கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்

கறிவேம்பு இலை என்பதையே கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என நாம் குறிப்பிடுகிறோம். கறிவேப்பிலை சமையலில் மணமூட்டும் முக்கியமான இலையாகும்.

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும்; உடலை வலுவாக்கும்.

கறிவேப்பிலை குடல் வாயுவை வெளியேற்றும்.சாப்பிடும் போது நமக்குக் கிடைக்கும் கறிவேப்பிலையை ஒதுக்கி விடாமல் சாப்பிடுவதன் மூலமாக அதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது சிறு மரம் வகையைச் சேர்ந்த‌து. கறிவேப்பிலை இலைகள், தண்டு மற்றும் கிளைகளின் நுனியில் இலைகள் கொத்தாகக் கிளைத்திருக்கும்.

கறிவேப்பிலை மணமுள்ளது. பூக்கள், வெண்மையானவை, உச்சியில் கொத்தாகக் காணப்படும்.கறிவேப்பிலை பழங்கள், கருப்பு நிறமானவை,தொகுப்பானவை.

கறிவேப்பிலை அன்றாட உணவில் இதன் முக்கியத்துவம் கருதி ஏராளமாகப் பயிர் செய்யப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும், வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக விளைகின்றது.

வீடுகளில் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்கள் பெரும்பாலும் நுனிக்கிளையை ஒடிக்கப்பட்டு விடுவதன் காரணமாக புதர்ச்செடியாகவே காணப்படும். காய்கறி அங்காடிகளில் கறிவேப்பிலை இலைகள் சாதாரணமாகக் கிடைக்கின்றது.

தேவையான அளவு கறிவேப்பிலையை, நெய்யில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 தேக்கரண்டி அளவு தூளை, சூடான சாதத்துடன் கலந்து, சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கறிவேப்பிலை இலைகளுடன், சிறிதளவு இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு, இடித்து, தூள் செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி அளவு தூளை, இரவு சாப்பிடும் போது, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

2 கொத்து கறிவேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு, காம்பு நீக்கி, 2 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 1 டம்ளர் ஆக சுண்டக் காய்ச்சிய பின்னர் இறக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ¼ டம்ளர் வீதம், ஒரு நாளைக்கு 4 வேளைகள் குடிக்க சளி இருமல் குணமாகும்.

குமட்டல், வாந்தி, சீதபேதி போன்றவைகளுக்கு கறிவேப்பிலை, சிறிதளவு மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வதக்கி, சிறிதளவு புளி, உப்பு சேர்த்து, அரைத்து, துவையல் செய்ய வேண்டும். இதனை சாதத்துடன் சேர்த்துக் பிசைந்து சாப்பிடலாம்.