கல்யாணப்பூசணி – மருத்துவ பயன்கள்

கல்யாணப்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; ஆண்மையயைப் பெருக்கும்; நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், காக்கை வலிப்பு, பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். பதிவுரிமை செய்யப்பட்ட பல இலேகியங்கள், நெய் வகைகள் காயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

பற்றுக்கம்பிகளைக் கொண்ட, தரையில் படரும் கொடி வகை. இலைகள், அகன்றவை, சுணையுடையவை. பூக்கள், வெளிர்மஞ்சள் நிறமானவை, ஆண், பெண் பூக்கள் தனித்தனியாகக் காணப்படும்.

காய் பெரியது, மேல்தோல் பச்சையாக, சாம்பல் பூசியவாறு இருக்கும். காயின் உட்பாகம் வெள்ளை நிறமான, சதைப் பற்றுக் கொண்டதாக இருக்கும். இந்தியா முழுவதும் காய்கறிப் பயிராகப் பயிரிடப்படுகின்றது.

காய், விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. வெள்ளைப்பூசணி, சாம்பல் பூசணி, தடியங்காய் ஆகிய மாற்றுப் பெயர்களும் கல்யாணப்பூசணிக்கு உண்டு.

மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களின் மேல் சாணி உருண்டைகள் செய்து, அதன் மீது கல்யாணப்பூசணியின் ஆண் மலர்களால் அலங்கரிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உள்ளது.

வெள்ளைப் படுதல் குணமாக கல்யாணப்பூசணிக்காயைக் கீறி, உள்ளிருக்கும் சதைப்பற்றான வெண்பகுதியை எடுத்து அதனுடன் சமஅளவு செம்பருத்திப் பூ இதழ்கள் சேர்த்து, சிறிதளவு சர்க்கரை சேர்த்து, 25 கிராம் அளவு, காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

உடல் சூடு நீங்க கல்யாணப்பூசணிக்காயைக் கீறி, சதைப் பகுதியை சுரண்டி, சேகரித்துக்கொண்டு, விதைகளை நீக்கி, வேகவைத்து, அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன், தேவையான அளவு, பால், தேன், நெய் கலந்து லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த லேகியத்தை 2 தேக்கரண்டிகள், தினமும் இரண்டு வேளைகள், இரண்டு வாரங்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

இளைத்த உடல் பருக்க கல்யாணப்பூசணி வற்றல்: கல்யாணப்பூசணிக்காய்த்துருவல் 5 கிலோ, 1 படி அவல், 30 கிராம் மிளகுத்தூள், ஒரு கை பச்சைமிளகாய், 15 கிராம் பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து வேகவைத்து, கொட்டைப் பாக்கு அளவான உருண்டையாக உருட்டிக் காயவைத்து, வற்றலாக்கி, பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, வேளைக்கு 4 உருண்டைகளை நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட வேண்டும்.

குடல் தட்டைப்புழுக்கள் வெளியாக 25 கிராம் அளவு கல்யாணப்பூசணி விதைகளை எடுத்து, அரைத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு, 3 மணி நேரம் கழித்து, விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும்.

புண்கள் குணமாக கல்யாணப்பூசணிக் காயை வேகவைத்து, உள்ளிருக்கும் சதைப் பற்றான பகுதியைக் கீறி, புண்கள் மீது வைத்துக் கட்டலாம்.

பிற பூசணி வகைகள்

1)பறங்கிக்காய்: ஏறுகொடி வகை. சமையலில் பெருமளவு பயன்படுகின்றது. காயின் உள்ளிருக்கும் சதையை வெயிலில் காயவைத்து, இடித்துத் தூளாக்கி, உள்ளுக்குக் கொடுக்க, இரத்தவாந்தி, கோழை ஆகியவற்றை நீக்கும். இந்தத் தூளை, சிறிது கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட, கோடைக்கால வெப்பத்தினால் உண்டாகும் தாகம் குறையும்.

2)பறங்கிப் பூசணி: ஏறுகொடி வகை, காயின் மேற்புறமும், கீழ்புறமும் குழிவாக இருக்கும். உட்பாகம் மஞ்சள் நிறமான சதைப்பற்றுக் கொண்டதாக இருக்கும். காயின் பக்கங்களில் உள்ள வரிகள் தெளிவாகக் காணப்படும். காய்களைச் சமைத்துச் சாப்பிட, பேதியைத் தூண்டும். அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் உருவாகும்.