காதல் பாட்டு

குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்)

அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே. … (காதல்)

இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். … (காதல்)

நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம். … (காதல்)

தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். … (காதல்)

பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணே, மண்ணே, மண்ணே. … (காதல்)

புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே. … (காதல்)

உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. … (காதல்)

கூடல், கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். … (காதல்)

குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. … (காதல்)

– சுப்ரமணிய பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.