சமூக நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஒலிமாசுபாடு ஏற்பட்டு அது அவ்விட மக்களைப் பாதிக்கிறது.

மேலும் சாலைகளில் ஒலிபெருக்கிகளால் செய்யப்படும் விளம்பரங்கள், கடைத்தெருவில் மக்களைக் கவருவதற்காக வியாபாரிகளின் அழைப்புகள் ஒலி மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன.

 

வாகனப் போக்குவரத்து

அதிகப்படியான சாலைப் போக்குவரத்து, விமானங்கள் மற்றும் தொடர்வண்டிகள் அதிக ஒலியினை உண்டாக்கி ஒலியை மாசடையச் செய்கின்றன. இதனால் மனிதர்கள் சாதாரணமாக கேட்கும் திறனை இழந்து விடுகிறார்கள்.

 

வீட்டில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள்

வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி, கிரைண்டர், துணி துவைக்கும் இயந்திரம், குளிரூட்டிகள் (ஏசி), குக்கர் போன்றவை அதிக ஒலியை உண்டாக்குகின்றன.

வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளின் அதிக சத்தம், ஒலிபெருக்கிகள் ஆகியவையும் ஒலிமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன.

 

ஒலி மாசுபாட்டின் விளைவுகள்

காதுகேளாமை

நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவு ஒலியினை மட்டுமே காதுகளுக்கு சேதமில்லாமல் தாங்க முடியும். இயந்திரங்கள், விமானங்கள் போன்றவை நம்மால் தாங்க முடியாத அளவு ஒலியினை உண்டாக்குகின்றன.

தொடர்ந்து அதிக அளவு ஒலியை நாம் கேட்க நேர்ந்தால் ஒலியானது நம்மிடம் நிரந்தர காதுகேளாமையை ஏற்படுத்திவிடும்.

 

உடல்நல பாதிப்பு

அலுவலகங்கள், கட்டுமானமிடங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்படும் ஒலி மாசுபாடு மனிதர்களின் உளவியல் சுகாதாரத்தைப் பாதிக்கின்றன.

ஒலி மாசுபாடு மனிதர்களில் காணப்படும் தூக்கமின்மை, தலைவலி, மனஅழுத்தம், சோர்வு, இரத்த அழுத்தம், வித்தியாசமான நடவடிக்கை போன்றவற்றிற்கு காரணமாகின்றது.

இந்நோய்கள் மனிதர்களில் நாள்பட்ட சுகாதரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. உரையாடல்களின் போது தவறாகப் புரிந்து கொள்ளுதலையும் ஒலி மாசுபாடு உண்டாக்குகிறது.

 

இதய நோய்

உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தத்தினால் ஏற்படும் இதய நோய்கள் போன்றவை ஒலி மாசுபாட்டினால் அதிகரிக்கின்றன.

இம்மாசுபாட்டினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதய துடிப்பு அதிமாகி சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் ஒலி மாசுபாட்டினை தவிர்க்கும் சூழலில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

விலங்குளில் ஏற்படும் பாதிப்புகள்

விலங்குகளின் வாழ்க்கைமுறையானது கேட்கும் திறனைக் சார்ந்தே உள்ளது. தொடர்ந்து ஒலி மாசுபாட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணி தனது நடத்தைகளில் மாறுதலடைகிறது. அவைகள் திசைதிருப்பப்பட்ட பல நடத்தைப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

ஒலி மாசுபாட்டால் விலங்குகளின் கேட்கும் திறன் குறைந்து அவைகள் எளிதில் இரையாகவும், வேட்டையாட முடியாமலும், எண்ணிக்கையில் குறையவும் செய்கின்றன. இதனால் உயிரிகளின் சூழலில் மாற்றம் ஏற்படுகின்றது.

ஒலி மாசுபாட்டினால் இனப்பெருக்கத்திற்கான விலங்குகளின் ஒலியானது கேட்கமுடியாமல் அவ்வினமே அழியும் சூழல் உண்டாகிறது.

இடம் பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலியானது ஒலிமாசுபாட்டினால் பாதிப்படைந்து அவற்றின் பாதையை மாற்றி அவற்றின் அழிவிற்கு காரணமாகின்றன.

ஒலி மாசுபாட்டினால் விலங்குகள் அதிகமாக சத்தமிடுகின்றன. இதனால் ஒலிமாசுபாடு மேலும் அதிகரிக்கிறது.

ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் முறைகள்

அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், உற்பத்தி இடங்கள் போன்ற இடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அறைகளை கட்ட ஊக்குவிக்க வேண்டும்.

வீட்டுகளில் ஒலி எழுப்பும் கருவிகளை படுக்கை அறை மற்றும் வசிப்பறையை விட்டு தள்ளி அடித்தளத்தில் அல்லது வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும்.

வாகனங்களில் அதிக ஒலிஎழுப்பும் எச்சரிக்கை ஒலிப்பான்களையும், சேதமடைந்த எச்சரிக்கை ஒலிப்பான்களையும் தடை செய்ய வேண்டும்.

ஒலி மாசுபாட்டினை உண்டாக்கும் தொழிற்சாலைகள், பேருந்து மற்றும் சாலைப் போக்குவரத்து வாகனங்களின் நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்கள் போன்றவற்றை மக்கள் வசிப்பிடங்களை விட்டு தொலைவில் அமைக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அருகில் அமைதி மண்டலங்களை ஏற்படுத்த சமூகச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் ஒலியினை ஈர்த்து மாசுபாட்டினை குறைக்கின்றன.

வீடுகளில் தொலைக்காட்சிகள், வானொலிகள், இசை அமைப்புகளின் ஒலிகளைக் குறைப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும் என்பதனை உணர்ந்து எல்லோரும் செயல்பட வேண்டும்.

சிறந்த நகர்புறத் திட்டமிடுதல் மூலம் ஒலி மாசில்லா நகரத்தினை உருவாக்கலாம்.

ஒலி மாசுபாட்டினை குறைப்பது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதனை உணர்ந்து ஒலி மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கி நலமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.