காதல் மணம் கவிதை

மழையின் துளிகள் மனதை
நனைக்க நனைக்க
காதல்மனைவி பக்கம் நிற்க நிற்க
காதல் நினைவுகள் மனதில்
உதிக்க உதிக்க
நினைக்க நினைக்க சுகமாய்
சுமக்க சுமக்க மனமோ
துள்ளிக் குதிக்கக் குதிக்க
இன்பம் இன்பம் பேரின்பம்!

வருவாள்
மேகமாய் பொழிவாள் அன்பை
பூமழையாய்!
தனிமை சந்திப்பில்
அச்சமே முதல்வரவு!
அவள் வருகையில்
இன்பமே நல்வரவு!

பலமுறை பார்த்தோம்
தினந்தினம் பேசினோம்
வெறுமையாக!
காதலுற்றதும்
ஒருமுறை முகம் பார்ப்பதில்
ஒருகோடி இன்பம் அதிசயம்!

சந்திப்பின் முடிவில்
இறுதியாக எனைத்
திரும்பி பார்க்கும் பார்வை
திரும்பத் திரும்ப எனை உறங்காமல்
போர்த்தும் போர்வை!

காதலில் சிலநாள் ஊடல் அதுவே
காதல் அன்பின் ஆழமான தேடல்!
அவள் பெயர் தீட்டுகையில்
எழுதுகோலும் புன்னகையைச்
சிந்தியது இன்றும்!

காதலி இன்று மனைவியாய் மணமேடையில்
எத்தனை நபர்க்கு வாய்க்கும்
இந்த வாழ்க்கைமேடையில்!

காதலிப்பதுண்டு பலபேர்
அவர்களே மணமக்களாக
தொடர்வது அரிதே!
தொடர்ந்தவர் சிலரே!

காதல்மனைவி என்னோடு
தினமும் இன்பம் கண்ணோடு
நூறு ஜென்மம் உன்னோடு
துன்பம் எல்லாம் பின்னோடு!

காதல் கரத்தாள்
எந்தன் அகத்தாள்
எத்தனை மகிழ்வு
என்றும் இல்லை பிரிவு!

சினம் கொள்ளாதீர்
உண்மை ஒன்றைச் சொல்கிறேன்!
காதல் மணத்தில்
காணும் தேனின்பமும் பேரின்பமும்
பிற மணங்களில் குறைவே…

வாழ்க்கை முழுமையும்
காதல்மனைவி துணை
அதற்கேது இணை…

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.