கண்ணதாசனின் கருத்துக்கள்

‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.

‘இது நம்மால் முடியும்’ என்று எண்ண வேண்டும். அப்படி நினைத்தால் நினைப்பது முடிந்து விடும். மனோதிடமும் வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே.

ஒருதுறையில் முனைந்து நின்று, நம்பிக்கையோடு முன்னேறினால், நாம் நினைக்கும் அளவுக்குப் புகழும் பொருளும் வந்து சேரும்.

இவற்றுள் தலையாயது தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்கச் செய்கிறது.

நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம். அது உன்னிடமே இருக்கிறது. அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்கத் தேவையில்லை.

நமது பண்பாடுகளின் புனிதத் தன்மையில் பயபக்தி உண்டு.

அதிர்ஷ்டம் என்பது என்ன?

இறைவன் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பம். கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம். சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.

தர்மத்துக்கு உட்பட்டு நடப்பதுடன் புத்திசாலித்தனமும் வேண்டும்.

தெய்வம் பாதி; திறமை பாதி.

தெய்வம் வாய்ப்பைக் காட்டுகிறது.

திறமை அதை லாபகரமாக்குகிறது.

பழங்காலப் பண்பாடுகள் மற்றும் சம்பிரதாயங்களில் காதல் ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.

நிலம் நோக்கிச் சிரிக்கின்ற சிரிப்பு காதலை நீடிக்கச் செய்தது. உணர்வுகள் ஒன்றி நின்றன. திருமணம் ஒரு புனிதமான சடங்காகக் கருதப்பட்டது.

காதல் என்பது கல்யாணம் முடியும் வரை. கல்யாணத்திற்குப் பின் அது வெறும் காதல் இல்லை; புனித வழிபாடு.

இந்து தர்மம் இல்லறத்தை வேலிக்குள் அடங்கிய பயிராக வளர்த்தது. தாலிக்குள் அடங்கிய கோவிலிலே தர்ம தேவனின் மணியோசை கேட்டது.

காதலும் இல்லறமும் மிக உயர்ந்த தத்துவங்கள். இல்லற தர்மம் நிம்மதிக்காகவே ஏற்பட்டது.

வாழ்க்கையில் பாலுணர்வும் ஒரு பகுதியே தவிர அதுவே வாழ்க்கையாகி விடாது.

இந்துவின் நாகரீகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது. அது நமது குடும்பதை கோவிலாக்கிற்று; கணவனைத் தேவனாக்கிற்று; மனைவியைத் தேவியாக்கிற்று.

குடும்பம் ஒரு கோவில்.

திருமணமான பெண் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். கைவிரலில் மோதிரம் அணிய வேண்டும். வீட்டுக்குத் தேவை நல்ல மனைவி.

கணவனை கண்கண்ட தெய்வம் என்று கருதுபவள் இந்து பெண். இந்து மதத் தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்த வைத்த பொம்மைகள் அல்ல. பகுத்துப் பகுத்து அறிந்தே பின்னே உருவாக்கப்பட்டன.

அறிவு ஆழமாக, ஆழமாக முடிவு தெய்வ நம்பிக்கையாகும். தெய்வ நம்பிக்கை நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது.

கடமையும் நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும் நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. ‘மனம் உண்டானால் வழி உண்டு’ என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்தும் பொருந்தும்; தியான தர்மத்தும் பொருந்தும்.

பலவீனமான ஆத்மாக்கள் மற்றவர்களால் மாற்றப் படுகின்றன. ஆன்ம பலம் உள்ளவர்கள் மற்றவர்களை மாற்றி விடுகிறார்கள்.

நமது நாகரீத்தில் ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு. அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்; காரியம்.

கண்ணதாசன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.