கருப்பர் கும்மி பாடல்

கருப்பர் கும்மி பாடல் என்பது அழகிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றிப் பாடும் கும்மிப் பாடல். மனமுருகிக் கூப்பிடுங்கள், கருப்பர் உங்களுக்குக் காவலாய் ஓடி வருவார்.

கருப்பர் கும்மி பாடல்

கும்மியடி தமிழ்க் கும்மியடி – அந்தக்

கோட்டைக் கருப்பரைக் கும்மியடி!

நம்பிடக் காக்கும் தெய்வமடி! – அது

நல்லருள் தந்து வாழ்த்துமடி!

 

திருப்புத் தூரிலே கருப்பரடி – அவர்

தித்திக்க வரும் வீரரடி!

உருவம் பெரிய கருப்பரடி – அவர்

உள்ளம் இனிக்கும் வெல்ல‌மடி!

 

வெள்ளைக் குதிரையில் கருப்பரடி – அவர்

வீரம் விளைக்கும் தெய்வமடி!

அள்ளக் குறையாக் கருணையடி – அவர்

அண்டின பேருக் கருள்வாரடி!

 

சுக்குமாந் தடி வெட்டருவாள் – அவர்

சுறுக்காய் எடுத்து நடைநடந்து

அக்கிரமரச் செயல் அழிப்பாரடி! – அவர்

அண்டம் குலுங்கச் சிரிப்பாரடி!

 

குத்தீட்டி சூலம் கொண்டாடி – அவர்

குதித்து மிதித்து ஓடோடி!

எத்திக்கும் தீப்பொறி பரபரக்க – அவர்

எக்காள மிடுவார் புவி சிறக்க!

 

வானவெளிப் பொட்டல் அவர்வீடு! – நாம்

வாழ்த்தியே நின்றோம் பண்போடு!

கான மிசைத்துக் கொட்டுங்கடி – அந்த

கருப்பரைக் காண முந்துங்கடி!

 

சேமங் குதிரைகள் சித்திரமாம் – நம்

சேம நலங்களும் பத்திரமாம்

நாமம் போற்றிடக் கும்மியடி – அந்த

நாதத் தலைவனை நம்பியடி!

 

இருட்டு நீக்கிய இதயத்திலே – அவர்

எல்லை காட்டுவார் உதயத்திலே!

திருட்டு வேலைகள் தீய்ந்திடவே – அவர்

தீப்பொறி பறக்க விழித்திடுவார்

 

மையிட்ட கருப்புத் திருமேனி – அவர்

மனமிட்ட பொறுப்பு அருள்ஞானி!

பொய்யிட்ட நெஞ்சில் அன்னியராம் – அவர்

புகழிட்ட வாழ்வின் கன்னியராம்

 

கோட்டைக் கருப்பரே குலதெய்வம் – அவர்

வேட்டை ஆடிட வருந்தெய்வம்

சேட்டை போக்கும் பெருந்தெய்வம் – அவர்

காட்டைக் கலக்கும் கருந்தெய்வம்!

 

சங்கிலிக் கருப்பரும் உடன்வருவார் – அவர்

சந்தோஷஎண்ணங்கள் தான் தருவார்!

பொங்கிட அருளும் புகழ்தருவார் – அவர்

போற்றிடக் காத்திடும் தெய்வமம்மா!

 

குங்குமக் காளியைக் கூப்பிடுவோம் – அவள்

குறைதீர்க்க வருவாள் வாழ்த்திடுவோம்!

பங்கமில்லா அவள் பார்வையிலே – பாவம்

பறந்தோட காண்போம் அருளினிலே!

 

சூலம் எடுத்தவள் மாகாளி! – அவள்

சுந்தரச் சிந்து பாடுங்கடி!

ஞாலம் காப்பவள் காளியம்மா! – அவள்

ஞானம் காப்பவள் வாழியம்மா!

 

செக்கச் சிவந்த சேலைக்கட்டி – காளி

செந்தூரப் பொட்டு நெற்றியிட்டு

பக்கத்தில் வந்து காத்திடுவாள் – பக்திப்

பாட்டுக்குள் சிந்தாய்ப்பூத்திடுவாள்!

வந்தான் கருப்பன் விளையாட

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நின்றாட

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நின்றாட

 

வாளும் வேலும் விளையாட

வாளில் ஏறி நின்றாட

சுக்கு மாந்தடி சுழன்றாட

வந்தான் கருப்பன் விளையாட

 

காலில் சலங்கை கலகலக்க

கையில் வாளும் பளபளக்க

முறுக்கு மீசை துடிதுடிக்க

வந்தான் கருப்பன் விளையாட

 

பாலும் சோறும் கமகமக்க

பள்ளையம் இங்கே ஜொலிஜொலிக்க

பிள்ளைகள் நாங்கள் கொண்டாட

வந்தான் கருப்பன் விளையாட

 

சந்தனக் கருப்பன் தானாட

சங்கிலிக் கருப்பன் உடனாட

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட

 

முன்னோடியுமே ஓடிவர

நொண்டியுமே இங்கே ஆடிவர

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட

 

கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்

கூடி இருப்பவன் சாஷ்தாவாம்

தங்கையும் அங்கே அருகிருக்க

தரணியை காக்க வந்தவனாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.