கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.

 

நுரைத்த கடல்

கக்கித் துப்பிய வார்த்தை.

கூழாங்கற்களாக்கி

மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.

 

சன்னலோரக் கண்,

புவி ஆடிய ஆட்டம்.

மனம் பிறாண்டும் நனவோடை நிகழ்வு.

தராசுத் தட்டு இறங்கி ஏறி இறங்கி.

கவிதைத் தூம்பு பீறிட

அடைத்த அடைப்பு எடுப்பார் எவரோ?

 

முப்பாட்டன் சொத்து.

நான் கட்டிய வீடாகிற பொழுது,

ஆதிமூலமே கா

விதை மரமாகும்

மரமெல்லாம் விதையாகும்.

 

வெப்பப் பிரளயமோ?, தண்ணீர் ஊற்றோ?

அது – கலவையின் விஸ்வரூபம்.

எனவே, கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.

– பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782

 

5 Replies to “கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்”

  1. கவிதை, வார்த்தைகளின் மாயஜாலத்தில் சிக்கிக் கொண்டதாகவே உணர்கிறேன்.

    சில இடங்களில் கவிதை எளிமையாக புரிகிறது. சில இடங்களில் கவிதைக்குள் செல்லவே முடியவில்லை.

    மாலையை தொடுப்பதற்கு அழகான பூக்களையோ அல்லது முத்துக்களையோ சேகரிப்பது போல வார்த்தைகளை தேடித்தேடி கோர்த்ததாக உணர்கிறேன். உதாரணத்திற்கு பின்வரும் வரிகளை குறிப்பிட முடியும்.

    நுரைத்த கடல்

    கக்கித் துப்பிய வார்த்தை.

    கூழாங்கற்களாக்கி

    மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.

    சொற்சிக்கனத்தாலே கவிதையின் அழகு மிளிர்கிறது.

    கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

    ஆங்காங்கே மின்னுவதை அல்லது மிளிர்வதை காண முடிகிறது.

    மகிழ்ச்சி….

    வாழ்த்துக்கள் அய்யா.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்களைப் போலவே
    உங்கள் கவிதையும்
    அழகாக இருக்கிறது.

  2. வெப்பப் பிரளயமோ? வெந்நீர் ஊற்றோ?

    அது கலையின் விஸ்வரூபம் –

    கவிதை.

    ரோட்டுக் கடை – நுரைக்கும் கடல் – புவியின் ஆட்டம் – ஆதிமூல விதை – பிரளய மென தனித்தனிக் களன் எனினும், கலையின் தீவிரப் பண்பின் வீரியம் விரவியிருக்கிறது.

    சொற்கள் கூர்மைப் பெற்று படிமமாவது சிறப்பெனினும், அது சாவியில்லாத இருண்ட அறைகள் ஆகி விடக் கூடாது எனத் தோன்றுகிறது.

    உங்கள் உணர்ச்சியறிதலை இன்னும் சற்று திறந்து வைக்கலாம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.