கரியமிலவாயுவின் நன்மைகள்

சர்வதேச பிரச்சனையான புவிவெப்பமயமாதலின் முக்கியகாரணிகளுள் ஒன்று கரியமிலவாயு (கார்பன்டைஆக்ஸைடு). இதன்காரணமாக, காலநிலைமாற்றம், வறட்சி, கடுங்குளிர், பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர்மட்டம் உயருதல், முதலிய விரும்பத்தகாத விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது.

எனவே, காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவை குறைக்க பல்வேறு ஆராய்ச்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறாக, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கரியமிலவாயுவினால் நன்மைகள் ஏதும் உண்டா? இக்கட்டுரையில் காண்போம்.

 

கரியமிலவாயுவின் நன்மைகள்

உயிர்வாழ

நமக்கு தேவையான உணவு மூலப்பொருட்களை தாவரங்களிடமிருந்தே பெருகின்றோம். உற்பத்தியாளர்களான தாவரங்கள், கரியமிலவாயு, நீர் மற்றும் பச்சையத்தைக் (தாவரத்தின் பச்சைநிறத்திற்கு காரணமான நிறமி) கொண்டு சூரிய ஒளியின் முன்னிலையில் உணவான கார்போஹைட்ரேட்டை தயாரிக்கிறது. இதனை ஒளிச்சேர்க்கை வினை என்கின்றோம்.

 

இலை

 

இவ்வினையின் மற்றொரு விளைபொருள், பிராண வாயுவான ஆக்ஸிஜன்! நாம் உயிர் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனும், உணவும் உருவாக கரியமில வாயு மிக முக்கியம். எனவே, தான் இயற்கையாகவே, காற்று மண்டலத்தில் 0.04 சதவிகித கரியமில வாயு உள்ளது.

 

தீயணைப்பானாக

கரியமில வாயு எரியா தன்மை கொண்ட வாயு. மேலும், எரித்தல் வினையையும் கட்டுபடுத்தக் கூடியது. இதன் காரணமாக, இது தீயணைப்பானாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

தீயணைப்பான்

வேதிப்பொருட்கள் தயாரிக்க

புதிய வேதிப்பொருட்களை தயாரிக்கும் மூலப்பொருளாக கரியமிலவாயு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, எரிபொருளான எத்தனால், மெத்தனால் போன்றவைகளையும், மருத்துவதுறையில் பயன்படும், ஃபார்மிக்அமிலம், ஃபார்மால்டிஹைட் உள்ளிட்ட வேதிப்பொருட்களையும் தயாரிக்க கரியமிலவாயு பயன்படுகிறது.

பலவிதமான வேதிப்பொருட்களை தயாரிக்கும் பொழுது, கரிம கரைப்பானுக்கு (ஒரு பொருளை கரைக்கும் திரவம், உதாரணம் – நீர்) மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், பொருட்செலவு, தீங்குகள் உள்ளிட்டவை குறைவதோடு, சுற்றுசூழலுக்கும் நன்மை உண்டாகிறது.

 

உலோக தொழிற்சாலையில்

செம்பு, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறையில், கரியமிலவாயுவும் ஒரு காரணியாக பயன்படுகிறது.

 

எண்ணெய் கிணறுகளில்

ஆழ்துளை எண்ணெய் கிணறுகளின் அடிப்பகுதியிலிருந்து கச்சாஎண்ணெய்யை எடுக்க, திரவ கரியமிலவாயு பயன்படுகிறது. அதாவது, திரவ கரியமிலவாயுவை எண்ணெய் கிணற்றுக்குள் அழுத்ததுடன் செலுத்தப்படுகிறது.

இது பூமியின் பாறைகளுக்கிடையில் படிந்திருக்கும் எண்ணெய் படிமத்துடன் சேர்ந்து கலவையை உண்டாக்குகிறது. திரவ கரியமிலவாயுவின் மிகமிக குறைந்த பாகு தன்மை (திரவ இயக்கத்தின் தடை, உதாரணம், நீரைவிட எண்ணெய் அதிகபாகு தன்மை கொண்டது) காரணமாக, கச்சா எண்ணெய் கலவை லேசாகிறது. இதனை பம்பு மூலம் மேல்நோக்கி எடுக்கப்படுகிறது.

 

மருத்துவத்துறையில்

சுத்தமான ஆக்ஸிஜனுடன், ஐந்து சதவிகித கரியமில வாயுவும் சேர்த்து தேவைப்படும் நோயாளிகளுக்கு தரப்படுகிறது. இதன் மூலம், சீரான சுவாசமும், இரத்ததில் ஆக்ஸிஜன்/கரியமிலவாயுவின் அளவும் சீராக வைக்க உதவுகிறது.

 

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்

 

காற்றடைக்கப்படும் பொருட்களில்

நீர் மற்றும் ஆகாயத்தில் மிதக்கும்பொழுது பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் உடைகளில் அடைக்கப்படும் காற்றாக  இக்கரியமிலவாயு உபயோகப்படுகிறது. மேலும், மிதிவண்டியின் (இரப்பர்குழாய்கள்) சக்கரங்களிலும், துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளிலும் இவ்வாயு பயன்படுகிறது.

 

லேசராக

உலோகபாகங்களை ஒட்ட வைக்க கரியமில வாயு லேசர் பயன்படுகிறது.

 

உணவு பொட்டலங்களில்

உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, கரியமில வாயுவையும் சேர்த்து பொட்டலங்களில் அடைத்து வைக்கப்படுகிறது.

 

பூச்சிக்கொல்லியாக

கரியமிலவாயுவை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்துகின்றனர்.

 

குளிரூட்டியாக

வெப்பநிலையை குறைப்பதன் மூலம் கரியமிலவாயுவை திடநிலைக்கு மாற்றமுடியும். இவ்வாறாக மாற்றப்படும் திடகரியமிலவாயுவிற்கு உலர்பனிக்கட்டி   (-78 டிகிரி செல்சியஸ்) என்று பெயர்.

இது பலவிதமான பொருட்களை உறைநிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், தாவர விதைகளை பதப்படுத்தும் குளிரூட்டியாகவும் இது பயன்படுகிறது.

 

மிருதுவான உணவு தயாரிக்க

மிகவும் மென்மையான இட்லி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு காரணம் கரியமிலவாயுவே! ஆம், பொதுவாக, உணவில் சேர்க்கப்படும் ஆப்ப சோடா (சோடியம்-பை-கார்பனேட்) சூட்டில் (உணவு தயாரிக்க தேவைப்படும் வெப்பம்) சிதைவுற்று கரியமிலவாயு, நீர் மற்றும் சோடியம் கார்பனேட்டாக மாறுகிறது. இதில் கரியமில வாயு மேலெழும்பும்பொழுது உணவு (சப்பாத்தி) உப்பி மிருதுவாக மாறுகிறது.

 

இவைகள் எல்லாம், புவிவெப்பமயமாதலுக்கு காரணமான கரியமிலவாயுவின் நன்மைகள். இவற்றை எல்லாம் நினைக்கும் பொழுது, கரியமில வாயுவை பற்றி கீழ்வருமாறு எழுதத் தோன்றுகிறது.

 

உலகைச் சூடாக்குவாய்!

பனிபாறையை உருக்குவாய்!

ஆழி மட்டத்தை உயர்த்துவாய்!

காலநிலையை மாற்றுவாய்!

வறட்சியைத் தருவாய்!

பாலைவனத்தைப் பெருக்குவாய்!

கனத்த மழையைக் கொட்டுவாய்!

கரியமில வாயுவே!

உன் பெருமையை அறிவோம்!

ஆம்!

தாவரங்கள் உண்டி தயாரிப்பதும் உன்னாலே!

அதனை உண்டு விலங்குகள் வாழ்வதும் உன்னாலே!

உணர்ந்தோம்!

உன்னால் அல்ல துன்பங்கள்!

உன் அளவை கூட்டிய

எங்கள் செயல்களால்!

 

– முனைவர்.ஆர்.சுரேஷ்,

ஆராய்ச்சியாளர்,

பகுப்பாய்வுமற்றும்கனிமவேதியியல்துறை,

கன்செப்ஷன்பல்கலைக்கழகம், சிலி

sureshinorg@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.