காடுகள் நாட்டின் செல்வங்கள்

காடுகள் நாட்டின் செல்வங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

என்ற குறளில் காடும் ஓர் அரணாக விளங்கியது. ஆனால் பிறகு காட்டை அழித்து நாடாக ஆக்கினர்.

கரிகாற் சோழன் காடு கெடுத்து நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கினான் என்று கூறப்படுகிறது.

குகன் இராமனிடம் கூறும்போது தான் காடுகளை அழித்து வழி செய்து தரவல்லவன் என்கிறான், “நெறியிடு நெறிவல்லேன்” என்பது அவன் கூற்று.

இங்ஙனம் காட்டையழிக்கும் நிலை அதன் உச்சத்திற்கே சென்றது. காடுகளே இல்லையெனுமளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டதால் அவை பொட்டல் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நிலப்பரப்பில் 17 சதவீதத்தில் மட்டுமே காடுகள் உள்ளன.

முதல் திட்டக்காலத்தில் காட்டுவளப் பெருக்கத்திற்குச் சுமார் 24.41 கோடி ரூபாயும் இரண்டாவது திட்டத்தில் 72 இலட்ச ரூபாயும், மூன்றாவது திட்ட காலத்தில் 75 இலட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டது. மூன்றாவது திட்ட முடிவில் 13.600 ஏக்கர் பரப்புள்ள பகுதியில் விறகு மரங்கள் வளர்க்கப்பட்டது.

காடு இல்லாவிட்டால் மேகத்தை குளிர வைத்து மழை பெய்விக்க முடியாது என்று கண்டனர். எனவே வன மகோத்துவம் என்ற பெயரில் ஜீலை மாதம் முதல் வாரத்தைக் கொண்டாடத் தொடங்கினர்.

ஆங்காங்கு மரங்களை வைத்து வளர்த்தனர். அங்ஙனம் செய்பவர்கட்கு ஆக்கம் தந்தனர். இதனால் காடு வளர்ப்பு அதிகப்பட்டது. இப்போது இந்தியாவின் மொத்தப்பரப்பில் 1:3 பாகம் காட்டுப் பகுதியாகக் கணக்கிடப்படுகிறது.

இப்போது பாலைவனத்தை சோலை வனமாகச் செய்ய அறிவியல் முறைகள் துணை செய்கின்றன. பெரிய பெரிய மரங்களையும் அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து தரையில் வைத்து நீர் விட்டால் நாளடைவில் அந்த மரங்கள் மேலும் பெருகி பெரிய காடாக மாறி விடலாம்.

காடுகள் நல்ல பல பொருட்களை நாட்டிற்குத் தருகின்றன.

காடுகளில்தான் தேன் மிகுதியாகச் சேகரிக்கப்படுகிறது.

நாகபுரி பீடபூமி பிரதேசத்தில் அரக்குப் பூச்சிகள் கூடுகட்டும் ஒருவகை மரங்களுள் ஒன்று உள்ளது.அவற்றிலிருந்து அரக்கு சேகரிக்கப்படுகிறது.

உலகத்திலேயே பெரும் ஊதியம் தருகின்ற யூகலிப்டஸ் மரங்கள் உதகமண்டலத்தில் வளர்க்கப்படுகின்றன. நறுமணப் பொருட்கள் செய்யப் பயன்படும் சந்தனம், அகில் போன்ற மரங்களும் கட்டட வேலை போன்றவற்றிற்குப் பயன்படும் தேக்கு மரங்களும்  நிறைந்துள்ளன.

மூங்கில் மரங்களும் தீக்குச்சி ஒட்டுப்பலகை காகிதம் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படும் மரங்களும் நம் நாட்டுக் காடுகளில் நிறைந்துள்ளன.

நம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இரப்பர் மரங்களை வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

உலகத்தில் காண்பதற்கு கருமையான காண்டாமிருகங்களும் பண்டைப் பெருமை மிக்க யானைகளும் வேங்கைப்புலிகளும் நம் நாட்டுக் காடுகளில் வாழ்கின்றன.

வண்ண வண்ண நிறமுள்ள பறவைகளும் காடுகளில் வாழ்கின்றன. மேலும் காடுகள் நில அரிப்பையும் தருகின்றன.

காடுகள் அழிவதைக் கண்ணுற்ற அரசினர் ஆக்க வேலையில் முனைந்தனர். காட்டுவிலங்குகளைக் காப்பதற்கான முயற்சிகள் 1930 ஆம் ஆண்டு முதல் தொடங்கினர்.

கோயம்புத்தூரில் காட்டிலாகா அதிகாரிகட்குப் பயிற்சியளிக்கும் பள்ளி ஒன்று தொடங்கப் பெற்று நல்ல முறையில் இயங்கி வருகிறது.

ஏரிக்கரைகளில் எங்கும் பனைமரங்கள் வளர்க்கப்படுவதுண்டு. அவை மண் அரிப்பைத் தடுக்கவும். வெள்ளத்தைக் கட்டுபடுத்த அவற்றை வெட்டி அடைக்கவும் மழை பெய்யச் செய்யவும் பயன்படுகின்றன. அங்ஙனமே எங்கும் மரங்களை வளர்க்க வேண்டும்.

அரசாங்கமும் சட்டங்களின் மூலம் மக்கள் காடுகளை அழிக்க வெட்டாமல் பாதுகாத்து வருகின்றது. பனை, வாழை, தென்னை போன்றவற்றில் எல்லா உறுப்புக்களும் பயன்படுவன.

எனவே அங்ஙனமான மரங்களை வளர்ப்பது நமக்கு மழையைத் தருவதோடு உணவுக்கும் பயன்படுகிறது. வாழ்க்கைக்குப் பல விதங்களில் இன்றியமையாது உதவும் காடுகள் நாட்டின் செல்வங்கள் என உணர்ந்து போற்றி வளர்க்க முற்படுவோம்.

S.ஆஷா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.