காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். அந்நாட்டு இளைஞர்கள் சாக்ரட்டீஸின் போதனைத்தேன் அருந்தி மகிழ்ந்தனர்; சீனாவின் கன்பூசியஸ் பின்னால் இளைஞர்கள் படையெடுத்தனர். அவர் அவர்களை வழிப்படுத்தினார்.

இப்படியே நாட்டுக்கோர் அறிஞர் காலங்காலமாக இளைஞர்களை வழிப்படுத்தினர். இளைஞர்களும் அவர்களைச் சிக்கெனப் பிடித்து, வழி நடந்தனர். புத்தனும், அசோகனும், ஏசுவும், நபியும் இளைஞர்களை வழி நடத்தினர்.

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் இந்திய இளைஞர்கள் அனைவரும் காந்தியடிகளின் வழி காட்டுதலுக்காக ஏங்கி நின்றனர். ஆனால், இன்றைய இளைஞர்கள் யார் வழி காட்டுதலில் செயல்படுகிறார்கள்? ஓரு மணித்துளி சிந்தித்துப் பாருங்கள்.

இவர்களுக்கு வழிகாட்டி திரைப்பட நடிகர்களும், நேர்மையற்ற இன்றைய அரசியல்வாதிகளும்தாம். இன்றைய இளைஞர்களுக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியோ, விவேகானந்தரைப் பற்றியோ, மகாத்மா காந்தியடிகள் பற்றியோ எதுவும் தெரியாது. இதற்கு யார் பொறுப்பு?

இன்றைய இளைஞர்கள் காந்தியடிகள் ஏதோ இராட்டை சுழற்றச் சொன்னார்; கதர் அணியச் சொன்னார். அவை எல்லாம் இன்றைய சுழ்நிலைக்குப் பொருந்துமா? என்று கேள்வி கேட்பார்கள்.

சுய தொழில் வளர்ச்சி, கிராமப்புற வளர்ச்சி, கைத் தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் அடையாளங்கள்தாம் இராட்டையும், கதருமே தவிர, அவையே காந்தியமல்ல.

ஆலைப் புரட்சிக்காக (Industrial Revolution) ஆலாய்ப் பறக்காமல், கிராமப்புற வளர்ச்சிக்கான (Rural Development) முயற்சிகளில் ஈடுபடுவது தான் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்பதன் அடையாளம்தாம் இராட்டையும், கதரும்.

எளிமையான பொருளாதாரச் சித்தாந்தத்தை எடுத்துரைத்த அண்ணல் காந்தியின் தொலை நோக்குப் பார்வை வியக்க வைக்கிறது. இளைஞர்களே! அதனால்தான் அவர் மகாத்மா!

காந்தியையும், காந்தியத்தையும் அவரது பெயரால் ஆட்சியில் அமர்ந்தவர்கள் உண்மையாகவே கடைப்பிடித்திருந்தால், இன்று இளைஞர்கள் காந்தி வழியைத் தொடர்ந்திருப்பார்கள்.

ஆனால், அவர்கள் காந்தி என்ற பெயரைத் தங்கள் அரசியல் வியாபாரத்திற்கு Trade Mark ஆக மட்டுமே பயன்படுத்தி விட்டனர். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் எளிமையான வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்ட முற்பட்டபோது, அதன் காரணம் பலருக்குப் புரியவில்லை.

புரிந்திருந்தால், இன்று நமது அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் படோடோப வாழ்க்கை வாழ்வார்களா? சுய நல அரசியல் நடத்துவார்களா?

இன்றைய இளைஞர்களின் வழி காட்டியான இக்கால அரசியல் தலைவர்களின் ஆடம்பரத்தையும், சுய நலத்தையும் இளைஞர்கள் பின்பற்றலாமா?

ஓர் அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார். அண்ணல் காந்தி. அதனால் தான் அவர் மகாத்மா!

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும், பெர்னாட்ஷாவும், மார்;டின் லூதர்கிங்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் காந்தியடிகளைப் போல் ஒரு மகானைப் பூவுலகம் பார்த்ததில்லை என்று உரத்துச் சொல்கிறார்கள்.

இளைஞர்களே,! இஃது ஒன்று போதாதா? நீங்கள் காந்தியடிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் நமது நாட்டுத் தேசப் பிதாவை விமர்சிக்கின்றனர்.

தங்கள் நாட்டு தேசப் பிதாவை விமர்சிக்கும் ஒரே ஒரு சமுதாயம் உலகத்திலேயே, நமது பாரத சமுதாயமாகத்தான் இருக்கும். பாகிஸ்தானில் ஜின்னாவை, அமெரிக்காவில் வாஷிங்டனை, அந்நாட்டினர் விமர்சனம் செய்வார்களா? அல்லது செய்யத்தான் முடியுமா? ஆனாலும் காந்தியும், காந்தியமும் பாதிக்கப்படவில்லை.

புத்தர், ஏசுநாதருக்குப் பிறகு ‘உலகை உய்விக்க வந்த உத்தமர்’ என்று அவரை உலகம் போற்றிப் புகழ்கிறது; காந்தி பிறந்த மண் என்று இந்தியாவை மரியாதையுடன் பார்க்கிறது.

வணிக சமுதாயத்தவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பெரிதும் பாதித்தது. அவர்களைக் கடவுளின் பிள்ளை (ஹரிஜன்) என்றார்.

இதனைக்கூடக் குறை சொல்பவர்கள் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் குரல் கொடுத்த பிறகுதான், அவர்களின் பிரச்சனை அகில இந்திய அளவில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

விவசாயத் தொழிலாளர் நிலைமையைப் பார்த்து மனம் பாதித்த காந்தியடிகள் தனது உடைப் பழக்கத்தையே மாற்றிக் கொண்டார் அவரது அணுகுமுறையில், உண்மையும், அடித்தள மக்களைப் புரிந்து கொள்ளும் மனப்போக்கும் காணப்பட்டன. அதனால் தான், அவர் மகாத்மா!

இன்றைய இளைஞர்களுள் பெரும்பான்மையோருக்கு காந்தி ஜெயந்தி, காந்தியடிகள் நினைவு நாள் ஆகிய இரண்டு தினங்களில் மட்டும்தாம் காந்தியைப் பற்றிய நினைவு வரும். காரணம், அன்று விடுமுறை நாள்; நடிகர்களும், நடிகைகளும் தொலைக்காட்சியில் பேட்டி தரும் நாள்; அரசியல்வாதிகள் அன்று அஞ்சலி செலுத்த வேண்டுமே!. என்பதற்காக அஞ்சலி செலுத்தும் நாள்; மீடியாக்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் நாள்.

இளைஞர்களே! ஓன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்; வாழ்க்கை வழி காட்டி ஒருவர் தேவை. அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் காந்தியடிகளே! என உங்களுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.

ஓரு முறையாவது நீங்கள் மகாத்மாவின் சத்திய சோதனையைப் படித்துப் பார்த்திருப்பீர்களா? இல்லை; ஏன்? இதற்கு யார் பொறுப்பு? அரசியல்வாதிகளும், ஆசிரியர்களும்தாம். எனக்குத் தெரியும்.

வழிகாட்டிகளான பல ஆசிரியர்களே, சத்திய சோதனையை ஒரு முறைகூடத் தங்கள் வாழ்நாளில் படித்துப் பார்த்ததே இல்லை. அரசும் இந்த அவல நிலையைக் கண்டு கொள்வதில்லை.

உலக பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காந்திய வாழ்வு!, காந்தியைப் பற்றி அந்நிய நாடுகளிலிருந்து வரும் செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளும் நிலைமை ஏற்படுமுன் இளைஞனே! அண்ணல் காந்தியை நெஞ்சில் நிறுத்து.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்