கசகசா மருத்துவ பயன்கள்

கசகசா மருத்துவ பயன்கள் பல கொண்டது.  இது இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.

மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது.

அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும்.

கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது.

கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

கசகசா மருத்துவ பயன்கள்

2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்

½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, துவையலாக்கி, சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

போஸ்தக்காய் 1, துத்தி இலை ஒரு கைப்பிடியளவு, இவற்றை நன்றாக நசுக்கிக் கொண்டு, 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் கொண்டு, சூடு பொறுக்கும் அளவில், பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்.

உடல் பலம்பெற கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்துக்கொண்டு, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வேண்டும்.