கடற்கரைக்குச் செல்லுவேன்

தலையைச் சீவி பொட்டும் இட்டு

சட்டை போட்டுக் கொள்ளுவேன் – நல்ல

சட்டை போட்டுக் கொள்ளுவேன்

 

அலையை வீசும் கடல் கரைக்கு

அப்பாவோடு செல்லுவேன் – மாலை

அப்பாவோடு செல்லுவேன்

 

கடலைப் பார்த்துக் காலை நீட்டிக்

கரையில் குந்திக் கொள்ளுவேன் – கடற்

கரையில் குந்திக் கொள்ளுவேன்

 

கடல் அலைகள் சீறிப் பாயக்

கையைப் பிடித்துக் கொள்ளுவேன் – அப்பா

கையைப் பிடித்துக் கொள்ளுவேன்

 

வேர்க்கடலை மிட்டாய் சுண்டல்

விற்கும் வாங்கிக் கொள்ளுவேன் – அங்கு

விற்கும் வாங்கிக் கொள்ளுவேன்

 

ஊர்இ ருட்ட அப்பா வோடே

ஒப்பாய் வந்து சேர்வேன் – வீட்டிற்கு

ஒப்பாய் வந்து சேர்வேன்

வாணிதாசன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.