கற்கம்

மூலிகைத் தாவரங்களின் பாகங்களான‌ இலை, தழை, வேர் போன்றவற்றை நன்கு மை போல் அரைத்து விழுதாகவே அல்லது பால், நீர் போன்றவற்றுடன் கலந்து உண்ணக் கொடுத்தல் கற்கம் என்றழைக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் கற்கங்களை தயார் செய்து மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும்.

 

கீழாநெல்லிக் கற்கம்

கீழாநெல்லித் தாவரத்தை வேருடன் சேகரித்துக் கொள்ளவும். பின் அதன் தழை (சிறு கொப்புடன் கூடிய இலைகள்) மற்றும் வேர் பாகங்களை சுத்தம் செய்து கழுவி பொடியாக அரிந்து நன்கு விழுதாய் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இவ்விழுதினை சிறுநெல்லிக்காய் அளவு எடுத்து தினமும் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் கலந்து கொடுக்கவும். இவ்வாறு செய்து வர காமாலை நோய் குணமாகும்.

 

குப்பைமேனி கற்கம்

குப்பைமேனித் தாவரத்தை வேருடன் சேகரித்துக் கொள்ளவும். பின் அதன் தழை (சிறு கொப்புடன் கூடிய இலைகள்) மற்றும் வேர் பாகங்களை சுத்தம் செய்து கழுவி பொடியாக அரிந்து நன்கு விழுதாய் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இவ்விழுதினை கொட்டைப் பாக்கு அளவு எடுத்து மூன்று நாட்கள் மட்டும் நீரில் கரைத்துக் கொடுக்கவும். உப்பில்லா பத்தியம் வைக்கவும். இவ்வாறு செய்து வர குடற்புழு, பலவகை நஞ்சு, நமைச்சல் ஆகியன குணமாகும்.

 

மருதாணிக் கற்கம்

மருதாணி இலைகளை சிறிதளவு எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். அத்துடன் பூண்டு ஒரு பல், மிளகு ஐந்து சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

இதில் 2 முதல் 4 கிராம் விழுதை எடுத்து தினமும் காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்கவும். இவ்வாறு செய்து வர வெள்ளைப்படுதல், கைகால் எரிச்சல் ஆகியன தீரும்.

 

கரிசாலைக் கற்கம்

கரிசாலைத் தாவரத்தை சேகரித்துக் கொள்ளவும். அதனை சுத்தம் செய்து பொடியாக அரிந்து விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.

இதில் 2 முதல் 4 கிராம் வரை எடுத்து தினமும் பாலில் இரு வேளை கலந்து கொடுக்கவும். இவ்வாறு செய்து வர காமாலை, வெளுப்பு நோய், இரத்த சோகை, வீக்கம் ஆகியன தீரும். கண் பார்வை தெளிவாகும்.

 

கறிவேப்பிலைக் கற்கம்

கறிவேப்பிலை தாவரத்தின் இலைகளை சேகரித்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்துக் கொடுக்கவும்.

இதில் 5 முதல் 10 கிராம் வரை எடுத்து உள்ளுக்குள் கொடுக்கவும். இவ்வாறு செய்து வர செரியாமை, வயிற்றுவலி ஆகியன தீரும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.