கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!

கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே! மனிதன் துன்பக் கடலில் தத்தளித்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. எல்லா விச‌யங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும் என்பது நம் முன்னோர்கள் அருளிய நெறிமுறை. இந்நெறிமுறையின் முதல்படி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாகும்.

உலக அளவில் மிக அதிகமான தொடக்கப் பள்ளிகளைக் கொண்ட நாடு இந்தியா. உலக அளவில் அதிகமான இடைநிலைப் பள்ளிகளைக் கொண்ட நாடுகளில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் அதிக பல்லைகழக மாணவர்களைப் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 4-ம் இடம் வகிக்கின்றது. இது நம் கல்வித் துறையின் மிகப் பெரிய சாதனையாகும்.

இந்தியக் கல்வி துறையின் கலங்கரை விளக்கமாக இன்று தமிழ்நாடு வளர்ந்துள்ளது.
கல்வியின் வாயிலாக நம் நாட்டின் ஆண்களும் பெண்களும் ஒரு சேர எல்லாத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். கல்வி என்பது “அள்ள அள்ளக் குறையாது வரும் அமுத சுரபி” என்ற அட்சய பாத்திரம் என்பதனை உணர்ந்ததால் தான் இன்று நம் வாழ்க்கையோடு கல்வி இணைந்து விட்டது.

இன்று கல்வி நிலைகளில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? அத்தனையும் சுவையான, சுகமான மாற்றங்கள். “கல்வியில் மாணவர்களே ஆணிவேர்” என்பதனை உணர்ந்து மாணவர்கள் சுவையாக சுமையின்றி கற்கவும், மனம் ஒன்றி கல்வி செயல்பாடுகளில் ஈடுபடவும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு ஓடோடி வரவும், தோழமை உணர்வுடன் ஆசிரியருடன் பழகிக் கற்கவும் உள்ள இன்றைய கல்வி முறை, ஒரு வரப் பிரசாதமாகும்.

இன்று இந்திய அளவில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கற்றலும் இனிது கற்பித்தலும் இனிது என்ற சூழ்நிலை இளந்தளிர்களிடம் ஒரு சிந்தனைப் புரட்சியை உருவாக்கும் நாள் இதோ வருகின்றது. இனி கல்வி நிச்சயம் இனிக்கும் என்பதில் மாற்றமில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு, உணர்வுகள் பாதுகாக்கப்பட்ட கல்வி சுமையே அல்ல! சுகமே தரும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

நீதி தரும் கல்வியே தேவை!

புத்தகச் சுமை தேவை இல்லை!

சிந்திக்கம் திறன் மிகு கல்வி தேவை!

குருட்டு மனப்பாட கல்வி தேவை இல்லை!

 

செயலுடன் கூடிய கல்வியே தேவை!

செருக்குடன் கூடிய கல்வி தேவை இல்லை!

பணம் பறிக்கும் கல்வி வேண்டாம்!

பண்பு உள்ள கல்வியே போதும்!

 

அரசு கொடுக்கும் இலவசக் கல்வியே!

அனைத்தும் கற்று உயர்வோம் வாழ்விலே!

கல்வி என்பது பலமே!

கற்றல் என்பது சுகமே!