கறிவேப்பிலை

கறிவேப்பிலை என்பது பரவலாக எல்லாவிதமான உணவுப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது எல்லாப் பருவங்களிலும் பயிர் செய்ய ஏற்றது. அதிகமான வெப்பநிலை நிலவும் பகுதிகளிலும், வறட்சியான பிரதேசங்களிலும் தளதள வென்று வளரும் தன்மை உடையது. இதன் வளர்ச்சி குறைந்தபட்சமாக வெப்பநிலை 13 சென்டிகிரேடுக்கு கீழே சென்றால் மட்டுமே பாதிப்படையும்.

இது தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கேற்ற லாபகரமான பயிர் சுமார் 15 முதல் 20 வருடங்களுக்கு நீடித்து வருமானம் தரக்கூடியது. வறட்சியை தாங்கி வளரும் இயல்புடைய தாவரம். வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதும்.

பொதுவாக செங்காம்பு மற்றும் பச்சை காம்பு என்ற இரு வகைகள் கறிவேப்பிலையில் உள்ளன. செங்காம்பு வகை சிவப்பு இலைக்காம்பு, பெரிய இலைகள் மற்றும் நல்ல மணத்துடன் காணப்படும். ஆத்தூர் மற்றும் மேட்டுப்பாளையப் பகுதிகளில் பெருமளவில் உள்ளன.

மணல் சார்ந்த செம்மண், வண்டல் மற்றும் மண்கலந்த கரிசல் ஆகியவற்றில் கறிவேப்பிலை நன்கு வளரும். மரத்தின் அடியில் நீர்த்தேங்காமல் வடிகால் வசதி இருப்பது நல்லது. நீர்த்தேங்கினால் இலைகள் பழுத்து உதிர்ந்து விடும்.

கறிவேப்பிலையை நடவு செய்ய முதலில் நிலத்தை 3 முதல் 4 முறை ஆழமாக உழ வேண்டும். எந்த அளவிற்கு இயற்கை உரம் இடுகிறமோ அந்த அளவிற்கு விளைச்சலும், வாசனையும் அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 வண்டி தொழு உரம் இடவேண்டும். மண்புழு உரம் இரண்டு டன் இட்டால் இலைகளின் தரம் அதிகரிக்கும்.

ஆணிவேர் கொண்ட கறிவேப்பிலை செடிகளை நட 1 ½’ X 1 ½ X 1 ½ குழிகள் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை இரண்டரை அடி இடைவெளியிலும் வரிசைக்குள் இரண்டு அடி இடைவெளியிலும் குழிகளை அமைக்கலாம்.

ஒரு ஏக்கரில் நடவு செய்ய 7000 முதல் 7500 செடிகள் தேவைப்படும். 60 முதல் 70 நாள் ஆன செடிகளை வாங்கி பராமரித்து 120 நாட்கள் ஆவதற்குள் நட்டுவிட வேண்டும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யலாம். வெயிலின் தாக்கத்தினால் செடிகள் வாடிவிட்டால் அதில் வேறு ஒரு நல்ல செடியை நட்டு விடலாம்.

ஒவ்வொரு பருவ மழைக்குப் பின்னும் வருடம் ஒரு முறையாவது உரமிடுவது அவசியம். பராமரிப்பின் போது ஒரு ஏக்கருக்கு 20 வண்டி தொழு உரம் இட வேண்டும். உரம் இட்டபின் உடனடியாக பாசனம் செய்ய வேண்டும்.

வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் அதிக விளைச்சல் பெறலாம். நீண்ட காலப் பயிர் என்பதாலும், பாசன பற்றாக்குறையை சமாளிக்க சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது நல்லது. சராசரியாக வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை அறுவடை செய்யலாம்.

நான்கு அறுவடையிலும் சேர்த்து ஏக்கருக்கு 12 டன் வரை தழை மகசூல் கிடைக்கும். முதல் அறுவடை நடவு செய்த ஆறு மாதங்களில் செய்யலாம். அதன்பிறகு 70 முதல் 90 நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். எருச்சத்தும் பாசனமும் போதிய அளவு கிடைக்கும் வரை விளைச்சல் அதிகரிக்கும்.

கறிவேப்பிலைச் செடிகளை நான்கு அடி உயரத்திற்கு மேல் வளரவிடக்கூடாது. உயரம் குறைவாக இருந்தால்தான் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். செடிகளை நட்ட ஆறு மாதத்தில் 3-4 அடி உயரம் வளர்ந்து விடும். இந்த சமயத்தில் செடிகளை அரை அடி உயரத்திற்கு கவாத்து (ஒடித்து) செய்ய வேண்டும்.

2 முதல் 3 அறுவடைக்குப்பின் தூரின் உயரமும், கனமும் கூடிவிடும். இந்த தருணத்தில் மறுபடியும் அரை அடி உயரத்திற்கு வெட்டிவிட வேண்டும். கவாத்து செய்வதால் அதிக பக்க கிளைகள் உருவாகி இளம் தளிர்கள் உற்பத்தியாகி விளைச்சல் அதிகமாகும்.

கறிவேப்பிலைக்கு தொழு எரு அதிகம் இடுவதாலும், செடிகளுக்கு இடையே அதிக இடைவெளி இருப்பதாலும், களை தொந்தரவு அதிகமாக இருக்கும். வருடத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் களை எடுத்து விடலாம்.

கறிவேப்பிலையில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம். இதனால் மண்வளம் சிறந்து செடி செழித்து வளர்ந்து அதிக லாபம் தருவதுடன் களைச் செடிகளின் தொந்தரவும் குறையும். ஊடுபயிற்றின் மூலம் கூடுதலான வருவாய் கிடைக்கும். இது தவிர மா, தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக கறிவேப்பிலையை பயிர் செய்யலாம்.

இந்த பயிர் வளர்ப்பு மற்றும் அறுவடைக்கு மற்ற பயிர்கள் போல் வேலையாள் பிரச்சினை அவ்வளவாக இல்லை. மேலும் சில இடங்களில் வியாபாரிகளே கறிவேப்பிலையை அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர்.

சமையலுக்கு மட்டுமின்றி, மசால் பொடி தயாரிப்பிலும், மருத்துவப் பயன்பாட்டிலும் கறிவேப்பிலைக்கான தேவை தற்பொழுது அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளிலும் கறிவேப்பிலை விரும்பி வாங்கப்படுகிறது.

குறைந்த நீரைக் கொண்டு, அதிக செலவில்லாமல், லாபத்தை அள்ளித்தரும் கறிவேப்பிலை பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி பயிரிடுவோருக்கும் கமகம வாசனையோடு செழிப்பான வாழ்க்கையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.