கற்பு – சிறுகதை

சென்ற வாரம் இதே நேரம் மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் ஹால் முழுவதும் உறவினர்களும் நண்பர்களுமாய் நிறைந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, இன்றோ ஒவ்வொருவரும் மன அமைதியைத் தொலைத்துவிட்டு, முகத்தில் இறுக்கம் சூழ, தலையில் கைவைத்தபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மௌனத்தில் மூழ்கியிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஹால் சுவர்க் கடிகாரம் காலை மணி பத்து என்பதைக் காட்டி தனது கடமையைச் செய்து விட்ட திருப்தியுடன் மணி அடிப்பதை நிறுத்திக் கொண்டது.

கிருஷ்ணகுமார் தான் அந்த மயான அமைதியைக் கலைத்தான்.

“இப்படி எல்லோரும் இடிஞ்சு போய் உட்கார்ந்துக்கிட்டிருந்தா எப்படி? மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பாருங்க.”

“மேற்கொண்டு என்னத்தப் பண்றது? சனியனைத் தலைமுழுக வேண்டியது தான்.”

மைத்துனனின் கேள்விக்குத் தன் பங்காக இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஹாலை விட்டு வெளியேறினார் நீலகண்டன்.

நீலகண்டனின் வெறுப்புடன் கூடிய பதிலைக் கேட்டு நீலா குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“அம்மா, அப்பாவே சொல்லிட்டார். கொஞ்சம் விஷத்தைக் கொடுத்து என்னை எல்லோருமா தலை முழுகிடுங்க.”

நீலாவைத் தேற்றினான் கிருஷ்ணகுமார். தன்னுடைய அக்கா கற்பகத்தின் பெண் நீலாவுக்கு ஏற்பட்டுவிட்ட கதிக்கு அவன் மனமும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தது.

நீலாவின் தாய் கற்பகம் விஷயத்தைக் கேட்டதும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நொறுங்கிப் போயிருந்தாள். மோட்டு வளையை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாள்.

ஹாலை விட்டு வெளியே வந்த நீலகண்டனை நண்பர்களும், அண்டை வீட்டார்களும் சூழ்ந்து கொண்டு அவரவர் அபிப்ராயங்களையும், ஆதங்கங்களையும் கொட்ட ஆரம்பித்தார்கள்.

“என்னய்யா இது? போன ஞாயிற்றுக் கிழமை தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. ஒரு வாரத்துல இப்படி ஒரு அசம்பாவிதமா? இப்போ என்ன செய்யப் போகிறீர் நீலகண்டன்?”

“பெண்ணைப் பெற்றாலே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டியிருக்கு. கல்யாணம் எப்போ நிச்சயம் ஆயிடுத்தோ அப்போதே நீலாவைப் படிச்சது போதும், வீட்டிலேயே இருன்னு சொல்லியிருக்கணும்.”

“விதி யாரை விட்டது?”

உறவினர்களில் ஒருவர் கிருஷ்ணகுமாரைத் தனியே யாருமில்லாத இடத்திற்கு அழைத்துப் போய்,

“குமார், நாளைக்கு நீ தான் சென்னை போய் மாப்பிள்ளை வீட்டாரைப் பார்க்கணும்” என்றார்.

“அவங்கக் கிட்ட போய் எப்படி விஷயத்தைச் சொல்றதுன்னே தெரியலை. நீலாவை நினைச்சா வேறு பயமாயிருக்கு. ஏடாகூடமா ஏதாவது நடக்காமலிருக்கணும்.”

“ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுட்டு தைரியமாப் போய் பேசிப் பாரு குமார். நாங்கெல்லாம் தான் இங்கே இருக்கோமே. நீலாவைக் கவனிச்சுக்கிறோம்.”

ஒருவித தயக்கத்துடன் நீலகண்டனை அணுகி “மாமா, நாளைக்கே நான் கிளம்புறேன். சென்னை போய் அவங்களைப் பார்த்துப் பக்குவமா ஏதாவது பேசிப் பார்க்கிறேன். என்ன சொல்றீங்க?” என்றான் கிருஷ்ணகுமார்.

நீலகண்டன் வாய் திறந்து பதிலேதும் கூறவில்லை.

துண்டால் வாயைப் பொத்தியபடிக் குலுங்கினார்.

“என்னவோ செய்யுங்க. நடக்கறபடி நடக்கட்டும்” என்னும் பாவனையில் கையினால் சைகை காண்பித்தார்.

கிருஷ்ணகுமார் மறுநாள் சென்னை கிளம்பினான். தியாகராய நகரில் மாப்பிள்ளை வீட்டார் குடியிருக்கும் தெருவை ஒருவழியாய் கண்டு பிடித்து, வீட்டை நெருங்கிய சமயம் மாப்பிள்ளைப் பையன் தியாகுவே கேட்டைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

கிருஷ்ணகுமாரை நிச்சயதார்த்த சமயம் பார்த்திருந்ததால் சுலபமாக அவனால் அடையாளங் கண்டு கொள்ள முடிந்தது.

“வாங்க, வாங்க! உங்களுக்குப் போன் செய்யலாம்னு தான் கிளம்பினேன்.”

கிருஷ்ணகுமாரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

வீட்டில் தியாகுவின் பெற்றோரும், அவனது இளைய சகோதரனும் மட்டுமே இருந்தனர். தியாகுவின் தகப்பனார் கிருஷ்ணகுமாரைக் கண்டதும் “நீங்க வருவீங்கன்னு தெரியும். ஒரு வேளை வாரம இருந்துவிடுவீங்களோன்னு நினைச்சுத் தான் தியாகுவைப் போன் பேச அனுப்பினேன்.” என்றார்.

ரொம்பவும் யதார்த்தமாக ஒவ்வொருவரும் எவ்விதத் தாக்கமுயின்றி இயல்பாகப் பேசியது கிருஷ்ணகுமாருக்கு வியப்பாக இருந்தது.

அவர்கள் அமரச் சொல்லியும், அமராமல் நின்று கொண்டே கைகளைக் கட்டிக் கொண்டு விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமல் ஒரு வித தயக்கத்தில் இருந்தான்.

“நீயூஸ் பேப்பரைப் பார்த்தோம். விஷயத்தை அறிந்தோம். இப்போ என்ன செய்வதாய் உத்தேசம்?” – தியாகுவின் தகப்பனார் நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தார்.

“நடக்கக் கூடாதது நடந்துடுச்சு. வீட்ல எல்லோரும் இடிஞ்சு போயிருக்காங்க. நர்சிங் டிரெயினிங் முடிய இரண்டு மாசம் தானே இருக்கு. முடிச்சிடட்டுமேன்னு தான் கல்யாணத்தை இரண்டு மாசம் தள்ளிப் போடச் சொல்லி உங்க கிட்டக் கேட்டுக்கிட்டோம். அதுக்குள்ள இப்படி தலையிலே இடி விழுந்த மாதிரி ஜீரணிக்க முடியாத ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு. எங்களுக்கே இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலே…”

கிருஷ்ணகுமார் திக்கித் திக்கி ஒரு வழியாய் மனதிலிருந்ததைக் கொட்டித் தீர்த்தான். டீபாயிலிருந்த அன்றைய நாளிதழ் காற்றில் அடித்துக் கொண்டிருந்தது.

நாளிதழின் உட்பக்கத்தில் கொட்டை எழுத்தில் நர்சிங் பயிற்சி நடத்திவரும் அந்த தனியார் பள்ளியின் தலைவரைப் பற்றியும், அவரால் சிதைக்கப்பட்டிருந்த மாணவிகளைப் பற்றியும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது, கிருஷ்ணகுமார் கண்களில் பட்டது. நீலாவின் புகைப்படத்தையும் அதில் கண்டான்.

நடந்து முடிந்த அவலங்களை செய்தித்தாள் மூலம் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டான்.

“… … … உங்களுக்கு ஆட்பேனை இல்லைன்னா நீலாவின் தங்கையை தியாகுவுக்கு … … …”- என்று மெதுவாக இழுக்க ஆரம்பித்த கிருஷ்ணகுமாரைத் தியாகுவின் தகப்பனார் இடைமறித்தார்.

“அப்படி ஒரு எண்ணத்தோடத் தான் இங்கே வந்திருக்கீங்களா? நீங்கெல்லாம் இவ்வளவு சுலபமா இப்படி ஒரு முடிவுக்கு வருவீங்கன்னு நாங்க நினைக்கலை.”

“ஐயா, வேற என்ன செய்யறதுன்னு எங்களுக்குப் புரியலே. இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நீலாவைப் பற்றிப் பேச்சை எடுக்கிறதே தப்பு இல்லையா? பாவம் இல்லையா?”

கிருஷ்ணகுமாருக்கு தியாகு பதில் கூறினான்.

“வயசுல பெரியவங்க நீங்க. நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வர்றது தான் பாவம். நடந்திருக்கக் கூடாது தான். நடந்து போச்சு. அதுக்காக? … … கற்பிழந்தவளை இவங்க ஏத்துப்பாங்களாங்கிற சந்தேகம் தானே உங்களுக்கு?”

தியாகு இப்படிக் கேட்டதும் கிருஷ்ணகுமாருக்கு உடல் சிலிர்த்தது. நடப்பது கனவா நனவா என்றே தெரியவில்லை அவனுக்கு.

“தியாகு, என்ன சொல்றீங்க நீங்க?” – ஒருவிதப் பரவசம் மேலிடக் கேட்டான் கிருஷ்ணகுமார்.

“கிருஷ்ணகுமார்! நீலாவுக்கு நடந்தது ஒரு விபத்து. ஒரு பாவமும் அறியாத அவளுக்கு நாமே இப்படி ஒரு தண்டனை வழங்குவதா? எங்க குடும்பத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எல்லோருமே முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள்.

இதோ என் மனைவி இருக்காளே, இவ ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவளோட ரெண்டு பையன்களும் ஸ்டேட்ஸ்ல இருக்காங்க. ராணுவத்துல இருந்த இவளோட கணவர் இறந்ததும் என்னை மறுமணம் செஞ்சுக்கிட்டிருக்கா.

ஏற்கனவே மனைவியை இழந்த எனக்கு ரெண்டு பையன்களும், ஒரு மகளும் இருக்காங்க. தியாகுவும், அவன் தம்பியும் என் மூத்த சம்சாரத்தின் குழந்தைகள். என் மகளுக்குக் கல்யாணம் ஆகிப் போயிட்டா. நிலைமை இப்படியிருக்க, நீங்க என்னடான்னா நீலாவின் கற்பைப் பற்றிப் பேசறது வேடிக்கையா இருக்கு…”

தியாகுவின் தகப்பனார் பேசி முடிந்ததும்,

“ஐயா, நாங்க இப்போ என்ன செய்யணும்னு சொல்றீங்க?” கிருஷ்ணகுமார் கேட்டான்.

“நிச்சயத்த தேதியில் இந்தக் கல்யாணம் நடக்கணும். நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க. இந்த உலகத்துல நிறைய பேர் ‘கற்பு’ன்னா உடல் சம்பந்தப்பட்டுதுன்னு மட்டும் தான் நினைச்சுச் செயல்படுறாங்க.

மனம் நிறைய வக்கிர எண்ணங்களையும், சபலங்களையும் திணிச்சுக்கிட்டுப் பார்வையாலேயே பெண்களை மாசுபடுத்தும் மனித ஜென்மங்களைத் தான் நாம் அன்றாடம் கண்கூடாகப் பார்க்கிறோமே. ஆண்களுக்கு ஒரு நியதி. பெண்களுக்கு ஒரு நியதியா?

மனைவியை இழந்தவன் மட்டும் கற்புடையவனா, அவன் மறுமணம் செய்துக்கலையா? அதே சமயம், கணவனை இழந்தவளை மணம் புரிய எத்தனை பேர் முன் வர்றாங்க? … …. ….”

தியாகுவின் பேச்சில் மெய்மறந்து சிiலாக நின்ற கிருஷ்ணகுமாருக்கு என்ன செல்வது என்றே தெரியவில்லை. தியாகுவின் தகப்பனார் மீண்டும் தொடர்ந்தார்.

“இவ்வளவு ஏன்? காதலிக்கிறவங்க எல்லோருமே அவங்க விரும்புகிறவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன?

காதல் கை கூடாமல் இன்னொருத்தனையோ, இன்னொருத்தியையோ கல்யாணம் செஞ்சுக்கிறதில்லையா? இவங்க எல்லோருமே உங்க அபிப்ராயப்படிப் பார்த்தால் கற்பை இழந்தவர்கள்தான்.

‘கற்பு’-ங்கிறது மனம் – உடல் இரண்டுமே சம்மந்தப்பட்டது. இரண்டில் ஏதாவது ஒன்று போனாலும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

மனித நேயம், மனிதாபிமானம், தூய எண்ணம், பரந்த மனப்பான்மை, ஆத்மார்த்தமான அன்பு, முற்போக்கான சிந்தனை இவைகள் எல்லாம்தான் ‘கற்பு’ மிஸ்டர் கிருஷ்ணகுமார்.

நீலாவைப் பொறுத்தமட்டில் அவள் குற்றமற்றவள். மனம் – உடல் இரண்டினாலுமே அவளாகவே கெடாதவள். என் அடுத்த பையன்கூட ஒரு விதவைக்குத்தான் வாழ்வு கொடுக்கப் போகிறான். மனசைப் போட்டு குழப்பிக்காமல் உடனே போய் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பாருங்க.”

கிருஷ்ணகுமாரின் இருண்ட மனம் முழுக்கப் பிரகாசமானது. மகிழ்ச்சிப் பிரவாகம் மனம் முழுக்க!

தியாகுவையும், அவன் தகப்பனாரையும் கையெடுத்துக் கும்பிட்டான்.
கண்களில் நீர் மல்க, நிம்மதியுடனும், தெளிவுடனும் ஊர் திரும்பினான். ‘கற்பு’-க்கு அவர்கள் தந்த இலக்கணம் அவனது இதயத்தில் ஆழமாகப் பதிந்தது.

புதிய தெம்புடன் நீலாவை ஆவலுடன் சந்திக்க வீட்டை நெருங்கிய சமயம், வீட்டின் முன் ஜனங்கள் குழுமியிருந்தார்கள். போலீஸ் ஜீப் ஒன்றும், ஆம்புலன்ஸூம் நின்றிருந்தன. இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் ஏதேதோ ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரையும் விலக்கிக் கொண்டு மனம் பதை பதைக்க, நெஞ்சு பட படக்க ஹாலுக்குள் நுழைந்தான் கிருஷ்ணகுமார். அங்கே … …. ….

‘கற்பு’-க்கு நீலாவின் இலக்கணம் வேறு மாதிரி இருந்தது. தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு இறுதிப் பயணத்தை எதிர் நோக்கி அமைதியாக மீளாத்துயிலில் மூழ்கியிருந்தாள் நீலா.

என்ன தான் இருபது நூற்றாண்டுகளைக் கடந்து முற்போக்குச் சிந்தனையுடன் மனிதர்கள் முன்னேறினாலும் நீலாவைப் போன்ற சில அப்பாவிப் பெண்கள் அப்படிப்பட்ட முற்போக்கு எண்ணங்கள், சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு இன்னும் வரவில்லை என்பதை நினைக்கையில் கிருஷ்ணகுமாருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

கயவர்களுக்கு வாழ்வும், கன்னிப் பெண்களுக்குச் சாவும் நிகழாமலிருக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டுமோ?- எனப் பெருமூச்செறிந்தான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.