கனவு மெய்ப்பட – சிறுகதை

தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.

வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.

சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.

பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

மண் ரோட்டில் கடுமையான வெயில். உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. மூச்சு வாங்க சைக்கிளை மிதித்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஓர் அழகிய தாமரை குளம் கண்ணில் பட்டது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குளத்தில் இறங்கி கை கால் முகம் கழுவிக்கொண்டார்.

குளத்தோரத்தில் ஓரத்தில் இருந்த மரத்தடியில் சற்று இளைப்பாறினார். நிழலின் அருமை அப்போதுதான் அவருக்கு தெரிந்தது.

“ஆஹா! என்ன அருமை!” சில்லென்று குளத்தின் தண்ணியும் மரத்தின் நிழலில் வீசிய காற்றும் ஓர் புதிய உணர்வை தந்தது.

சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருக்க எதிரே ஓர் வயதானவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அருகே வந்ததும் அவரிடம் “ஐயா பெரியவரே, இன்னும் ஊருக்குள்ள போக எவ்வளவு நேரம் ஆகுமுங்க?”

பெரியவர் “இன்னும் ஓர் அஞ்சு மைல் தூரம் போகணும் தம்பி. ஆமாம் அங்க யாரை பார்க்க போறீங்க?”

சைக்கிளில் வந்தவர், “எனக்கு அங்கு சொந்தம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க. நான் ஓர் கதை ஆசிரியன். அமைதியான கிராமத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இங்கு ஒரு சில நாள் தங்கி கதை எழுதப் போகிறேன்; இந்த ஊரைப் பற்றியும் இங்கு உள்ளவர்களை பற்றியும். அதனால் தான்.”

பெரியவர் “சரி, சரி. தம்பி நீங்க இப்போ கிளம்பினால் தான் மத்தியானம் சாப்பாட்டுக்கு அங்கு செல்ல முடியும். உங்கள பார்த்த வெத்தல போடுற மாதிரி தெரியுது. ஒரு வெத்தல இருந்தா குடுங்க” என்று வாங்கிக் கொண்டு
பெரியவர் கிளம்ப, சைக்கிளின் சக்கரம் சுழன்றது.

மதியம் பன்னிரண்டே முக்கால் மணி இருக்கும். எங்கோ தூரத்தில் ஓர் பள்ளியில் பாங்கின் ஓசை கேட்டது. சைக்கிள் சுழல்வது நின்றது.

அவர் கண்ணில் பட்டது ஓர் பெரிய மரத்தடியில் டீக்கடை ஒன்று.
எதிரே ஓர் பெட்டிக்கடை. அங்குமிங்குமாக சிறு சிறு குடிசைகள்.

‘ஓ! இதுதான் ஊரு போல இருக்கு’ என்று நினைத்தவாறு டீ கடைக்குள் சென்றார்.

டீக்கடை முதலாளி மதி “வாங்க ஐயா என்ன சாப்பிடுறீங்க?” என்றார்.

வந்தவர் “சாப்பிட என்ன இருக்கு? கொஞ்சம் தண்ணி கொடுங்க. தாகமா இருக்கு.”

மதி தண்ணீர் கொடுத்து விட்டு “இங்கே சாப்பிட சம்சாவும் வடையும் தான். வேறு ஒன்றுமில்லை டீ இருக்கு” என்றார் .

“சரி சரி ரெண்டு சம்சாவும் டீயும் கொடுங்க.”

மதி சம்சா கொடுக்க அவர் சாப்பிட ஆரம்பித்தார்.

வந்தவர், சம்சாவைச் சாப்பிட்டு முடிப்பதற்கு முன் டீயுடன் வந்த மதி “ஆமாம் உங்களை இதுவரைக்கும் இந்த ஊரில் பார்த்ததே இல்லையே. நீங்கள் யார்வீட்டிற்கு வந்து இருக்கீங்க?” என்றார்.

“எனக்கு இங்க யாரும் இல்ல. யாரையும் தெரியாது, என் பெயர் துரைராஜ். நான் ஒரு கதை ஆசிரியர். கொஞ்ச நாள் இந்த கிராமத்தில் தங்கி கதை எழுதலாம் என்று வந்திருக்கிறேன். இந்த அமைதியான கிராமம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,”

“ஆனால் ஐயா, இங்கே எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. இங்கே இருப்பதோ நான்கைந்து தெருக்கள் தான். இங்கே இருப்பவர்களுக்கு பிழைப்புக்கே வழி இல்லை. டவுன் சைடு தான் போய் ஆகணும், இங்கே ஒரு பள்ளிக்கூடமோ, தார்சாலையோ, இல்லை ஓர் மளிகை கடையோ, காய்கறி கடையோ, எதுவுமே இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. பள்ளிக்கூடத்து குழந்தைகள் கூட நடந்தே தான் டவுனுக்கு போறாங்க. இப்படிப்பட்ட கிராமத்தை தேர்ந்தெடுத்ததுலே..”

“அதனால் என்ன எனக்கு இந்த அமைதி ரொம்பவும் பிடிச்சிருக்கு. நான் இங்கு தங்கி கதை எழுதுவதனால் உங்கள் கிராமத்திற்கும் நல்லது நடக்கும்; எனக்கும் நல்லதாக இருக்கும். எனக்கு இங்கு தங்குவதற்கு ஒரு சின்ன குடிசையாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் தான் ஏற்பாடு செய்து தரணும்.”

மதி வந்தவரைப் புரிந்தவாறே “நீங்களே சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும்? சரி பரவாயில்லை. இங்கிருந்து மூன்று தெரு தள்ளி என்னுடைய வீடு ஒன்று இருக்கிறது. ஓட்டு வீடு; அடிபம்பு தான் யூஸ் பண்ணிக்கனும், வீட்டை காட்டுகிறேன். வாங்க, உங்களுக்கு ஒரு பையனை உதவிக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி அழைத்துக்கொண்டு சென்று வீட்டை காட்டினார்,

துரைராஜ் சாவியை வாங்கிக்கொண்டு “பரவாயில்லை, இவ்வளவு தூரம் எனக்கு உதவி செய்தீர்களே அதுவே போதும்,”

“சரி பார்த்துக்குங்க. ஏதாவது வேண்டும் என்றால் ஒரு பையன் வருவான் அவனிடம் சொல்லி அனுப்புங்கள்” என்று கூறி மதி புறப்பட்டார்,

வீட்டை சுத்தம் செய்துவிட்டு தங்கினார் துரைராஜ்.

மறுநாள் காலை 6 மணி. துரைராஜ் டீ குடிக்க கடைக்கு வந்தார்.

“வாங்க ஆசிரியரே, இரவு நல்ல தூக்கம் வந்துச்சா? இடம் உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?” என்றார் மதி.

துரைராஜ் “அதெல்லாம் எனக்கு வசதியா இருக்கு. இதற்கு மேல் என்ன வேண்டும் உதவிக்கு நீங்க எல்லாம் இருக்கும்போது” என்று சொல்ல., மதி டீயைக் கொண்டு வந்து வைத்தார்.

டீயை குடித்து முடித்த துரைராஜ் அங்கேயே உட்கார்ந்து பேப்பரை கையில் எடுத்து சிறிது நேரம் படித்து விட்டு அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது டீக்கடைக்கு அருகே இருந்த மரத்தின் அடியில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தாடியும், மீசையுமாக அழுக்கு பேண்ட் சட்டையும் கைவிரல் நகங்கள் வளைந்தும் பார்க்கவே பாவமாக காணப்பட்டான்.

துரைராஜ் மதியைப் பார்த்து “ஆமாம் அது யாருங்.க நேற்றும் உட்கார்ந்து இருந்தார். இப்போதும் அங்கேயே உட்கார்ந்து இருக்கிறார்.”

“ஓ! பிரகாச கேட்கிறீர்களா? அவன் நேத்து மட்டும் இல்ல. நீங்க எப்ப பார்த்தாலும் இங்கேயேதான் உட்கார்ந்து இருப்பான். வேற எங்கேயும் போக மாட்டான். பாவம் நல்ல புள்ள. என்னம்மோ அவனோட தலையெழுத்து; இப்படி ஆயிட்டான்.”

“ஏன் என்ன ஆச்சு?”

மதி சொல்ல ஆரம்பித்தார்.

பிரகாசு பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கான். அவனும் ஆற்றல் அரசும் நண்பர்கள். ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். ஒரே தெரு. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். ஒன்றாகவே இருப்பார்கள். நல்ல நண்பர்கள்

பத்தாவது வரை படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க முடியாமல் இந்த கிராமத்தில் விவசாய வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆற்றல்அரசுக்கு சொந்தமாக நிலம் உண்டு. நல்ல உழைப்பாளி. எந்த நேரமும் வயலில் தான் இருப்பான். அவன் கூடவே தான் பிரகாசும் இருப்பான்.

ஒருநாள் ஆற்றல்அரசும் பிரகாசும் பைக்கில் டவுனுக்கு போனாங்க. திரும்பி வர்றப்ப ஆற்றலரசு பிணமாகவும் பிரகாஷ் ஜடமாகவும் தான் வந்தார்கள்.

ஆக்ஸிரேண்ட் ஆயிடுச்சாம். ஆக்சிரேண்ட நேரில் பார்த்ததனால இவன் இப்படி ஆயிட்டான்.

வர்றவங்க, போறவங்க டீ சாப்பிட ஏதாவது கொடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு விட்டு இங்கேயே உட்கார்ந்து கிடக்கிறான். யாரிடமும் எதுவும் பேச மாட்டான். நாலு வருஷம் ஆச்சு.

ஆற்றலரசு சாகறதுக்கு முன்னாலேயே தான் உடல் உறுப்புகளை தானமாக தராதா எழுதி வைத்திருந்தானாம். எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு தான் பிள்ளைய கூறு போட்டு கொடுத்தாங்க.

இந்த கிராமத்துக்கு ஏதாச்சும் நல்லது நடக்கணும்னு இந்த புள்ளைங்க எல்லாம் சேர்ந்து எவ்வளவோ போராட்டம் எல்லாம் பண்ணியிருக்காங்க.

கடைசில ஒன்னும் நடக்கல. இந்த ரெண்டு புள்ளைங்க வாழ்க்கையும் அல்பாயுசில் போயிடுச்சு” என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த துரைராஜ் அப்படியா என்று கேட்டு விட்டு, “பாவம் என் கணக்குலையும் அவருக்கு டீ கொடுங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இப்படியே சில மாதங்கள் சென்றன.

ஒரு நாள் திடீரென்று போலீஸ் வேன் டீ கடையின் வாசலில் வந்து நின்றது.

அதிலிருந்து ‘திபுதிபு’வென்று போலீஸ்காரர்கள் இறங்கி ஓடி வந்து பிரகாசை பிடித்து அவனை கைது செய்தார்கள்.

ஜேசிபி ஒன்று வந்து அவன் உட்கார்ந்திருந்த மரத்தின் அடியில்
தோண்டியது.

மரத்தின் அடியில் பெரிய கல் ஒன்று இருந்தது. ஜேசிபி சில மணி நேரத்துக்குப் பிறகு அந்த கல்லை வெளியே எடுத்து டிராக்டரில் ஏற்றியது.

பார்க்க ‘பளபள’வென்று ஒளி வீசிய கல்லை என்னவென்று புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் ஊர்மக்கள் .

அப்போது ஜீப்பில் இருந்து இறங்கினார் கதை ஆசிரியர் துரைராஜ்.

“என்ன அப்படிப் பாக்குறீங்க? நான் உண்மையிலேயே கதையாசிரியர் இல்ல. சிஐடி சந்திரன்

இந்த பிரகாஷ் உண்மையில் பைத்தியக்காரன் இல்லை. இவன் தான் ஆற்றல் அரசை கொலை செய்த கொலைகாரன்.”

ஆற்றல்அரசும் பிரகாசும் வயலில் வேலை செய்பவர்கள் என்று சொன்னீர்கள் அல்லவா?

அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது ஆற்றல்அரசின் வயலின் அடியில் இருந்துதான் இந்த கல். விலை மதிக்க முடியாத இது பல கோடிக்கு போகும்.

ஆற்றல்அரசின் கண்ணில் இக்கல் பட்டதும் பிரகாசை அழைத்து காட்டினான்.

பிறகு அங்கேயே செடி கொடிகளை வைத்து மூடி வைத்துவிட்டு இருவரும் வந்து விட்டார்கள். ஊர் அடங்கியதும் இருவரும் வந்து அதை உருட்டி உருட்டி நகர்த்தி இந்த மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டார்கள்.

அதிலிருந்து உடைந்த சிறு துண்டை எடுத்து பேப்பரில் சுற்றி வைத்துக் கொண்டு தான் மறுநாள் காலையில் இருவரும் டவுனுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள்.

டவுனில் இக்கலை சோதித்து பார்த்து இருக்கிறார்கள்.

இக்கல் பற்றிய விவரம் தெரிந்ததும் ஆற்றலரசு “நம்ப கிராமத்துக்கு விடிவு காலம் பொறந்திருச்சி. இப்போ நாம பல கோடிக்கு சொந்தக்காரன் ஆயிட்டோம். இத வச்சி மேப்புல இல்லாத நம்ப கிராமத்தை மாத்தி காட்டுவோம். முதல்ல இத காசா ஆக்கணும். அப்புறம் நம்ம ஊருக்கு தார் சாலை, ஓர் பள்ளிக்கூடம் இதெல்லாம் கொண்டு வரணும்” என்று கூறினான்.

இருவரும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு டீக்கடையை பார்த்ததும் பிரகாஷ் ஆற்றல் அரசை ‘இங்கேயே நில்லு. நான் போய் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்’ என்று டீக்கடைக்கு போய் இருக்கிறான்.

போய் சிறிது நேரத்தில் பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த லாரி ஆற்றல் அரசை மோதி இருக்கிறது. இது திடீரென்று நடந்ததை போல் ஆகிவிட்டது.

ஓடிவந்து பார்த்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்த நண்பன் ஆற்றல் அரசை தன் மடியில் இழுத்து போட்டுக் கொண்டு அழுவது போல் நடித்துக் கொண்டு, தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் ஆற்றலரசு எழுதியது போல் எழுதி வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டான்.

ஓடி தலைமறைவான லாரி டிரைவர் சென்னையில் நேற்று முன்தினம் பிடிபட்டு விட்டான்.

பிரகாஷ் எதுவாக இருந்தாலும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் இந்த மரத்தின் அடியில் வந்து உட்கார்ந்து விட்டான். இதுதான் நடந்தது” என்று சொல்லி முடித்தார் சிஐடி சந்திரன்.

பிறகு போலீஸ் விசாரணையில் பிரகாஷ் உண்மையை ஒப்புக் கொண்டான்.

கிராமம் மாவட்ட ஆட்சியர் நேரடி பார்வைக்கு சென்றது. மேம்படுத்தப்பட்ட கிராமமாக மாறியது. ஆற்றல் அரசின் கனவு மெய்ப்பட்டது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.