கலிக்கம்ப நாயனார் – சிவனடியாராக வந்த பணியாளனை வழிபட்டவர்

கலிக்கம்ப நாயனார் சிவனடியாராக வந்த தன்னிடம் பணிபுரிந்த முன்னாள் பணியாளரை அடியாராகக் கருதி வழிபட்டவர்.

முன்னாள் பணியாள் என்ற காரணத்தினால் அடியவர் வழிபாட்டிற்கு தாமதித்த தன்னுடைய மனைவியின் கையினை வெட்டிய வணிகர்.

பண்டைய நடுநாட்டில் பெண்ணாடகம் என்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம் ஒன்று இருந்தது. தேவகன்னியர் (பெண்) + காமதேனு (ஆ) + இந்திரனின் வெள்ளை யானை (கடம்) ஆகியோர் வழிபட்ட தலமாதலால் பெண்ணாடகம் என்று பெயர் வந்தது.

தற்போது பெண்ணாடகம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்திற்கு வந்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். பெண்ணாடகத்தில் உள்ள திருக்கோவில் தூங்கானை மாடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

பெண்ணாடகத்தில் வணிகத் தொழில் புரியும் கலிக்கம்பர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். தொழிலில் வல்லவரான அவர் சிவனாரிடத்தும் அவர்தம் அடியவரிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார்.

தினந்தோறும் தூங்கானை மாடத் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதலை பெரும்பேறாகக் கருதினார்.

சிவனடியார்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு அறுசுவையுடன் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து உபசரித்து வந்தார்.

மனைவி கையை வெட்டினார்

இவ்வாறு இருக்கையில் ஒருநாள் தம்முடைய இல்லத்திற்கு திருவமுது செய்விக்க வந்திருந்த சிவனடியார்களை முறைப்படி வரவேற்றார்.

கலிக்கம்ப நாயனார் மனைவியார் அடியார்களின் திருவமுதிற்காக வீட்டினைச் சுத்தம் செய்து அறுசுவை உணவு வகைகளை சிறப்பாக செய்து வைத்தார்.

சிவனடியார்களுக்கு திருவமுது படைப்பதற்கு முன் அக்கால வழக்கப்படி அவர்களின் திருவடிகளை நீரால் கழுவி தூய்மையாக்க கலிக்கம்பர் முற்பட்டார்.

கலிக்கம்பரின் மனைவியார் செம்பில் இருந்து நீரினை ஊற்ற, கலிக்கம்பர் அடியார்களின் திருவடிகளைக் கழுவினார்.

அப்போது வந்திருந்த சிவனடியார்களில் ஒருவர் ஆசனத்தில் வந்து அமர்ந்தார். சிவனடியாரின் முகத்தைப் பார்த்ததும் கலிக்கம்பரின் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது.

ஏனெனில் அவ்வடியார் சிலகாலங்களுக்கு முன்பு கலிக்கம்பரிடம் பணியாளாக இருந்தவர். கலிக்கம்பரின் ஏவலைப் பிடிக்காத அப்பணியாள் சிலகாலம் கழித்து தற்போது சிவனடியாராக வந்துள்ளார்.

எரிச்சல் மிகுதியால் செம்பிலிருந்து அடியாரின் திருவடியைக் கழுவுவதற்கு தண்ணீரை வார்க்காமல் காலந் தாழ்த்தினார் கலிக்கம்பரின் மனைவி.

மனைவியாரின் முகத்தைப் பார்த்ததும் கலிகம்பருக்கு மனைவியாரின் உள்ளக் குறிப்பு உணர்ந்தது.

‘இவர் சிவனடியாராக இங்கு வந்ததை எண்ணாமல், பழைய காலத்துக் கதையை நினைத்து காலந் தாழ்த்துகிறாளே’ என்று எண்ணிய கலிக்கம்ப நாயனார், உள்ளே சென்று வாளை எடுத்து வந்தார்.

மனைவியிடம் இருந்த செம்பினை வாங்கிக் கொண்டு சிறிதும் தயங்காமல் அவருடைய கையை வாளால் வெட்டி விட்டார். கலிக்கம்பரின் மனைவியார் மயங்கி கீழே சரிந்தார்.

பின்னர் வந்தரை பணியாள் என்று எண்ணி அருவருப்பு கொள்ளாது சிவனடியாராகக் கருதி அவருடைய பாதங்களை செம்பிலிருந்த நீரால் கழுவினார். அடியாரின் மனங்கோணாது திருவமுது செய்வித்தார்.

இத்தனை காலம் தம்முடன் இருந்தும் தம் மனைவிக்கு சிவனடியார் இடத்தில் வேற்றுமை உணர்வு வந்ததால் இல்லாள் என்று பாராமல் கையைத் தறித்தார் கலிக்கம்பர்.

அடியார் மீதிருந்த கலிக்கம்பரின் பேரன்பினால் சிவனார் கலிக்கம்பரின் மனைவியாருக்கு மீண்டும் கையை அளித்ததோடு அவ்விருக்கும் தம் திருவடியில் நீங்காதிருக்கும் பெரும் பாக்கியத்தையும் அருளினார்.

கலிக்கம்ப நாயனார் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

சிவனடியாராக வந்த முன்னாள் பணியாளரை வேற்றுமை கருதாது அடியார் வழிபாடு மேற்கொண்ட கலிக்கம்ப நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.