கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.

அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.

கோயிலோட வெளிப்பிரகாரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த மாமரம் உருண்டைக்காயா காய்க்கும். அது காயா இருக்குற சமயத்துல ரொம்ப புளிப்பு இல்லாம தேங்காயச் சில்லு மாதிரி இருக்கும். அதே பழுத்தா ரொம்ப இனிப்பா நல்லாயிருக்கும்.

மேற்குப்பகுதியில் இருக்கிற மாமரக்காய் நீள்வடிவில் இருக்கும். ரொம்ப புளிக்கும். பழுத்தா மட்டும்தான் அதச் சாப்பிட முடியும்.

கோயிலின் வடகிழக்கு மூலையில இருந்த மாமரம் கிளிமூக்கு. பிஞ்சுல இருந்து பெரிய காய் வரைக்கும் திங்க நல்லா இருக்கும்.

கோயிலோட வெளிப் பிரகாரத்திலேயும் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அது மாங்கா சீசனா இருந்ததால கொத்துக் கொத்தா மாங்காய் காய்ச்சு தொங்குச்சு.

நாங்க எல்லா மரத்திலேயும் மாங்காய பறிச்சு சாப்பிட்டோம். எங்கள மாதிரியே நிறைய பேர் மாங்காய பறிச்சு பறிச்சு சாப்பிட்டாக.

கோயிலுக்கு வெளிய வேப்பமரம், புளியமரம், தேக்கமரம், தோதகத்தி (ரோஸ்உட்) அப்பிடின்னு நிறைய மரங்கள் இருந்துச்சு.

வேப்பமரத்துக்கு அடியில நாங்க பத்து பேரும் கூட்டமா உட்கார்ந்து எல்லாரும் கொண்டு வந்த சாப்பாட்ட மாம்பழத்தோட பகிர்ந்து சாப்பிட்டோம்.

பிறகு கொஞ்ச நேரம் கோயிலேயே இருந்துட்டு தேர்திருவிழா நடக்கிற இடத்துக்கு வந்தோம்.

அப்பதான் சொர்ணம் சொன்னா ‘இப்ப போய் திருவிழாக் கடையில நமக்கு வேணுங்கிறத வாங்கிக்குவோம்’ன்னு.

கனி சொன்னா ‘முதல்ல எல்லாருக்கும் கம்மல் வாங்கனும். அதுக்கப்புறம்தான் மத்த வேல’

‘சரி, ஒவ்வொருத்தருக்காக கம்மல் வாங்குவோம். அவுகவுகளுக்கு பிடிச்சத பார்த்து வச்சுக்கோங்க. நான் உங்களுக்கு விலை பேசி அதை வாங்கித் தர்றேன்’ன்னு சொர்ணம் சொன்னாள்.

முதல்ல இருந்த கடையில இருபது கம்மல்கிட்ட இருந்துச்சு.

தேன்கூடு கம்மல், மாங்காய் கம்மல், இலைத்தோடு, தேர்க்கம்மல், நிலாப்பொழுது கம்மல் என அப்ப இருந்த டிசைனான கம்மல் இருந்துச்சு.

எனக்கு தேர்க்கம்மல்லப் பார்த்ததும் வாங்கனுமுன்னு ரொம்ப ஆசை. கனிகிட்ட அதைச் சொன்னேன்.

‘எனக்கும் அதேன் பிடிச்சிருக்கு. ஆனா இந்த கடையில ரெண்டு தேர்க்கம்மல்தான் இருக்குது.’ன்னு கனி சொன்னா.

ரெண்டு பேரும் ஆளக்கு ஒரு ஜோடிய எடுத்துக்கிட்டோம். கம்மல்ல திருக்கு சரியாக இருக்கான்னு பாத்துக்கிட்டோம்.

அப்ப எங்ககூட வந்த சின்னப்பொண்ணு, ‘எனக்கும் தேர்கம்மல் பிடிச்சிருக்கு. இன்னொன்னு இருக்கான்னு பாருங்களேன்’ன்னு சொன்னா.

‘தேர்க்கம்மல் ரெண்டுதான் இந்தக் கடையில இருக்கு. வேற கடையில இருக்கான்னு பார்ப்போம். சரியா?’ன்னு கனி சின்னப்பொண்ணத் தேற்றினாள்.

‘வேற கடையில தேர்க்கம்மல் இருக்கான்னு இப்பவே பார்ப்போம் வா’ன்னு கனிய சின்னப்பொண்ணு கூப்பிட்டா.

உடனே கனி எங்கிட்ட ரெண்டு ஜோடி தேர்க்கம்மலையும் கொடுத்திட்டு பத்திரமா வச்சிக்கோ. சொர்ணம் வந்ததும் அவள விலைபேசச் சொல்லி ரெண்டு ஜோடி கம்மலையும் காசு கொடுத்து வாங்கி வச்சிரு. சரியா? நான் இவகூட வேற கடையில தேர்க்கம்மல் இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு வர்றேன்.’ன்னு சொல்லிட்டு சின்னப்பொண்ணக் கூட்டிட்டு போனா.

கொஞ்ச நேரம் கழிச்சு சொர்ணம் அங்க வந்தா. நான் அவகிட்ட ரெண்டு ஜோடி கம்மலையும் விலைபேசி வாங்கித்தரச் சொன்னேன்.

அவ அந்த கடைக்காரர்கிட்ட ‘தேர்க்கம்மல் என்ன விலை?’ன்னு கேட்டா.

கடைக்காரர் ‘ஒருஜோடி மூணு பைசா’ன்னு சொன்னாரு.

‘ஒருஜோடி ரெண்டு பைசான்னு தாங்களேன்’ன்னு சொன்னா.

‘இல்லம்மா கட்டுபிடியாகாது. இந்த இடத்துல திருவிழா கடை போடுறதுக்கு காசு கட்டிருக்கேன். கம்மல்ல வெளியூருல இருந்து வாங்கிட்டு வந்திருக்கேன். அப்படி இப்படின்னு செலவு அதிகம். ஒருஜோடி கம்மல மூணு பைசாக்கு வித்தாதான் கட்டும்’ன்னு கடைக்காரரு சொன்னாரு.

‘ஐயா, உங்க கடையில கம்மலு மட்டுமில்ல, மோதிரமும் வாங்கிக்குறோம். நாங்க பத்து பேரு இருக்குறோம். அதனால உங்களுக்கு நல்ல வியாபாரமும் நடக்கும். எங்களுக்கும் கம்மலும் மோதிரமும் கிடைக்கும்.

ஆக மொத்தம் ரெண்டு பேருக்கும் லாபம்தான். மேலும் நாங்க இப்பதான் முதன்முதலா கம்மல் போடப் போறோம். பொருட்களோட விலைய கொஞ்சம் குறைச்சிகிட்டா உதவியா இருக்கும்’ன்னு சொன்னா சொர்ணம்.

‘சரிம்மா. உங்களுக்குப் பிடிச்சத வாங்குங்க. என் கைய ரொம்ப பிடிக்காம இருக்கிற மாதிரி உங்களுக்கு விலைய குறைச்சு தர்றேன்னு. அவரு சொன்னாரு.

சின்னப்பொண்ணத் தவிர மத்த ஒன்பது பேரும் அந்த கடையிலேயே கம்மல வாங்கினோம். நான் மட்டும் மாங்காத்தோடு ஒன்னும் சேர்த்து ரெண்டு கம்மல வாங்கினேன்.

அந்த கடைக்காரருக்கு மொத்தம் பத்து கம்மலு எங்க மூலமா உடனே வித்திருச்சு. அவரும் கொஞ்சம் விலையக் குறைச்சுக் கொடுத்தாரு.

எனக்கு கம்மல் வாங்கினதுல்ல நாலு பைசாவும் அப்புறம் மோதிரம் வாங்கினதுல்ல ஒருபைசாவும் மொத்தம் ஐஞ்சு பைசா செலவாச்சு. கனியோட தேர்க்கம்மலுக்கு ரெண்டு பைசா கொடுத்தது போக மீதி மூணு பைசா என் கையில இருந்துச்சு.

கால்மணி நேரம் கழிச்சு கனி ஓடிவந்து சொர்ணத்த வேற கடைக்கு கூப்பிட்டுப் போய் சின்னப்பொண்ணுக்கு தேர்க்கம்மல விலைபேசி வாங்கிக் கொடுத்தா.”

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

One Reply to “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

  1. சிறுகதை அதன் வடிவமைப்பால் , கருத்தால், உணர்வால் சிறக்க உள்ளது. பாட்டியின் உண்ர்வுகள் தெளிவாக உள்வாங்கப்பட்டு வெளிபடுத்தப்பட்டுள்ளன. சூப்பர் சார்…..

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.