கருவாட்டு பொரியல் செய்வது எப்படி?

கருவாட்டு பொரியல் என்பது ஒரு தனித்த சுவையுடைய உணவாகும். இது அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெறும்.

இன்றைக்கும் கருவாட்டுக் குழம்பும், பொரியலும் கிராமப் புறங்களில் விரும்பி சமைத்து உண்ணப்படுகிறது. இதற்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும்.

கருவாட்டு பொரியலைத் தயார் செய்ய சீலா மீன் எனப்படும் நெய் மீன் கருவாட்டைப் பயன்படுத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையான கருவாட்டு பொரியல் செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சீலா மீன் அல்லது நெய் மீன் கருவாடு – 10 கிராம் அல்லது ஒரு துண்டு

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2 அல்லது 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கருவாட்டைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை காம்பினை நீக்கி விட்டு நேர்வாக்கில் கீறிக் கொள்ளவும்.

கருவாட்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
கருவாட்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

 

அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து நல்ல எண்ணெயை ஊற்றவும். அதில் சதுரங்களாக நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். பின் அதனுடன் நேர்வாக்கில் கீறி வைத்துள்ள மிளகாய்களைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பினைச் சேர்க்கவும். கலவையை வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயக் கலவை பாதி வெந்தவுடன் கழுவி வைத்துள்ள கருவாட்டு துண்டினைச் சேர்த்து வதக்கவும்.

கருவாடு சேர்க்கும்போது
கருவாடு சேர்க்கும்போது

 

வெங்காயம் நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான கருவாட்டு பொரியல் தயார்.

சுவையான கருவாட்டு பொரியல்
சுவையான கருவாட்டு பொரியல்

 

இப்பொரியலை பழைய சாதம், கம்மங் கூழ், ரசம் சாதம், மோர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். பாலூட்டும் தாய்மார்கள் இப்பொரியலை உண்ண பால் சுரப்பு அதிகரிக்கும்.

குறிப்பு: காரம் விரும்புவர்கள் மிளகாயை அதிகம் சேர்க்கலாம். இரும்பு சட்டியில் கருவாட்டுப்பொரியல் தயார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்